Friday, October 15, 2021

முருகேசு இல்ல முருகேஷ்..!

கொ.மு 2019. அதாவது, கொரானாவுக்கு முந்தைய கால கட்டம். நான் பேருந்தில் அலுவலகம் பயணிக்கையில், புதிதாக ஒரு பெரியவர் தென்பட ஆரம்பித்தார். வழக்கமாய் நான் அமரும் இருக்கையில் காண நேர்ந்தது. அதிகாலை பயணம் என்பதால், சொற்ப பயணிகளே இருப்பர். அதனால், அனைவருமே பரிச்சயம்.

இரண்டாவது நாளே, குட் மார்னிங்க் பிரதர் என்றார். அவருக்கு எப்படியும் வயது, 70க்கு மேலிருக்கும். முன் வழுக்கை, பொக்கை வாய், ஒரு பல் துருத்திக்கொண்டிருந்தது. குள்ளமான, மெலிந்த தேகம். முகம் சவரம் செய்யப்பட்டு, பென்சில் மீசை வைத்திருந்தார். மடியில், பைபிள் திறந்திருந்தது. நானும், குட் மார்னிங்க் சார் என்றேன். "சாரெல்லாம் வேணாம்..பிரதர்ன்னே சொல்லுங்க.." என்று சிரித்தார். எனக்கு சிரிப்பாய் வந்தது. அப்போதே நினைத்துக்கொண்டேன், இன்றைக்கு இதை என் மனைவியிடம் பகிரும்போது என்ன கலாய் கலாய்க்கப்போகிறாள் என்று. தினமும், இரவு உணவின்போது நானும், என் பையனும் எங்கள் தினசரி அனுபவங்களை வீட்டில் பகிர்ந்துகொள்வதுண்டு.

அவர், ஏதோ ஒரு பைபிள் வசனத்தை சொல்லி நாட்டு நடப்பை ஒப்பிட்டார். நான் அவ்வளவாய் கவனிக்காது போலிருந்தேன். எனக்கு முன்னே இறங்கிக்கொண்டார். இறங்குகையில், 'வர்றேன் பிரதர்.." என்றார். ஒரு டீ சர்ட், ஜீன்ஸ் அணிந்திருந்தார். மிகப்பழையதாயிருந்தது. அவர் பாதத்தை விட பெரிய அளவிலான செருப்பணிந்திருந்தார். அதனால், நடை சற்று மாறுதலாயிருந்தது. தோளில், ஒரு பக்கமாய் சாயம் ஏறிப்போன லேப்டாப் பை அணிந்திருந்தார். அன்றிரவு, நினைத்தது போலவே நடந்தது. என் மனைவியும், பையனும் விழுந்து, விழுந்து சிரித்தார்கள். "யார் இதில அண்ணே..யாரு தம்பி.." என்று கேட்க என் பையனுக்கு புரையேறிப்போனது.


அடுத்த நாளும், அதே போல் பைபிள் படித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். நான் ஏறியவுடன், குட் மார்னிங்க் பிரதர் என்று சிரித்தபடி பைபிளை மூடி பையினுள் வைத்தார். பையினுள், பைபிளும், ஒரு டிபன் பாக்ஸ் மட்டுமே இருந்ததை கவனித்தேன். என்னைப்பற்றி விசாரித்தார். நான் கேட்காமலேயே அவரைப்பற்றி சொன்னார். அவருக்கு மூன்று பையன்கள், எல்லோருக்கும் திருமணமாகி விட்டது. இரண்டு பேரன்கள் வேறு என்றார். அன்றைக்கு அவர் இறங்கி செல்கையில் பஸ் பாசை இருக்கையிலேயே விட்டுவிட்டுப்போய் விட்டார். நானும் கவனிக்கவில்லை அடுத்த நிறுத்தம் வரும் வரை. வேறொருவர் உட்காருகையில் கவனித்து, என்னிடம் கேட்க நான் வாங்கிப்பார்த்தேன். பஸ்பாஸ் அடையாள அட்டையில் புகைப்படத்தில் நம் பிரதர்! பெயரை கவனித்தேன். 'முருகேசு' என்று வயது 72, அல்சூர், பெங்களூர் என விலாசம் எழுதப்பட்டிருந்தது. அடடா..பஸ் பாஸ் இல்லாமல், என்ன சிரமப்படுகிறாரோ என வருத்தமாயிருந்தது. 

