என்னுடைய 'லெமன் சாதம்' சிறுகதை 'சொல்வனம்' இணைய இதழில் பிரசுரமாகி உள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இணைப்பு:
லெமன் சாதம் – சொல்வனம் | இதழ் 325 | 25 ஆக 2024 (solvanam.com)
நுகர்தலும், பகிர்தலும்..!
என்னுடைய 'லெமன் சாதம்' சிறுகதை 'சொல்வனம்' இணைய இதழில் பிரசுரமாகி உள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இணைப்பு:
லெமன் சாதம் – சொல்வனம் | இதழ் 325 | 25 ஆக 2024 (solvanam.com)
"சார்.. நீங்க எனக்கு அண்ணே மாதிரி.. அதான்.. கேட்டு மட்டும் சொல்லுங்க!" என்றான் சரவணன்.
வேலைக்கு சேர்ந்த புதிதில் அவன் ஆங்கிலத்தில் பேசுவது அவ்வளவு அபத்தமாய், சிரிப்பாய் இருக்கும். நான் ஆரம்பத்தில் என்னைப் பற்றி எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. ஒரு நாள், தமிழில் நான் போன் பேசுவதைப் பார்த்து "சார் நீங்க தமிழா.. சொல்லவே இல்லை.. எந்த ஊர் சார் எனக்கேட்க, நான் சிரித்தப்படி, "உனக்கு எந்த ஊரு?" எனக்கேட்டேன். "மதுரை சார்..!" என்றான். "மதுரையா.. இல்ல பக்கமா.." எனக் கேட்க, "பக்கம் தான் சார்.. விருதுநகர்!" என்றான். "அதை ஏன் சொல்லல..?" "நிறைய பேருக்குத் தெரியாது சார்.. அதான் யார் கேட்டாலும் மதுரை ன்னு சொல்றது..! சொல்லுங்க சார் நீங்க ?" என விடாமல் வினவ, "உங்க பக்கத்து ஊருதான் பா.." என்றேன். "ராஜபாளயமா.. சிவகாசியா.." என்று அடுக்கினான். "மதுரைப்பா..!" என்று சிரித்தேன். அப்போதிருந்து நெருக்கமானான். வீட்டிற்கு ஒரு முறை சாப்பிட அழைத்திருந்தேன். என் வயதில் சரி பாதி அவனுக்கு. சற்று வசதியான குடும்பம். ஒரே பையன், வீட்டில் பெண் பார்ப்பதாக சொன்னான்.
ஆறு மாதமிருக்கும். ஒரு நாள் என் கேபினுக்குள் வந்தவன். "கொஞ்சம் பெர்சனல் மேட்டர் சார்..எனக்கு காயத்திரியை ரொம்ப பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணா இப்படி ஒரு பொண்ண பண்ணனும் சார். என்ன அழகு, அமைதி.. எனக்குப் பார்க்க, பார்க்க ரொம்ப பிடிச்சிருக்கு சார். ஆனா, அவங்க கிட்ட கேட்க பயமாயிருக்கு! அதான்.. நீங்க கேட்டு மட்டும் சொல்லுங்க. பிளீஸ்! மீதி நான் பார்த்துக்கிறேன்..! என் அண்ணே மாதிரி நீங்க.. " என்றான் கெஞ்சும் குரலில். எனக்கு கோபப் படுவதா, சிரிப்பதா எனப் புரியவில்லை. "சரி போ.. அப்புறம் பேசலாம்" என்றேன் எந்த சலனமும் இல்லாமல். என் கேபினிலிருந்து பார்த்தால் வெளியே அவர்கள் அமர்ந்திருப்பது தெரியும். காயத்திரியை ஐந்து ஆண்டுகளாகத் தெரியும். நல்ல பெண். தமிழ் பேசும் பெங்களூர் பெண். தான் உண்டு, வேலை உண்டு என இருப்பாள். அவள் மாடர்ன் உடை அணிந்து நான் பார்த்ததே இல்லை. எப்போதும் சுடிதார் தான். ஆடம்பரமில்லா, சாந்தமான அழகு. வேறு எதுவும் அவளைப் பற்றி எனக்குத் தெரியாது.
