எனது 'செல்லாக்காசு' சிறுகதை மாலைமலர் நடத்திய 'பொங்கல் சிறுகதைப் போட்டியில்' மூன்றாம் பரிசு பெற்றுள்ளதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன். (மாலைமலர், பிப்ரவரி 1 2025 நாளிதழ்)
எனது நண்பர் திரு. நீலகண்டனுக்கு சமர்ப்பிக்கிறேன்!
நுகர்தலும், பகிர்தலும்..!
எனது 'செல்லாக்காசு' சிறுகதை மாலைமலர் நடத்திய 'பொங்கல் சிறுகதைப் போட்டியில்' மூன்றாம் பரிசு பெற்றுள்ளதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன். (மாலைமலர், பிப்ரவரி 1 2025 நாளிதழ்)
எனது நண்பர் திரு. நீலகண்டனுக்கு சமர்ப்பிக்கிறேன்!
என்னுடைய 'லெமன் சாதம்' சிறுகதை 'சொல்வனம்' இணைய இதழில் பிரசுரமாகி உள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இணைப்பு:
லெமன் சாதம் – சொல்வனம் | இதழ் 325 | 25 ஆக 2024 (solvanam.com)
ஆனேகல் - அத்திப்பள்ளி குறைவான பேருந்துகளே இயக்கப்படும். ஷேர் ஆட்டோ தான் ஒரே கதி. டீசல் ஆட்டோ, பதினொரு பேர் பயணிப்பர். முன் டிரைவர் சீட்டில் டிரைவர் இரு பக்கமும் இருவர், நடுவில் எதிரெதிர் ஆறு பேர், பின்னால் மூன்று பேர் என அடைத்துப் பயணிக்கும்.
எங்கள் அபார்ட்மெண்டு முன் காலையில் அவ்வளவு கூட்டம் நிற்கும். ஷேர் ஆட்டோ வந்தபடியே இருக்கும். இருபது ரூபாய் கட்டணம். பேருந்திலும் அதே கட்டணம் தான். சில ஆட்டோ டிரைவர்கள் பரிச்சியமாய்ப் போனார்கள்.
அன்று காலை, நான் ஆட்டோவிற்கு காத்திருக்கையில் என் எதிர் பிளாட் நபரும் வந்தார். நான் ஆச்சரியமாய் " என்ன காரில் போகவில்லையா?" எனக் கேட்க, "அப்பப்ப பழச மறக்கக் கூடாதுல.. " என சிரித்தபடி, " இல்லையில்ல.. என் மச்சான் வந்துருக்கான், ஏதோ இன்டர்வியூ அட்டென்ட் பண்ணனுமாம்.. அவன் அக்கா அதான் என் பொண்டாட்டி ஆர்டர் இன்னிக்கு ஒரு நாள் கார் அவனுக்கு கொடுங்க ன்னு..!" என பலமாய் சிரித்தார். சமீபமாக தான் அவரைத் தெரியும். ஐடி யில் நல்ல வேலையில் இருக்கிறார் எனத் தெரிந்து கொண்டேன்.
ஆட்டோ வரவும், பெண்கள் நடுவில் அமர, நானும், அவரும் டிரைவருக்கு இரு புறமும் அமர்ந்து கொண்டோம். தெரிந்த டிரைவர் தான். என்னைப் பார்த்து சிரித்தபடி, போனில் பேசிக்கொண்டே ஓட்டினான். என்ன பிரச்சனை எனத் தெரியவில்லை. ஒவ்வொரு போனாய் பேசி பணம் கேட்டு கொண்டிருந்தான். போனை டாஷ் போர்ட் டில் வைத்துக் கொண்டு காதில் ஹெட் செட் அணிந்து பேசியபடி வந்தான். இடையிடயே Darling என வந்த அழைப்புகளை நிராகரித்தபடியே வந்தான். பத்து பேரிடமாவது பேசியிருப்பான். முகம் வாட்டமாயிருந்தது. ஒரு இடத்தில் பயணிகளை இறக்கி விடுகையில் சற்று நின்று, Bro-in-law என்ற பெயரை அழைத்தான். எடுக்கவே இல்லை. வண்டி நகர்ந்து போகவும் மீண்டும் Darling அழைத்தது. எனக்கு சிரிப்பாய் வந்தது. இம்முறை ஸ்பீக்கரில் போட்டு விட்டான். " என்ன ஆச்சு.. ஸ்கூல் பீஸ் கட்ட போறயா.. ஆட்டோ ஓட்ட சொல்லி கொடுக்கப் போறீயா உன் புள்ளைக்கு.. " எனக் கத்த, Darling என்பது அவன் மனைவி என புரிந்து கொண்டேன். அந்தப் பக்கம் என் எதிர் வீட்டு நண்பர் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டார்.