அன்றிரவு, அவர் புகைப்படத்தைப்பார்த்து விட்டு இன்னும் சிரிக்க ஆரம்பித்தாள் என் மனைவி. அவள்தான் கவனித்தாள், பாசின் பின்புறம் மொபைல் நம்பர் எழுதப்பட்டிருந்தது. நல்ல வேளை, என எண்ணிக்கொண்டே டயல் செய்தேன். 'முருகேஷ் ஸ்பீக்கிங்க்' என்றார் ஸ்டைலாக. எனக்கு சிரிப்பாய் வந்தது. விபரம் சொன்னவுடன், "கடவுள் இருக்காருப்பா..ஆயிர ரூபா இந்த மாசம் அவுட்டானு நினைச்சேன்.." என்றார். நான், "சார்..முருகேசுன்னு போட்டிருக்கு..தமிழ்தானா நீங்க.." என்றேன். "டூ மிஸ்டேக்ஸ்..ஒண்ணு..முருகேசு இல்ல..முருகேஷ்" என கேஷ்-ஐ அழுத்தினார். "இன்னொண்ணு..சார் வேணாம்..பிரதர்னு சொன்னா போதும்..மரியாதையெல்லாம் வேணாம்" என்று சத்தமாக சிரித்தார். "சாப்பாடு ஆச்சா.." என்றவரிடம், "ஆச்சு..சார்..பிரதர்..உங்களது.." என்றேன் சிரித்தபடி. "ஆங்க்..ஆச்சு..என்ன சாப்பாடு தெரியுமா..வொயிட் ரைஸ்...பிக்கிள்..காவிரி வாட்டர்..பிரமாதம்..இன்னிக்கு சாப்பாடு" என சிலாகித்தார். எனக்கு அப்போதுதான் அவர் வறுமை புரிந்தது. 


மறுநாள், என் நிறுத்ததில் ஏறும்போது அவர் இருக்கையில் பைபிள் படிக்காமல் பதட்டமாய் இருந்தார். பையிலிருந்து பாசை எடுப்பதற்குள் "ஜல்திப்பா.." என வாங்கி கண்டக்டரிடம் காண்பித்தார். "அஞ்சு ரூபா டிக்கட் வாங்க வச்சுட்டான்பா..பாஸ் வந்துரும்..காட்டிறேன்னு..சொல்றேன்..ஸ்டேஜ் கணக்கு டிக்கெட் எடு..இல்லன்னா இறங்குன்ங்கிறான்..இதில மிரட்டாறான்..இந்த ஸ்டாப்பில் காட்டிலனா, திரும்ப டிக்கெட் வாங்குனுங்கிறான்..!" என்று சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டார். அவர் வேலையைப்பற்றிக்கேட்டேன். ஏதோ பர்னிச்சர் கொடொனில் பணிபுரிவதாக கூறினார். காலையில் சாப்பிடமாட்டாராம். 'டயட்' என்று சிரித்தார். மதியம் ஒரு வேளை டிபன் பாக்ஸ் சாப்பாடு, கொடொனில் இரு வேளை டீ கொடுப்பார்களாம். இரவு வீடு போய் சாப்பாடு அவ்வளவுதான். 

என்ன வேலை என ஒரு முறை கேட்டதற்கு, " என்னைத்தாண்டி எதுவும் உள்ளே வராது..வெளியெயும் போகாதுப்பா.." என செக்யூரிட்டி என்பதை நகைச்சுவையாய்க்குறிப்பிட்டார். 