ஒரு வாரம் கடப்பதற்குள், என்னை அரி, அரி என அரித்துவிட்டான். ஒரு நாள் அவன் அம்மாவே என்னை போனில் தொடர்பு கொண்டு, அவன் அருமை, குடும்ப பெருமை என பேச ஆரம்பித்து, "நீங்க என் தம்பி மாதிரி, கொஞ்சம் கேட்டு மட்டும் சொல்லுங்க..என்ன ஆளுகன்னாலும் பரவாலா! அந்த பொண்ணு ஓகே சொன்னா மட்டும் தான் மேற்கொண்டு பேசலாம்.. இல்லன்னா விட்டுறலாம்.. ஒத்தை பையன், வெட்கம், பயம் வேற..!" என்றார்.
ஒரு பக்கம், இது மூலம் அந்தப் பெண்ணுக்கு ஏதாவது நல்லது நடந்தால்.. என எண்ணியபடி காயத்திரியை என் கேபினுக்கு அழைத்தேன். சிரித்தபடி, "கொஞ்சம் பெர்சனல் பேசலாமா காயத்திரி?" என்றேன். என்ன நினைத்தாளோ, "உங்களை என் அப்பா ஸ்தானத்தில் வைத்துள்ளேன்.. சொல்லுங்க சார்!" என்றாள். பெர்சனல் என்றாலே தப்பாய் நினைக்கும் காலம் இது என நினைத்தபடி, விஷயத்தை சொன்னேன். மிக சாதாரணமாய், "இதை சரவணனே என்னிடம் சொல்லலாமே..!" என்று எழுந்து கொண்டாள். எனக்கு என்னவோ போலாயிற்று. இதற்கு மேல் இதில் தலையிட வேண்டாம் என்று நினைத்து முடிக்கும் முன்பே, கேபினுள் நுழைந்தான் சரவணன்.
அவள் சொல்லியதை அப்படியே சொல்லி, இனிமேல் இதில் என்னை ஈடுப்படுத்தாதே என்று சற்று உறுதியாய் சொல்லிவிட்டேன். அவன் என்னை குழம்பியபடி பார்த்தவாறு வெளியேறினான்.
அன்றிரவு, Whatsapp இல்,"With all my courage, I have spoken (proposed) and She has invited to her home, this sunday #துணிவு 👍😉" என்று அனுப்பியிருந்தான்.
நான் "All the best! God bless both 👍👌" என்று அனுப்பினேன்.
ஞாயிறு அன்று என் மனம் போனை எதிர்ப்பார்திருந்தது. ஒரு குறுந்தகவல் கூட இல்லை. என் மனைவியிடம் இதைப் பற்றி சொல்லியிருக்கவில்லை. அடுத்த நாள் சரவணனைப் பார்க்க முடியவில்லை. பிற்பகலில் 'sick leave' விண்ணப்பித் திருந்தான். காயத்திரியைப் பார்க்க முடிந்தது. அவள் எப்போதும் போலிருந்தாள். "சரி பையன் ஊருக்குப் போயிருப்பான்" என நினைத்தாலும் மனதில் ஒரு உறுத்தலிருந்தது, என்ன பையன் ஒரு வார்த்தை கூட நம்மிடம் சொல்லவில்லை என்று.
வரிசையாய் விடுமுறை வர, ஒரு வாரம் கழித்து கண்ணில் தட்டுப் பட்டான். எல்லோர் முன்னும், "என்னப்பா sick leave எடுத்திருந்த.. உடம்புக்கு ஏதும் பிரச்சனையா ?" எனக் கேட்டேன். "வைரல் பீவர் சார்.. வேற ஒண்ணும் இல்ல.. அப்படியே ஊருக்குப் போய்ட்டு வந்துட்டேன்!" என்றான்.
மாலையில் கிளம்பும்போது கேபின் வந்தான். "உங்ககிட்டதான் ஆரம்பிச்சேன்.. உங்ககிட்டயே முடிச்சுடுறேன்! நா ப்ரபோஸ் பண்ணப்ப அந்த பொண்ணு ரொம்ப சாதாரணமா ஒரு நாள் வீட்டுக்கு வா, அப்புறம் பேசலாம்னு சொன்னா.. நா வீட்டுக்குப் போய் பார்த்தா ரொம்ப சின்ன வீடு, அப்பா இல்ல, அம்மா, அக்கா அப்புறம் ஒரு தம்பி. அவங்க அம்மாக்கு ஏதோ முதுகுல பிரச்சனையாம், படுத்த படுக்கை. அக்காக்கு இன்னும் கல்யாணம் ஆகலயாம்.. வேலைக்கும் போகாதாம்.. தம்பி டென்த் படிக்கிறான் போல. தண்ணி ஒரு கிளாஸ் கொடுத்தா.. பேச ஒண்ணும் இல்ல. நா கிளம்பி வந்துட்டேன் !" என்றான்.