அதற்குள் Bro-in-law call waiting என வர, Darling பேச்சை முறித்துக் கொண்டான். ஸ்பீக்கரில், "காச தவிர வேறு எதுனா பேசுறதுனா பேசு.." என ஆரம்பிக்க இவன் ஒன்றும் பேசாமல் கட் செய்து கண் கலங்கினான். மீண்டும் Darling அழைக்க, ஸ்பீக்கரில் "தூ.. ஒரு ஆறாயிரம் ஸ்கூல் பீஸ் கட்ட முடியல.. என் அண்ணன்ட்ட பிச்சை எடுக்கப் போனியா.. அவன் எனக்கு ஃபோன் பண்ணி கேவலமா பேசுறான்.." என பேசும்போதே ஒரு பிஞ்சு குரல், "டாடி, ஸ்கூல் வேணாம்.. நீ மம்மி ஃபைட் பண்ணாத !" என சொல்லவும் பாவமாய் போனது எனக்கு. அதற்குள் அத்திப்பள்ளி வந்திருந்தது.
இறங்கிய அனைவரும் அவரவர் பணத்தை நீட்ட, அவன் சில்லறை கொடுக்கவும் வாங்கவுமாய் இருந்தான். நான் கொடுக்கும்போது அவன் முகத்தைப் பார்த்தேன். கண்ணீர் முட்டிக் கொண்டிருந்தது. என் எதிர்வீட்டு நண்பர் " GPay இருக்கா..?" என்றார் அவனிடம். நான், "நா கொடுக்கிறேன் இருபது ரூபாய்க்கு எதுக்கு ?" என்றபடி பையை திறக்க எத்தனித்தேன். அவரோ விடாமல் "..சொல்லுப்பா GPay நம்பரை!" என்றபடி போனை நீட்டிக் கொண்டிருந்தார். அவன் சொல்ல, சொல்ல, "மஞ்சு வா..?" எனககேட்டார். அவன் ஆம் என்று சொல்லி முடிக்கவும், அவர் பணம் செலுத்தியதற்கான குறுஞ்செய்தி ஒலித்தது. அவன் பிரமிப்பாய் அவரை ஏறெடுத்தான். "சார்.. என்று போனைக் காட்ட அதில் 6020 என்றிருந்தது. நான் அவரை திகைத்துப் பார்க்க, அவர் அவனிடம், "எப்போ முடியுமோ அப்ப கொடுத்தா பரவாயில்ல.. ஸ்கூல் பீஸ் ஐ முதல்ல கட்டு.. ஆட்டோக்காரன் பையனை நல்லா படிக்க வை.. எங்கப்பா மாதிரி..!" என்றார். அவன் சடாரென அவர் காலைத் தொட்டான். அவர் அவனைத் தூக்கியபடி, "எங்கப்பா ஒரு ஆட்டோ காரர் தான்.. என்னை நல்லா படிக்க வச்சாரூப்பா.. அதெல்லாம் எதுக்கு உனக்கு.. சார் வாங்க டைம் ஆகுது.." என்றபடி "உன் மச்சானால ஹெல்ப் பண்ண முடியலானாலும், என் மச்சான் மூலமா உனக்கு ஹெல்ப் கிடைச்சிருச்சு..!" என்று சிரித்தபடி என்னுடன் பேருந்தைப் பிடிக்க ஓடி வந்தார்.
மஞ்சுக்கு ஒன்றும் புரியவில்லை என்பதை திரும்பிப் பார்த்தபோது புரிந்துக் கொண்டேன்.
வீட்டிற்கு வந்து எடுத்து வைக்கும் போதுதான் கவனித்தேன், கூடுதலாக ஒரு பொட்டலம் இருந்ததை. அதை பிரித்துப் பார்த்தால் கேசரி ! இள மஞ்சள் நிறத்தில் தக தகவென வாழை இலையில் மின்னியது. "இட்லி மட்டும் போதும் னு தானே சொன்னேன்.. கேக்குறதே இல்லை.. இஷ்டத்துக்கு வாங்கிட்டு வர்றது..!" என்றாள் என் மனைவி. "சூப்பர்.. கேசரி யா..!" என்றான் என் மகன். எனக்கோ யோசனை.. நான் சொல்லவே இல்லையே.. பாவம் யாருக்கு கொடுக்க வேண்டியதை எனக்கு கொடுத்து விட்டார் போல என நினைத்தேன். பாவம் இந்நேரம் யாரோ வீட்டில் ஏமாந்து போகும் ஒருவரை, அது குழந்தையாய் கூட இருக்கலாம். அவர் மனைவியிடம் திட்டு வாங்குவதையும் நினைத்துக் கொண்டேன். அவர் மீண்டும் வந்து அந்த ஓட்டல் சர்வரை திட்டலாம். கல்லாவில் இருப்பவரை காசு வாங்கியதற்காக சண்டையிடலாம்.
