Saturday, July 3, 2021

முதுமை..இனிமை..!

 முதுமை..இனிமை..!


நாம் அடிக்கடி பார்க்க நேரிடுவதுண்டு, நேரிலும் சரி, வலைதளங்களிலும் சரி..சில முதியோர்கள் தள்ளாத வயதிலும் உழைப்பதை. அவர்களைப் பார்ப்பதற்கே பாவமாக இருக்கும். குறிப்பாக அவர்கள் பிள்ளைகள் மீது கடும் கோபமும் வருவதுண்டு. என்ன பிள்ளைகள் இந்த வயதிலும் பெற்றோரை இப்படி உழைக்க விடுகின்றனரே என வருத்தப்படுவதும் உண்டு.


சமீபத்தில், கொரனோ சற்று அடங்கிய போது அலுவலகம் செல்ல நேரிட்டது. தளர்வுகள் அறிவித்தும் முன்னர் போல் கூட்டம் இல்லை. பேருந்துகள் பெரும்பாலும் காலியாகவே இருந்தன. அதிலும், காலையில் சொற்ப மனிதர்களை மட்டுமே காண நேரிட்டது. பெரும்பாலும், காலையில் சிறு வியாபாரிகள் தங்கள் சரக்குகளை ஏற்றி செல்ல பயன்படுத்தினர். தலை சுமை வியாபார பெண்கள் அதிகம். கீரை, காய், பழம் என தங்கள் கூடைகளை பொறுமையாக நிறுத்தங்களில் ஏற்றி, இறக்கி வந்தனர். மற்ற சமயங்களில் நடவாத ஒன்று இது. ஓட்டுனரும், நடத்துனரும் யாராவது ஏறினால் சரி என்ற மன நிலையில் இருந்தனர்.


தொடர்ந்து மூன்று நாட்களாக, காலையில் என் நிறுத்ததில் ஒரு பாட்டி தென்பட ஆரம்பித்தார். ஒரு கூடை அதில் வாழைப்பழம் சீப், சீப்பாய். ஒரு பெரிய பையில் கீரை கட்டுகள் என நான் ஏறும் பேருந்தில் வர ஆரம்ப்பித்தார். ஏறும் போது, நடத்துனர் கூடையைத்தூக்கவும், பையைத்தூக்கவும் உதவினார். இறங்குகையில், நான் அவருக்கு உதவ ஆரம்பித்தேன். நிறுத்தத்தில்  இறங்கி தலையில் கூடையையும், கையில் பையையும் தூக்கிக்கொண்டு தள்ளாடியவாறு நடந்து போவார். அவரைப்பார்க்கையில் அவ்வளவு பாவமாயிருந்தது.


நேற்று பேருந்து வர தாமதமானது. முதல் நாளே நடத்துனர் தெரிவித்தார். "மார்னிங்க் சர்வீஸ் வசூலில்லை..சர்வீஸ் கம்மி பண்ணுவாங்க..சார்" என்றார். நானும், பாட்டியும் நின்றிருந்தோம். பாட்டி என்னிடம் மணி கேட்டவாறு, "லேட்டாயிருச்சு போல..வண்டி போயிருக்குமோ.." என்றார். நான் அவரிடம், "இல்லம்மா..பஸ்சு கம்மி பண்ணிருப்பாங்க..ஆளில்ல..அவங்களுக்கும் வசூல் ஆகணும்ல.. நீங்களும், நானும் கரெக்ட் டயத்துக்குதான் வந்திருக்கோம்.." என்றேன். அவர் சிரித்தபடி, "டைமுக்கு வியாபாரம் பண்ணி பழகிட்டு, கொஞ்சம் லேட்டானாலே பதறுது..நேரம் ஆச்சுனா வாடிக்கை போயிடுது..வெயிலு வேற ஏறிடுது.." என்றார்.


"ஏம்மா..பேசாம..ஒரு இடத்துல உக்காந்து வியாபாரம் பண்ணலாம்ல..பிள்ளைக என்ன செய்றாங்க..இப்படி..இந்த வயசுல கஷ்டப்படுறீங்களே.." என்று என் ஆதங்கத்தை கொட்டிவிட்டேன். என்னை உற்றுப்பார்த்தார். சிரித்துக்கொண்டே, "வயசானவங்க..வியாபாரம் பண்ணாலே ஏதோ கஷ்டப்படுறதா நினைச்சுக்கிறாங்க..அது யாரோ..ஒரு சில பேரு இருக்கலாம்..நிறைய பேரு..நாங்க வேணும்னுதான் வேலைப் பாக்குறோம்..பிடிக்காம.கஷ்டப்பட்டெல்லாம் பண்ணலப்பா..எனக்கெல்லாம்..வேலைப்பாக்கலன்னா, உசுரேப்போயிடும்!" "இன்னும் சிலபேரு..எங்ககிட்ட வாங்கிட்டு சில்லறை வச்சுக்க சொல்லுவாங்க..அது அவுக பெரிய மனசு..ஆனா, அதெல்லாம் பிடிக்காது எனக்கு..வியாபாரம் பண்றோம்..பொருளுக்கு காசு..அவ்வளவுதான்"..எனக்கு என்னவோ போலிருந்தது. நானே நிறைய பேரிடம் இப்படி என் பெருந்தன்மையை பறை சாற்றியிருக்கிறேன்.

"வாழ்க்கையில சோம்பலாயிடக்கூடாதுப்பா..அதே மாதிரி..யாராவது நமக்கு செய்ய மாட்டாங்களான்னும் நினைக்கப்படாது..அதுக்கு செத்துடலாம்" என்று முற்றிலும் புதிய பரிமாணத்தை விளங்க வைத்தார்.

பேருந்து வந்தது!