எனக்குப் புரியவில்லை. "அப்புறம்?" என்றேன் ஆவலாய்.
போனைக் காட்டினான். அதில், whatsapp தகவல் பரிமாற்றம். Angel (காயத்திரி) என்றிருந்தது.
Me: "I'm Sorry! I don't think I can bear your weight on my shoulder!"
Angel: "No problem! You're one among a few in a row"
நான்அவனை ஏறிட்டேன். "உண்மையிலயே நல்ல பொண்ணு சார்.. எவ்வளோ அழகா, அவ நிலைமைய புரிய வச்சுட்டா.. என்னலாயும் போலியா நடிக்க முடியாது. அவ கஷ்டப் படுறது போதும். நானும் சேர்ந்து கஷ்டப் படல்லாம் ரெடியில்லா..!" என்றபடி கிளம்பினான்.
எனக்குப் புரிந்தது.
தீக்குள் விரலை வைத்தால், உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா..! என்பதெல்லாம் கவிதை.
தீ சுடும்..!! இதான் யதார்த்தம்.
ஆனேகல் - அத்திப்பள்ளி குறைவான பேருந்துகளே இயக்கப்படும். ஷேர் ஆட்டோ தான் ஒரே கதி. டீசல் ஆட்டோ, பதினொரு பேர் பயணிப்பர். முன் டிரைவர் சீட்டில் டிரைவர் இரு பக்கமும் இருவர், நடுவில் எதிரெதிர் ஆறு பேர், பின்னால் மூன்று பேர் என அடைத்துப் பயணிக்கும்.
எங்கள் அபார்ட்மெண்டு முன் காலையில் அவ்வளவு கூட்டம் நிற்கும். ஷேர் ஆட்டோ வந்தபடியே இருக்கும். இருபது ரூபாய் கட்டணம். பேருந்திலும் அதே கட்டணம் தான். சில ஆட்டோ டிரைவர்கள் பரிச்சியமாய்ப் போனார்கள்.
அன்று காலை, நான் ஆட்டோவிற்கு காத்திருக்கையில் என் எதிர் பிளாட் நபரும் வந்தார். நான் ஆச்சரியமாய் " என்ன காரில் போகவில்லையா?" எனக் கேட்க, "அப்பப்ப பழச மறக்கக் கூடாதுல.. " என சிரித்தபடி, " இல்லையில்ல.. என் மச்சான் வந்துருக்கான், ஏதோ இன்டர்வியூ அட்டென்ட் பண்ணனுமாம்.. அவன் அக்கா அதான் என் பொண்டாட்டி ஆர்டர் இன்னிக்கு ஒரு நாள் கார் அவனுக்கு கொடுங்க ன்னு..!" என பலமாய் சிரித்தார். சமீபமாக தான் அவரைத் தெரியும். ஐடி யில் நல்ல வேலையில் இருக்கிறார் எனத் தெரிந்து கொண்டேன்.
ஆட்டோ வரவும், பெண்கள் நடுவில் அமர, நானும், அவரும் டிரைவருக்கு இரு புறமும் அமர்ந்து கொண்டோம். தெரிந்த டிரைவர் தான். என்னைப் பார்த்து சிரித்தபடி, போனில் பேசிக்கொண்டே ஓட்டினான். என்ன பிரச்சனை எனத் தெரியவில்லை. ஒவ்வொரு போனாய் பேசி பணம் கேட்டு கொண்டிருந்தான். போனை டாஷ் போர்ட் டில் வைத்துக் கொண்டு காதில் ஹெட் செட் அணிந்து பேசியபடி வந்தான். இடையிடயே Darling என வந்த அழைப்புகளை நிராகரித்தபடியே வந்தான். பத்து பேரிடமாவது பேசியிருப்பான். முகம் வாட்டமாயிருந்தது. ஒரு இடத்தில் பயணிகளை இறக்கி விடுகையில் சற்று நின்று, Bro-in-law என்ற பெயரை அழைத்தான். எடுக்கவே இல்லை. வண்டி நகர்ந்து போகவும் மீண்டும் Darling அழைத்தது. எனக்கு சிரிப்பாய் வந்தது. இம்முறை ஸ்பீக்கரில் போட்டு விட்டான். " என்ன ஆச்சு.. ஸ்கூல் பீஸ் கட்ட போறயா.. ஆட்டோ ஓட்ட சொல்லி கொடுக்கப் போறீயா உன் புள்ளைக்கு.. " எனக் கத்த, Darling என்பது அவன் மனைவி என புரிந்து கொண்டேன். அந்தப் பக்கம் என் எதிர் வீட்டு நண்பர் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டார்.