அப்போதுதான் உறைத்தது, நான் அதற்கு காசே கொடுக்க வில்லை என்று. அது ஒரு பழைய ஓட்டல். விட்டல் என பெயர், அத்திப்பள்ளியில்! அதை 'பட்டர்' ஓட்டல் என்றே அழைத்தனர். கன்னடத்தில் பட்டர் என்றால் பிராமணர் என பொருள். நம்மூர் 'பிரமாணாள் கபே ' போல். நான் ஆனேகல் வீடு மாறியவுடன் இந்த ஓட்டல் எனக்கு கை கொடுத்தது. வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு, ஞாயிறுகளில் காலை சிற்றுண்டிக்கு என அவ்வப்போது அத்திப்பள்ளி போய் பார்சல் வாங்கி வருவேன். மற்ற ஓட்டல் போலல்லாமல், அங்கேயே சாப்பிட்டாலும் சரி, பார்சல் வாங்கினாலும் சரி, கவுண்டரில் போய் வேண்டியதை கேட்டால், சாப்பிட என்றால் தட்டில் வைத்து கொடுப்பார்கள். டேபிளில் நின்று சாப்பிட்டுக்கொள்ளலாம். (self service). பார்சல் என்றால் பொட்டலம் போட்டு கொடுப்பார்கள். வெளியே வரும்போது கல்லாவில் சொல்ல வேண்டும், என்ன சாப்பிட்டோம், இல்லை என்ன பார்சல் என்று. அவர் வாயிலேயே கணக்குப் போட்டு சொல்லுவார். அவ்வளவுதான். டோக்கன் முதலில் வாங்குவதோ, பணம் போட்டு பில் வாங்கி பார்சல் வாங்குவதோ கிடையாது. எனக்கு இது முதலில் விநோதமாய் இருந்தது. ஆனால், அங்கு வரும் வாடிக்கையாளருக்கு சாதாரணமாய் இருந்தது. நானும் அவ்வாறே பழகிக் கொண்டேன்.
இன்று அப்படித்தான் நான் தட்டை இட்லி, பூரி மட்டும் பார்சல் கேட்டு, அதை மட்டும் சொல்லி பணம் கொடுத்து வாங்கி வந்திருந்தேன். இங்கு வந்து பார்த்தால் தான் கேசரி பொட்டலம் கூடுதலாய் வந்திருந்தது தெரிந்தது. நான் இத்தனையும் யோசிப்பதற்குள் என் மனைவியும், மகனும் அவர்கள் உணர்வை வெளிப்படுத்தினர். பின்னர் அவர்களுக்கு நான் விளக்கியதும், "அட.. ஓசி கேசரி .. சூப்பர்!" என்றான் என் மகன். "நமக்கு எத்தனை வாட்டி சட்னி சாம்பார் மறந்துருப்பான்.. இருக்கட்டும்!" என்றாள் என் மனைவி.
"காசு கொடுக்காம சாப்பிட்டா, அவங்களா கொடுக்காம சாப்பிட்டா உடம்புல ஒட்டாதுப்பா.." என்றார் என் அம்மா. இப்போது அந்த கேசரியை என்ன செய்வதெனத் தெரியவில்லை. நாங்கள் மூவரும் அதைப் பார்க்க, திறந்து வைத்திருந்த கேசரி சிரித்தது. "சரி விடு.. செக்யூரிட்டிக்கு வேணா கொடுத்திரலாம் .. நம்ம சாப்பிட வேணாம் !" என நான் சொல்ல என் மகன் விக்கித்துப் போனான். என் அம்மா, " யாரோ பொருளை நம்ம தானம் செய்ய படாதுப்பா..!" எனக்கு கோபம் வந்தது.. "அட சும்மா இரும்மா நீ..! ஒரு கேசரிக்கு போய்ட்டு..! நீ சாப்பூடிரா" என்றேன் என் பையனிடம். அவன் அவ்வளவுதான். "எனக்கெல்லாம் வேணாம் பா.. ஆச்சி சொல்லிட்டாங்க.." என்றான்.
"சரி.. அதை அப்புறம் பாக்கலாம்.. மத்ததை சாப்பிடுங்க..!" என்றேன். "அப்ப அதை என்ன பண்டறது.. அதை நடுவில வச்சுக்கிட்டா சாப்பிடறது..?" என்றாள் என் மனைவி. "தூக்கியும் போட முடியாது, யாருக்கும் கொடுக்கவும் கூடாது ! என்னதான் பண்றது..?" என்றேன் பரிதாபமாய். பசி ஒரு பக்கம்.. அவ்வளவு தூரம் போய் வாங்கி வந்த களைப்பு மறு பக்கம் எனக்கு. மழை வேறு விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.
"ஒண்ணு பண்ணுபா .. வீணாக்க வேணாம்.. இப்ப சாப்பிட்டு, அப்புறமா போய் காசை கொடுத்துடு.. விவரம் சொல்லி..!" என்றார் என் அம்மா.அது நியாயம் எனப் பட்டது எனக்கு. நமக்கும் உறுத்தல் இருக்காது என்று என் பையனை எடுத்துக் கொள்ள சொன்னேன். என் மனைவி அதை எல்லோருக்கும் பங்கிட்டாள். நாலு பேருக்கும் அது என்னவோ பிரசாதம் போலிருந்தது.
சாப்பிட்டு முடித்ததும் என் அம்மா, "மறக்காம போய் காச கொடுத்திடுப்பா .. சாப்பிட்டாச்சு வேற..!" என்றார். என் பையனும், மனைவியும் சிரிக்க எனக்கோ முதல்ல போய் காசை கொடுத்திடலாம் என கிளம்ப எத்தனிக்கையில் நினைவு வந்தது. அந்த ஓட்டல் ஞாயிறு காலை பதினொரு மணி வரை மட்டும்தான். அதன் பின் விடுமுறை. இனி கிளம்பி போக முடியாது, மழை வேறு பெய்து கொண்டிருந்தது. நாளை கொடுத்து விடலாம் என எண்ணியபடி இருந்து விட்டேன்.
