Friday, July 17, 2020

அண்ணன், தம்பிகள்

இந்த கொரனொ கால கட்டத்தில், பழைய நண்பர்களுடன் தொடர்பு கிடைப்பது ஒரு நல்ல விஷயம். எப்படியாவது, யார் மூலமாகவோ பழைய தொடர்புகள் புதுப்பிக்கப்படுகிறது. இப்போதெல்லாம், எல்லோருக்குமே பழைய கதைகள் பேச, நினைவுகளை பகிர என நேரம் உள்ளது.

அப்படித்தான், எனது, பழைய நண்பன், கல்லூரித்தோழனின் தொடர்பும் கிடைத்தது. இருவருமே மிகுந்த உற்சாகமடைந்தோம், பேச, பேச குடும்பம், வேலை, ஆசிரியர்கள் என. அப்போதுதான், அவன் அப்பாவின் நினைவு வந்தது. அவர்கள் நல்ல வசதியான குடும்பம். ஆனால், வீட்டிலோ ஒரு வாகனமும் கிடையாது. அவர்கள் வசதிக்கு காரே வைத்துக்கொள்ளலாம். அவர் எப்போதும் ஆட்டோவில்தான் போய் வருவார். பின்னர், கல்லூரி வந்தபின் என் நண்பனும் சரி, அவன் அண்ணனுக்கும் இரு சக்கர வாகனம் ஏதுமில்லை. ஆனால், என் நண்பனுக்கோ கொள்ளைப் பிரியம் இரு சக்கர வாகனங்கள் மீது. அவன் அண்ணன் எத்தனையோ முறை அவன் அப்பாவிடம் சண்டையெல்லாம் போட்டதாய் சொல்லுவான். அவன் அப்பா முடியவே முடியாது என்பாராம். ஆனால், மகன்கள் வண்டி ஓட்டுவதைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டாராம். சொல்லப்போனால், சமயங்களில் தெருவில் மகன்கள் யார் வண்டியாவது ஓட்டி செல்கையில் ரசிப்பாராம். நாங்கள், அவரை சரியான கஞ்சன் என நினைத்துக்கொள்வோம்.

எதேச்சையாய் அவன் அப்பாப் பற்றி பேசுகையில், இந்த வண்டி விஷயமெல்லாம் நினைவில் வந்தது. நான் கேட்கவும், சிரித்துக்கொண்டே சொன்னான். "அவர் கடைசி வரை வண்டியே வாங்கிக்கொள்ளவில்லை, எங்களையும் வாங்கிக்கொள்ள அனுமதிக்கவேயில்லை. இதனால், என் அண்ணனுக்கும் அவருக்கும் பெரிய சண்டையே வந்து அவன் தனிக்குடித்தனம் போய்விட்டான். அப்பாவும் சமீபத்தில் இறந்துப்போனார்."

"சாவின்போதுதான் எங்கள் அத்தை, அப்பாவின் தங்கையை நீண்ட வருடங்களுக்குப் பிறகு பார்த்தோம். அவருக்கும் எங்களுக்கும் அப்படி ஒன்றும் தொடர்பில்லை. ஏதோ உறவுப்பகை என்று அம்மா சொல்லுவார்கள். கல்யாணத்திலும், சாவிலும் தான் உறவு பகையாகும், பகை உறவாகும் என்று சொல்லுவார்கள். அப்படி, என் அப்பா இறப்பில், அத்தை உறவு எங்களுக்கு மீண்டும் மலர்ந்தது. அவர்தான் பழைய கதைகள் நிறைய சொன்னார். அப்பாவைப்பற்றி அவர் சொன்ன விஷயங்கள் எங்களுக்கு நிறைய ஆச்சரியங்களைத் தந்தது."