அதற்குள் Bro-in-law call waiting என வர, Darling பேச்சை முறித்துக் கொண்டான். ஸ்பீக்கரில், "காச தவிர வேறு எதுனா பேசுறதுனா பேசு.." என ஆரம்பிக்க இவன் ஒன்றும் பேசாமல் கட் செய்து கண் கலங்கினான். மீண்டும் Darling அழைக்க, ஸ்பீக்கரில் "தூ.. ஒரு ஆறாயிரம் ஸ்கூல் பீஸ் கட்ட முடியல.. என் அண்ணன்ட்ட பிச்சை எடுக்கப் போனியா.. அவன் எனக்கு ஃபோன் பண்ணி கேவலமா பேசுறான்.." என பேசும்போதே ஒரு பிஞ்சு குரல், "டாடி, ஸ்கூல் வேணாம்.. நீ மம்மி ஃபைட் பண்ணாத !" என சொல்லவும் பாவமாய் போனது எனக்கு. அதற்குள் அத்திப்பள்ளி வந்திருந்தது.
இறங்கிய அனைவரும் அவரவர் பணத்தை நீட்ட, அவன் சில்லறை கொடுக்கவும் வாங்கவுமாய் இருந்தான். நான் கொடுக்கும்போது அவன் முகத்தைப் பார்த்தேன். கண்ணீர் முட்டிக் கொண்டிருந்தது. என் எதிர்வீட்டு நண்பர் " GPay இருக்கா..?" என்றார் அவனிடம். நான், "நா கொடுக்கிறேன் இருபது ரூபாய்க்கு எதுக்கு ?" என்றபடி பையை திறக்க எத்தனித்தேன். அவரோ விடாமல் "..சொல்லுப்பா GPay நம்பரை!" என்றபடி போனை நீட்டிக் கொண்டிருந்தார். அவன் சொல்ல, சொல்ல, "மஞ்சு வா..?" எனககேட்டார். அவன் ஆம் என்று சொல்லி முடிக்கவும், அவர் பணம் செலுத்தியதற்கான குறுஞ்செய்தி ஒலித்தது. அவன் பிரமிப்பாய் அவரை ஏறெடுத்தான். "சார்.. என்று போனைக் காட்ட அதில் 6020 என்றிருந்தது. நான் அவரை திகைத்துப் பார்க்க, அவர் அவனிடம், "எப்போ முடியுமோ அப்ப கொடுத்தா பரவாயில்ல.. ஸ்கூல் பீஸ் ஐ முதல்ல கட்டு.. ஆட்டோக்காரன் பையனை நல்லா படிக்க வை.. எங்கப்பா மாதிரி..!" என்றார். அவன் சடாரென அவர் காலைத் தொட்டான். அவர் அவனைத் தூக்கியபடி, "எங்கப்பா ஒரு ஆட்டோ காரர் தான்.. என்னை நல்லா படிக்க வச்சாரூப்பா.. அதெல்லாம் எதுக்கு உனக்கு.. சார் வாங்க டைம் ஆகுது.." என்றபடி "உன் மச்சானால ஹெல்ப் பண்ண முடியலானாலும், என் மச்சான் மூலமா உனக்கு ஹெல்ப் கிடைச்சிருச்சு..!" என்று சிரித்தபடி என்னுடன் பேருந்தைப் பிடிக்க ஓடி வந்தார்.
மஞ்சுக்கு ஒன்றும் புரியவில்லை என்பதை திரும்பிப் பார்த்தபோது புரிந்துக் கொண்டேன்.