திங்கள் கிழமையும் வந்தது. மாலை வீடு திரும்பியதும் என் அம்மா கேட்கும்போதுதான் நினைவு வந்தது. "கேசரிக்கு காசு கொடுத்திட்டியப்பா..!" "ஆ.ங்.. கொடுத்தாச்சு..!" என்று பொய் சொன்னேன். இல்லையென்றால் மீண்டும் ஆரம்பித்து விடுவார். என் மனைவி என்னைப் பார்த்து என் அம்மா பேசுவது போல், "பொய் சொல்ற வாய்க்கு போஜனை கிடைக்காதுப்பா..!" என்றாள் நக்கலாக.
அந்த வாரம் ஓடியேப்போனது! மீண்டும் ஞாயிறு! இரவு முழுவதும் நல்ல மழை. கரண்ட் வேறு இல்லை. என் மனைவியும், மகனும் தூங்கிக் கொண்டிருந்தனர் என் அம்மாவிடம் மட்டும் சொல்லிக்கொண்டு டிபன் வாங்க கிளம்பினேன்.
பார்சல் வாங்கிக்கொண்டு, வாங்காத கேசரிக்கும் சேர்த்து கணக்கு சொன்னேன். அந்த காசைக் கொடுத்தவுடன் ஒரு பாரமே இறங்கியது போலிருந்தது. முன்னருக்கு இப்போது சற்று பழக்கமாயிருந்தார் அந்த ஓட்டல் முதலாளி. கூட்டம் சற்று குறைவாய் இருந்தது. அவரிடம் பேச்சு கொடுத்தேன், ஏன் டோக்கன் சிஸ்டம் இல்லை.. எப்படி நம்பி கொடுக்கிறீர்கள் எனக் கேட்டேன். என்னை அதிசயமாய்ப் பார்த்து "நீங்கள் கேள்விப் பட்டதில்லையா எங்கள் ஒட்டலைபபற்றி..? என சிரித்தபடி, "யாரும் பசிக்காக பரிதவிக்க வேண்டியதில்லை.. பசிக்காக யார் வேண்டுமானாலும் இங்கு வந்து சாப்பிடலாம். அதனால்தான் இந்த டோக்கன் சிஸ்டம் லாம் என் அப்பா வைக்க கூடாது என்று சொல்லி விட்டார். நேராக போய் சாப்பிட்டு சங்கோஜமே படாமல் போய் விடலாம். காசு கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் மட்டும் கொடுக்கலாம்...!" என்று ஆச்சரியப் படுத்தினார். இத்தனைக்கும் அங்கே உணவு அத்தனை அருமையாய் இருக்கும்.
கூட்டம் வர ஆரம்பித்தது. சரி கிளம்பலாம் மழை வருமுன் என நினைத்தப்படி,"எப்படி இந்த விலைவாசியில், இத்தனை வருஷமாய் சாத்தியமாயிற்று..?" எனக் கேட்டேன். "இப்போ சமீபமா கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு.. நிறைய வசதியானவங்க கூட தெரிஞ்சுகிக்கிட்டு, காசு கொடுக்காம போறாங்க.." என அலட்டிக்கொள்ளாமல் சொல்ல, ".. அட.. கொடுமையே.. அப்புறமும் ஏங்க ..?" என முடிக்குமுன் என்னை உற்றுப் பார்த்தபடி "மழை பெய்யணுமில்லை..!" என புன்னகைத்தார் பெரிதாய்.
வெளியே மழை பெய்யத் தொடங்கியது!
-----------------------------
வழக்கமாய் கேட்கப்படும் கேள்வி. காலம் காலமாய் நாம் சிறுவர்களாயிருந்தபோதும் கேட்கப்பட்ட கேள்வி, இப்போதும் கேட்கப்படும் கேள்வி. " நீ என்னவாகப் போகிறாய்..?, What is your ambition?"
நாங்கள் படிக்கும்போதும் கேட்கப்பட்டது. ஒவ்வொரு வகுப்பு தேர்ச்சி பெற்று செல்லும்போதும் ஆசிரியர்களால் கேட்கப்படுவது. வீட்டு விருந்தினர்களாலும் கேட்கப்படுவது. மாறாமல், பெரும்பாலும் டாக்டர் என்றே வரும். நான் எப்போதும் டாக்டர் தான். என் அண்ணன் இஞ்சீனியர் என்பான். பொருள் புரிந்து சொன்னனா எனத் தெரியாது. ஆனால், சொன்ன மாதிரி ஆகியும் விட்டான். இன்னொரு அண்ணன் ஆபீசர் என்றான். இப்போது அரசு உயரதிகாரியாய் உள்ளான். டாக்டர் என்று சொன்ன நான்தான் மருத்துவ பிரதிநிதியாய்ப் போனேன். "மெடிக்கல் ரெப்பும் டாக்டர் மாதிரிதான், எல்லா வியாதிக்கும் மாத்திரை தெரியும், எங்க வீட்டு டாக்டர்..!" என்று சொந்தக்காரர்களிடம் என் அம்மா என்னைப் பற்றி சொல்லும்போது, "எது..!" என்ற வடிவேல் மீமதான் நினைவிற்கு வரும்.