தினசரி ஒரு பைபிள் வசனம், நாட்டு நடப்பு பற்றி பேசுவார். நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. அவரும் ஏதாவது சொல்லிவிட்டு சிரிப்பாய் சிரிப்பார். தினமும் முந்தைய இரவு சாப்பாட்டைப்பற்றி கேட்பார். அவரும் சொல்லுவார். பெரும்பாலும், தினமும் ஒரே சாப்பாட்டைத்தான் வர்ணித்து சொல்லுவார். கேட்பதற்கே பாவமாய் இருக்கும். 

சரியாய் லாக்டவுன் தொடங்குமுன், ஒரு நாள் என்னிடம் " ஒரு முன்னூறு ரூபா கிடைக்குமா பிரதர்..வீட்டம்மாக்கு முடியல.." என்றார். அன்றைக்கு என் பர்சிலும் பணம் இல்லை. சொன்னால் தப்பாய் எடுத்துக்கொள்வாரோ என எண்ணி, அவர் நிறுத்ததிலேயே இறங்கி ஏடிஎம் அழைத்து சென்றேன். 500 ரூபாய் தாள்தான் ஏடிஎமில் வந்தது. பரவாயில்லை, வைத்துக்கொள்ளுங்கள் என்றேன். "ஓகே பிரதர்..ஜஸ்ட் டூ டேஸ்..ரிடர்ன் பண்ணிடுறேன்.." என்றார்.


அடுத்த நாள் முதல் பேருந்தில் தட்டுப்படவில்லை. சரி, வேற டைமில் போகிறார் போல நினைத்துக்கொண்டேன். எனக்கு அவர் மனைவியின் உடல் நிலை குறித்து கவலையாயிருந்தது. போன் பண்ணலாம் என நினைத்தால், எங்கே பணம் கேட்க போன் பண்ணுவதாய் தப்பாய் எடுத்துக்கொள்வாரோ என நினைத்துக்கொண்டேன். மூன்று நாட்களாக காணோம். என் மனைவியிடம் பணம் கொடுத்ததை சொல்லாமல், " நம்ம முருகேஷ் பிரதர..காணோம்..மூணு நாளா.." என்றேன். உடம்பு முடியாம இருக்கும்..விடுங்க..என சாதரணமாய் சொன்னாள். சனி, ஞாயிறும் போய் திங்கள் கிழமையும் வரவில்லை. போன் செய்து பார்த்தேன். ஸ்விட்ச் ஆப் என வந்தது. என்னவாயிற்று என கவலையாயிருந்தது. அப்போதுதான், கொரானொ ஆரம்பித்திருந்தது.

அடுத்த நாளும் பேருந்தில் அவர் வரவில்லை. அவர் வழக்கமாய் இறங்கும் நிறுத்ததில் சட்டென ஏதோ தோன்ற இறங்கிவிட்டேன். அவர் சொன்ன அடையாளத்தை வைத்து அந்த பர்னிச்சர் கொடோனை கண்டுகொண்டேன். அங்கிருந்த செக்யூரிட்டி என்னைப்பார்த்ததும், "லீவு சார்..திறக்கமாட்டாங்க.." என்றார். "இல்லீங்க..இங்க முருகேசுன்னு ஒருத்தர்.." என்றதும் அவர் சிரித்தபடி, "நீங்க.." என்றார். "பஸ்ல பழக்கம்..ஒரு வாரமா வர்றல..அதான் " என்றேன். "காசு ஏதும் வாங்குனாருங்களா.." என்றார். "இல்லீங்க..ஏன்.." என்றேன்.