"என் அப்பாவிற்கு ஒன்று விட்ட அண்ணன் ஒருவர் உண்டு. என் பெரியப்பா முறை. என் அப்பாவும், சித்தப்பாவும் (என் அப்பாவின் உடன் பிறப்பு) சின்னதிலேயே அம்மா, அப்பா இல்லாமல் அனாதையாயிருக்க அவர்தான் எடுத்து வளர்த்திருக்கிறார். அவர் ஓரளவு வசதி படைத்தவர் போல, அந்த காலத்திலேயே. தான் எது வாங்கினாலும், தம்பிகளுக்கும் சேர்த்துதான் வாங்குவாராம். அத்தனை பாசம். ஒரு பவுண்டைன் பேனா வாங்கினால் கூட மூன்றாய்த்தான் வாங்குவாராம். வளர, வளர..இது போல் நிறைய. மடக்கு சேர், இரும்பு கட்டில், சைக்கிள், மோதிரம், செயின் என எல்லாமே அவருக்கு வாங்கும்போது இரண்டு தம்பிகளுக்கும் சேர்த்து."

"ஊரில் உள்ளோர் கேலியாய் கேட்பார்களாம்..நாளைக்கு கல்யாணம் னா கூட அதுவும் சேர்த்துதானாப்பா..? என்று. ஆமா, கல்யாணம் மட்டுமில்லை..நான் வீடு கார் வாங்கும்போது என் தம்பிகளுக்கும் சேர்த்துதான் வாங்குவேன்..என் தம்பிகளுக்கு செய்ய முடியலைன்னா..எனக்கும் கிடையாது..என்பாராம். 

அப்புறம், அத்தையை (அப்பாவின் தங்கை) கல்யாணம் பண்ணிக்கொடுப்பதற்காக ஏதோ நிர்ப்பந்ததில் (பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுக்க) அவரும் கல்யாணம் செய்திருக்கிறார். ஆனால், அவர் எண்ணம் தம்பிகளுக்கும் சேர்த்து, தனக்கு வயதானாலும் பின்னாடி கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் ன்னு இருந்திருக்கு. அதற்கப்பறம் விதி விளையாடிருக்கிறது. ஏதோ பங்காளி, செய்முறைன்னு பெரிய, நிறைய பிரச்னையாயி அவர் நொடித்துப்போயிட்டாராம். அப்பா இறக்கிறதற்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடித் தான் அவரும் இறந்தாரு..அவர் கேதத்துக்குப்போயிட்டு வந்தப்பின்னாடிதான், அப்பாவும் முடியாமப்போயிட்டாரு..!

சித்தப்பா தான் சொன்னாரு..அப்பாவும், சித்தப்பாவும் வைராக்கியமாவே இருந்துருக்காங்கா..நம்ம அண்ணனுக்கு முன்னாடி நம்ம காரு, வீடுன்னு எதுவும் வாங்கிக்கிட வேணாம்னு..ஏற்கனவே அனல்ல இருக்கிற அண்ணன நாம தூக்கி உலையில போடவேணாமுன்னு..!

என்ன பிரச்சனை, ஏன் பேச்சு வார்த்தை இல்லைன்னு தெரியலை..அப்பாவும் எதுவும் எங்ககிட்ட சொல்லிக்கிட்டதில்லை. ஆனா, அவங்க வாழ்ந்த வாழ்க்கையை வரலாறாக்கிட்டாங்க..அவங்களால வசதியா வாழ முடிஞ்சபோதும் தன் அண்ணனுக்காக எப்படி வாழ்ந்துருக்கான்ங்கிறத நினைக்கிறப்ப ரொம்ப பெருமையாயிருக்கு.. 

இங்க, என் அண்ணன் கார் வாங்கினா, அதை விட பெரிய காரா வாங்கணும்கிறா..என் பொண்டாட்டி..நான் முதல்ல வீடு வாங்கிட்டா அசிங்கமா போயிரும்னு என் அண்ணன் நினைக்கிறான்.. நான் ஏதாவது வாங்கிருவேன்னு அவனும், அவன் ஏதாவது வாங்கித் தொலைச்சுடுவானோன்னு பயந்துகிட்டே வாழ வேண்டியிதாயிருக்கு..கொடுமை!" என சலித்துக்கொண்டான்.