சுமார் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் அதே கேள்வி கேட்கப்பட்டது. என் அப்பா மத்திய அரசு பணியில் இருந்தார். மூன்று ஆண்டுகள் ஒரே ஊரில் இருப்பது பெரிய ஆச்சரியம். ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும் அடுத்து எந்த ஊரோ என என் அம்மா கவலையோடிருப்பார். விழுப்புரதிலுருந்து ராஜபாளையம் மாற்றலாகியது. என் அண்ணனை நாடார் பள்ளியிலும், என்னை அன்னப்பராஜா பள்ளியிலும் சேர்த்துவிட்டார் எங்கள் அப்பா. எப்போதுமே நாங்கள் இருவருமே ஒரே பள்ளியில் படித்ததில்லை. வேறு வேறு பள்ளிகள்தான். என் அம்மா கூட கேட்பார்கள், என் அப்பா அது நல்லாயிருக்காது வேணாம் என்பார். இத்தனைக்கும் என் அப்பா, பெரியப்பா சித்தப்பா என ஐந்து பேரும் சின்ன வயதில் ஒரே பள்ளியில் படித்தவர்கள். அவர் என்ன அனுபவித்தாரோ தெரியவில்லை.
நான் சேர்ந்த பள்ளியில் பெரும்பாலும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மாணவர்கள் படிக்க வந்தனர். என் அப்பா என்னை வகுப்பில் விட்டு செல்லும்போது மொத்த பள்ளியும் பார்த்தது. பேண்ட் ஷர்ட் கூலிங் கிளாஸ் என்று அவர் ஒரு ஜேம்ஸ் பாண்ட் போலிருப்பார். வெள்ளை சட்டை, நீல அரை கால் டிரவுசர். சுமார் நாற்பது மாணவர்கள், பெரிய வகுப்பறை. பெரும்பாலும் காட்டன் சீருடையிலிருந்தனர். அப்போது டெர்ரி காட்டன் என்பது பெரிய வசதியானவர்கள் அணிவது. வெகு சில மாணவர்களே அணிந்திருந்தனர். அதில் நானும் ஒருவன். முதல் பெஞ்சில் போய் அமர்ந்தேன். என் அப்பாவிடம் பேசிவிட்டு உள்ளே வந்த ஆசிரியர் என்னிடம், " இவ்வளவு உயரமா இருந்துக்கிட்டு முன்னாடி உட்கார்ர.. போய் கடைசியில உக்காறு.." என்றார். கடைசி பெஞ்சா என திகைத்துப் போனேன். அவர் சொல்லி முடிக்கவும் ஒரு பொடியன் முதல் பெஞ்சிலிருந்து எழுந்து என்னிடம் வந்து " என் பெயர் மாரிமுத்து, கிளாஸ் லீடர் !" என்றபடி வகுப்பிற்கு முன் நின்று ஒரு நோட்டம் பார்த்தான். "கருப்பையா, ராஜகுரு உங்களுக்கு இடையில இடம் கொடுங்க நம்ம வகுப்பு புது மாணவருக்கு.. " என்னைப்பார்த்து "உன் இடத்திற்கு போய் உன்னை வகுப்பிற்கு அறிமுகப் படுத்திக்கொள்..!" என்றான். வகுப்பு ஆசிரியரோ உட்கார்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். வகுப்பு மொத்தமும் அமைதியாயிருந்தது. மூன்று பேர் அமரும் மரத்திலான டெஸ்க் அது. கடைசி வரிசையில் நடுவில் இருந்தது. இருவரும் எழுந்து கொள்ள நான் நடுவில் போய் நின்றேன். மொத்த வகுப்பும் என்னைப்பார்த்தது. எனக்கு இதெல்லாம் புதிது. அப்போதுதான் கவனித்தேன் வகுப்பின் இடது முதல் வரிசையில் ஆறு பெண்கள் அமர்ந்திருந்தனர் தூக்கி வாரிப்போட்டது. இது கோ எஜுகேஷன் ஸ்கூல் லா.. என்று.
" உன்னைப்பற்றி சொல்.. " என்றான் மாரிமுத்து. "my name is sivasankar.. my father name is..subrmanian.. i am 13 years old..i studied in villupuram.." என மனப்பாடம் வெளிவந்தது. முதல் நாள் என் அக்கா சொல்லிக்கொடுத்தது. "ஸ்கூல் எச் எம் கேட்டா சொல்லு அப்பதான் சேத்துக்குவாங்க.." என்று பயிற்சி கொடுத்திருந்தாள். நான் சொல்லி முடிக்கவும் மொத்த வகுப்பும் கை தட்டியது. பெருமை தாங்கவில்லை எனக்கு. தலையை நிமிர்த்தாமலேயே வகுப்பாசிரியர், "மாரியம்மா, புரிந்ததா? எனக் கேட்க.. மாரியம்மா எழுந்து நின்றாள். தாவணி அணிந்திருந்த ஒரே பெண் ஆறு மாணவிகளில். பேசாமல் நிற்க, " கனக சபாபதி .." என்றார். ஒரு மூலையில் எழுந்து நின்றான். என்னைப் பார்த்து சிரித்த ஆசிரியர், "மாரிமுத்து நீயே வகுப்புக்கு சொல்லிடு.." என்றார். நான் சொல்லியதை அப்படியே தமிழில் சொன்னான் மாரிமுத்து. இப்போதும் கை தட்டியது வகுப்பு. ஆனால், இது எனக்கல்லா எனப் புரிந்து கொண்டேன்.