"அவரு ரொம்ப வருஷமா இங்கின வேலை செய்றாருங்க..ஓனர் அப்பா இருந்தப்ப..அவருதான் இங்க எல்லாம்..பெரியவரு போயிட்டாரு..பையன் வந்ததும்..வயசாயிடுச்சுன்னு போ சொல்லிட்டான்..இவருதான்..விடாம வந்துனுருக்காரு..டெய்லி காத்தால வந்துடுவாரு..நாங்க செக்யூரிட்டி இருந்தாலும், அவருதான் செக்யூரிட்டி மாதிரி ஆக்டிங்க் கொடுப்பாரு..அவரப்பத்தி எங்களுக்குத்தெரியும். அதனால, பேசாம வுட்றுவோம். எங்களோட அவருக்கு டீ மட்டும் கொடுப்பாங்க..பாவம் சார், பாதி டீ குடிச்சிட்டு..மீதிய வச்சு மதியம் சோத்துல ஊத்தி சாப்பிடுவாரு..ஆரம்பத்துல கேட்டதுக்கு..கீ (நெய்) ரைஸ் மாதிரி, டீ ரைஸ் ன்னுறா.. அவரு பசங்க யாரும் பாக்கிறதுல்ல..பேரன் மட்டும் மாசம் ஆயிர ரூபா கொடுக்கிறான் போல..அதுல, லூசு மனுஷன் பஸ் பாஸ் எடுத்துடுவாரு..அவரு வீட்டம்மாவும் வயசானது..அது ஏதோ வூட்டு வேல செஞ்சு..இவருக்கும் சோறு போடுது.. சர்ச்சுல எப்பாச்சும், ஏதோ கொஞ்சம் காசு, பழைய துணி கொடுப்பங்க போல..ரொம்ப எதுனா கஷ்டம்னாதா..எதும் காசு கேப்பாரு..நூறு..இரு நூறு..அவருக்கும் தெரியும்..நாங்க எங்கின போவோம்.." என்றவர். "அதான் கேட்டேன்..உங்ககிட்ட எதுனா காசு வாங்குனார்ரா..ஏன்னா, யாரும் அவரத்தேடி வந்ததில்ல.." என்றார்.

எனக்குப் பரிதாபமாய்ப்போனது. சைக்கிளில் ஒரு ஆள் பிளாஸ்கில் டீ கொண்டு வந்தார். ஒரு கப்பில் டீ ஊற்றிக்கொடுத்து கொரனோப்பற்றி புலம்ப ஆரம்பித்தார். "கட்டிட வேலைகாரங்கல்லாம் யாரும் இல்லப்பா..வியாபாரமே இல்லை.." என்றவர், "நம்ம முருகேசும் வரலையா..விடாம வந்துருவாரேப்பா..டெய்லி.." என்றார். வாங்கிய டீயை அந்த செக்யூரிட்டி என்னிடம் நீட்டினார். மறுக்காமல், வாங்கிக்கொண்டேன். அவரும் ஒரு டீ வாங்கிக்கொண்டார். அங்கிருந்த நோட்டில், எழுதப்போன டீக்காரர், "ஒன்னா..ரெண்டா..எழுத.." எனக்கேட்டார். செக்யூரிட்டி, "ஒன்னுனெ எழுது..நம்ம மேனேஜர்..உஷாரு..நீ ஒருத்தந்தான..ரெண்டு டீ கணக்கு எழுதியிருக்குன்னு கேப்பான்.." என்று சொல்லியவர் என் முன்னர் சொன்னதற்காக சங்கடப்பட்டார். நான் கவனிக்காது போலிருந்து விட்டு, கிளம்புகையில் ஐம்பது ரூபாய் கொடுத்தேன். வாங்க மறுத்தவரிடம், கையில் திணித்துவிட்டு கிளம்பினேன்.


அதன்பின், கொரானோ கோரத்தாண்டவம் ஆடத்தொடங்கியது. நானும் ஊரில் போய் மாட்டிக்கொண்டேன். அவ்வப்போது நம் முருகேசுவை நினைத்துக்கொள்வேன். ஒரு முறை போனும் முயற்சி செய்துப்பார்த்தேன். ஸ்விட்ச் ஆப் என்றே வந்தது. கவலையாயிருந்தது. என் மனைவிதான், போன் ரீசார்ஜ் பண்ணியிருக்க மாட்டாருங்க..என சமாதானம் செய்தாள்.