மற்றபடி சிரிப்போ வேறு பேச்சோ இல்லை வகுப்பில். ஆசிரியர், " அப்புறமாய் ஒவ்வொருவரும் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.. என்றவர் " இன்று முதல் வகுப்பு இன்னும் டைம் டேபிள் வரவில்லை" என்றபடி ambition என்ற வார்த்தையை கரும்பலகையில் எழுதினார். எத்தனைப் பேருக்கு இந்த வார்த்தை, இதன் அர்த்தம் தெரியும் எனக் கேட்க சொற்ப கைகள் தூக்கியிருந்தது. 'நோக்கம், குறிக்கோள் லட்சியம் என ஒவ்வொருவராய் சொல்ல என் முறை வந்தது. "my ambition is to become a doctor' என சொல்ல ஆசிரியர் வெரி குட் என்றார். எனக்கோ பெருமை தாள வில்லை. என் அக்காவை நன்றியுடன் நினத்துக் கொண்டேன்.
விளக்கம் அளித்து, ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் அவரவர் ambition பற்றி கூறி கேட்க பெரும்பாலும் விவசாயம் என்றனர். (பின்னாளில் தெரிந்து கொண்டேன் அவர்கள் விவசாயம் பார்த்துக்கொண்டே பள்ளியில் படித்தனர் என்று). டாக்டர் போலீஸ் கலெக்டர் என சொல்ல டாக்டர் என சொன்னவர்களை என்னைப்பார்த்து காப்பி அடித்துவிட்டனர் என பொருமிக்கொண்டேன். பெண்கள் அனைவரும் ஒன்றும் சொல்லவில்லை. ஒரே சிரிப்பு அவர்களுக்கு. ஆரோக்கிய மேரி மட்டும் தான் பைலட் ஆகப் போகிறேன் என சொல்ல ஆசிரியர், "சபாஷ்" என்றார். மற்ற பெண்கள் அப்படியென்றால் என கேட்க மேரி விளக்க ஆரம்பித்தாள் அவர்களுக்கு.
எல்லோரும் முடித்தபின் ஆசிரியர், "ஒருவருக்கு கூட டீச்சர் ஆகணும்னு ஆசை இல்லயா.. ஏன்?" என்றார். "அதுக்கு நிறைய படிக்கணும்.. எல்லா கேள்விக்கும் பதில் தெரியணும்.." என ஒரே மாதிரி சொல்ல சிரிப்பலை எழுந்தது.
ஆசிரியர், "ராஜகுரு.. உனக்கு கூட உங்கப்பா மாதிரி வாத்தியார் ஆகணும்னு ஆசை இல்லயாப்பா.." எனக் கேட்க என் பக்கத்தில் அமர்ந்திருந்த ராஜகுரு எழுந்து நின்றான். அப்போதுதான் அவனை முழுதாய்ப் பார்த்தேன். கரு கருவென உயரமாய் எண்ணைப் படிய வாரிய தலை, லேசாய் மீசை துளிர் விட்டிருந்தது. சாந்தமான முகம். "ஓ இவன் அப்பா வாத்தியாரா..?" என நினைத்துக்கொண்டேன்.
அவன் சொன்ன பதில் தான் இப்போது இதை எழுதத் தோன்றியது.
"என்னால் அதை இப்போது தீர்மானிக்க முடியாது ஐயா.. (அங்கே ஆசிரியர்கள் ஐயா என்றே அழைக்கப் பட வேண்டும்) நான் முயற்சி செய்து பார்க்கிறேன்.. அது ஆசைப் பட வேண்டிய வேலை அல்ல. சொல்லப் போனால் அது வேலையே அல்ல. அதற்கும் மேலே. மிக பொறுப்பு வாய்ந்த செயல். ஒரு ஆசிரியருக்கு மிகப் பெரும் பொறுப்புள்ளது. ஒரு சமுதாயத்தில் ஆசிரியர் எப்படியோ, மற்றவரும் அப்படியே.. நம் சமுதாயத்தின் முற்போக்கு சிந்தனையாளர் அவர். அவரை அவரின் செயலை சமூகம் கூர்ந்து கவனிக்கும்.ஏனெனில், அவர் வழியை தான் சமூகம் பின் தொடரும். ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பொதுவானவர். தப்பிழைக்கும் எவரையும் கண்டிக்க, திருத்த அனுமதியுண்டு. அவர் மற்றவர்களுக்கு முன் மாதிரியாய்த் திகழவேண்டும். தெரியாமல் கூட அவர் தப்பிழைத்து விடக்கூடாது. அது மிகப் பெரிய பாதிப்பை மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஆசிரிய சமுதாயத்தின் மீது களங்கத்தை உண்டு பண்ணும்... அதனால் தான் நான் தயங்க வேண்டியுள்ளது ஐயா.. !" என நிறுத்த "இன்னும் நீ தவறு இழைப்பாய் என எண்ணுகிறாயா.. இந்த வயதிலும் உனக்கு பக்குவம் வரவில்லயா..?" என அவனை கூர்ந்து பார்த்தபடி ஆசிரியர் கேட்க, " இல்லை அய்யா.. நான் மற்றவர்களை காட்டிலும் என் நடத்தையில் கூடுதல் கவனமாயிருக்கிறேன்.. என்னை எல்லோருக்கும் ஆசிரியரின் பையன் என்று தெரியும். நான் செய்யும் சிறு தவறு கூட என் அப்பாவை, அவரது பணியை அவமானப்படுத்திவிடும். நான் தெரியாமல் தவறிழைக்க வாய்ப்புள்ளது. அதற்கு இன்னமும் நான் என்னை செதுக்க வேண்டியுள்ளது. அதற்கு முழு தகுதியை என் மனம் எப்போது உணர்கிறதோ அப்போதே ஆசிரியப் பணிக்கு நான் என்னைத் தயார்ப் படுத்திக்கொள்வேன். அது எனது கனவும் கூட..! " என்று சொல்ல மொத்த வகுப்பும் வியந்து பார்த்தது. ஆசிரியரோ ஏதும் சொல்லாமல் முகத்தில் ஒரு புன்னகை மட்டும் தவழ விட்டார்.
அன்று மாலை பள்ளி முடிந்து செல்கையில் கவனித்தேன். என் வகுப்பாசிரியர் சைக்கிள் ஓட்ட பின்னால் ராஜகுரு உட்கார்ந்தபடி என்னைப்பார்த்து கையசைத்து சென்றான்.
------------------
பின்குறிப்பு: சமீப காலமாய் ஆசிரிய-மாணவ செய்திகள் மிக வேதனை அளிக்கிறது. அடிக்கடி ராஜகுருவை நினைத்துக்கொள்வேன், அத்தகைய செய்திகளை கடக்கையில்.
சில வருடங்களுக்கு முன் பார்த்த ஒரு பெரியவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அவர், இதற்கு முன் நாங்கள் குடியிருந்த வீட்டு பக்கத்து வீட்டுக்காரரின் அப்பா. சொல்லப்போனால், அவரை வைத்துதான் நாங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடம் பழக ஆரம்பித்தோம். அங்கே நாங்கள் வசித்த போது, பக்கத்து வீட்டு நபர்கள் அவ்வளவாய் பழக்கம் இல்லை. இத்தனைக்கும் அவர்கள் தமிழ் காரர்கள்தான். ஒரு கணவன் மனைவி, ஒரு பெண் குழந்தை. ஆரம்பத்தில் நாங்கள் குடி போனபோது, வலிய பேசியும் அவர்கள் அவ்வளவாய் விருப்பம் காட்டவில்லை. நகரத்திற்கே உரித்தான குணம் அது. ஏதோ ஒரு பயம் யாரிடமும் பேசி பழகுவதற்கு. ஏதும் உதவி கேட்டு விடுவார்களோ இல்லை அவர்களால் ஏதும் பிரச்சனை வருமோ என தனித்தே இருக்க பழகிக்கொண்டனர்.
அவரின் அப்பா ஊரிலிருந்து வந்திருந்தார். வயதான சம்சாரி தோற்றம். பார்த்தவுடன் மிக யதார்த்தமாய் பழக ஆரம்பித்தார். நான் தமிழ், ஆங்கிலம் என இரு தினசரிகள் வாங்குவேன். அவருக்கு தினமும் நாளிதழ் படிக்க வேண்டும். அவர் பையனுக்கு நாளிதழ் வாங்கும் பழக்கமில்லை. தினமும், எங்கள் வீட்டிற்கு காலையில் வருவார், நாளிதழ் படிப்பார். ஊர், விவசாயம், அரசியல் என எல்லாம் பேசுவார்.
எனக்கும் மனைவிக்கும் அவரைப்பிடித்துப்போனது. வெள்ளந்தியாய்ப்பேசுவார். எங்களுக்குத் தெரியாத நிறைய காய்கறிகள், பழங்கள் பற்றிய தகவல் தெரிவிப்பார். குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு குறித்து அறிவுறுத்துவார். அவர் கூறும் தகவல்களெல்லாம் பெரும் பொக்கிஷமாயிருக்கும் என் மனைவிக்கு. பகலில், அவர் பேத்தியை ஸ்கூலில் விட, கூட்டி வர என போய் வந்தாலும், மருமகளுக்கு வீட்டில் துணி காயப்போட, பாத்திரம் கழுவ, காய் நறுக்க என எல்லா ஒத்தாசையும் செய்வார்.
அவரிடம் அவர் மகனோ, மருமகளோ அவ்வளவு பேசிப்பார்த்ததில்லை. எல்லாம் பேத்தி மூலம்தான். "காப்பி குடிக்க வா..சாப்பிட வா தா.. த்தா" என வெளியே உட்கார்ந்திருப்பவரை அழைப்பாள். டி. வி பார்க்க மாட்டார். இரண்டு, மூன்று மாதங்கள் கடந்திருக்கும். ஒரு நாள் ஊருக்கு கிளம்பறேன்யா..என்றார். என்னப்பா..அம்மா ஞாபகம் வந்திட்டா..என என் மனைவிதான் பகடி செய்தாள். சிரித்தபடியே, ஆமா..வராமலா..என கிளம்பிப்போனார்.