நாட்கள் ஓடிப்போனது. கொரானோ நிலைமை கட்டுக்குள் வந்து பேருந்து இயங்க ஆரம்பித்ததும் மிக எதிர்ப்பார்த்தேன், முருகேசைப்பார்த்து விடலாம் என்று. ஆனால், முருகேசுவை மட்டும் காணவேயில்லை. மீண்டும் ஒரு முறை கொடொனுக்குப்போய் பார்த்தேன். பழைய செக்யூரிட்டியெல்லாம் இல்லை. புதிதாயிருந்தவருக்கு முருகேசைப்பற்றித்தெரியவில்லை. பழைய செக்யூரிட்டிப்பற்றிக் கேட்டேன். "அவர்லாம் கொரனால போயிட்டாரு சார்.." என்றார் டீ குடித்தப்படி. 


வீட்டில் முருகேசுப்பற்றிப் பேசுவதை தவிர்க்க ஆரம்பித்தோம். ஆனால், மறக்க இயலவில்லை யாருக்கும்.


நேற்று, வாழை இலை வாங்குவதற்காக அலுவலகம் விட்டு நேரே அல்சூர் சென்றேன். ஒவ்வொரு அமாவசைக்கும் வாழை இலை வாங்குவதற்காக அல்சூர் செல்வேன். வாழை இலை பெங்களூரில் கிடைப்பது அரிது. அல்சூர் மார்க்கெட் நெரிசலில்..எதிரே..நேருக்கு நேர் 'முருகேஷ்'! எனக்கு அப்படியொரு குதூகலம். வினாடியில் ஆயிரத்தில் ஒரு பகுதி...என்னைப்பார்த்த முருகேஷ் சடாரென்று பார்வையைத்திருப்பிக்கொண்டு, தாடையிலிருந்த மாஸ்க்கை எடுத்து முகத்தில் இழுத்துக்கொண்டார். அவர் பின்னாலேயே ஒரு வயதான பெண்மணி..அவர் வீட்டம்மாவாயிருக்கும் என நினைக்கிறேன். அவர் என்னைத்தவிர்க்கிறார் என நன்றாகத்தெரிந்தது. கொடுத்தப் பணம் திருப்பி கேட்பேனோ எனத்தவிர்த்தாரோ..எனத்தெரியவில்லை. நான் சிலையாய் நின்றேன் கூட்ட நெரிசலில் அவர் போவதைப்பார்த்தபடி. கவனிக்காமல் போய்விட்டாரோ..என என்னை சமாதனம் செய்தபடியிருக்கையில், சற்று தூரம் சென்றவர், திரும்பிப்பார்த்ததைக் கவனித்தேன். மீண்டும் சடாரென்று, மாஸ்க்கை இழுத்துவிட்டபடி போய்விட்டார்.


ஒரு பக்கம் அதிர்ச்சியும், வருத்தமும் இருந்தாலும் அவர் இருப்பது, அதுவும் அவர் வீட்டம்மாவும் இருப்பது பெரு மகிழ்ச்சியாயிருந்தது. என் மனைவியிடமும், பையனிடமும் வேறு மாதிரி சொன்னேன். "நம்ம பிரதர் முருகேஷ், வீட்டம்மாவோட ஷாப்பிங்க் போறாருப்போல..நான் பஸ்ல இருந்தேன்..ஆனா, நல்லா பார்த்தேன்..நல்லா இருக்காரு.." என்றேன். "என்ன நீங்க..இறங்கி ஓடிப்போய்ப் பாத்துருக்கலாம்ல..எவ்வளவு சந்தோஷப்பட்டுறுப்பாரு...போங்க நீங்க.." என்றாள்.


அடுத்த அமாவசைக்கு வாழை இலை மடிவாளாவில் வாங்கிக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டேன். என்ன சற்று தூரம். பரவாயில்லை, முருகேஷை சங்கடப்படுத்த விரும்பவில்லை இன்னொரு முறை.


============================

இந்த கதை "பறம்பு சிறுகதைப் போட்டியில்' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.