அவர் போனபின், வழக்கம்போல் அவர்கள் அப்படியொன்றும் பேசுவதில்லை. எப்பவாது, நான் அவர் பையனிடம் அப்பாவைப்பற்றிக் கேட்பதுண்டு. 'ம்ம்..நல்லாருக்காரு..' என்பான் அவ்வளவுதான்.
அதன்பின், ஒரு வருடத்துக்குள்ளேயே நாங்கள் அங்கிருந்து வேறு வீட்டிற்கு மாற்றலாகிப்போனோம். என் பையன் ஸ்கூலுக்காக அருகிலேயே மாற்ற வேண்டியதாய்ப்போனது. நாட்கள் ஓடிப்போனது..கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் கழித்து அவரைப்பார்க்க நேர்ந்தது.
அத்திப்பள்ளி பஸ் ஸ்டாப்பில் பெரியவர் ஒருவர், ஒவ்வொருவரிடமும் கையில் ஒரு சிறு அட்டையைக் காண்பித்து போன் பண்ண கேட்டுக்கொண்டிருந்தார். யாரும் முன் வரவில்லை. எல்லார் கையிலும் போன் இருந்தது. எல்லாரும் எதையோப்பார்த்துக்கொண்டுதானிருந்தனர். "பேலன்ஸ் இல்லை, பேட்டரி இல்லை..இப்ப எனக்கு ஒரு போன் வரும்.." என சொல்லிக்கொண்டிருந்தனர்.
நான் சிரித்துக்கொண்டே கையை நீட்டி அந்த அட்டையை வாங்கினேன். அதில் ஒரு பெயரும், போன் நம்பரும் இருந்தது. அவரை எங்கேயோப்பார்த்ததுப் போலிருந்தது. அடையாளம் கண்டு கொண்டேன். மிக தளர்ந்திருந்தார். மிக வறுமையாயுமிருந்தார். நான் பழைய, பழகிய விஷயங்களை கூறியதும் அவருக்கு ஞாபகம் வந்ததா என தெரியவில்லை. ஆனால், பொதுவாக என்னை, குடும்பத்தைப்பற்றி விசாரித்தார். நான் பேசிக்கொண்டே "வாங்கப்பா..காபி, டீ சாப்பிடலாம்.." என்றேன். மறுத்துவிட்டு, "போன் மட்டும் பண்ணி சொல்லுப்பா..நான் ரொம்ப நேரமா இங்கியே..நிக்குறேன்..யாரும் வரல..ன்னு".
நான் போன் செய்ததும் 'ட்ரூ காலரில்' தங்கம் என வந்தது. ஒரு பெண்மணி எடுத்ததும் அவரிடம் நீட்டினேன். அவர் என்னையே பேச சொன்னார். நான் அப்போதுதான் அவர் பெயர் கேட்டேன். சண்முகம் என்றார். நான் போனில் விபரம் கூறியதும், அப்பெண்மணி அந்தப்பக்கம் யாரிடமோ "நம்மதான் ஊருக்குப்போறேன்னு சொன்னோம்லா..அப்புறமும் உங்கண்ணே அனுப்பிச்சு வச்சுருக்காருப் பாருங்க..கூட ஒரு மாசம் வச்சுக்க முடியல..அங்கயே திரும்ப போச்சொல்றேன்..நானே.." என்றபடி என்னிடம், "சார்..அவர்ட்ட..நாங்க ஊருல இல்லை..திரும்பப்போகச் சொல்லுங்க.." என்றார். நான் அப்பாவியாய், "எங்கேங்க.." என்றேன். "ஆங்க்..எங்கிருந்து வந்தாரோ..அங்கியே..அவருக்குத்தெரியும்..ல்லாம்!" என்றபடி போனை கட் செய்தார்.
நான் அவரைப்பார்க்க தலையை குனிந்துக்கொண்டார். அவ்வளவு சத்தமாய் அந்தப்பக்கம் பேசியது கேட்டிருக்கிறது.
"எந்தப்பக்கம்பா...ஓசூர் வண்டி நிக்கும்?" எனக்கேட்டார். கண்கள் பனித்திருந்தது. ரோட்டின் மறுபக்கம் அவரை அழைத்துக்கொண்டு சென்றேன். அங்கேயிருந்த பேக்கரி கடையில் நுழைந்தார். இரண்டு பிஸ்கெட் பாக்கெட் வாங்கி "பேரப்பிள்ளைகளுக்கு கொடு" என என்னிடம் கொடுத்தபடி, நூறு ரூபாயை கடைக்காரனிடம் நீட்டினார். கடைக்காரன் "இது ஓகல்லாறீ..(போகாது)" என்றான். அவர் புரியாமல் பார்க்கவும் நோட்டை விரித்துக்காண்பித்தான். நடுவில் கிழிந்திருந்தது.."செல்லாதா..?" என்றபடி விக்கித்துப்போனார். நான் வாங்கிக்கொண்டு, என்னிடமிருந்த நோட்டைக்கொடுத்தபடி, "எரடு டீ கொடீ.." என்றேன். அவர், "என்னப்பா..நாந்தானே வாங்க்கிக்கொடுக்கணும்..பேரப்பிள்ளைகளுக்கு.." என்றார். "ப்பா..நான் பேங்கில மாத்திக்கிறேன்..நீங்க அதுக்குப்பதிலா இந்த நோட்ட வச்சுக்குங்க" என்று என்னிடமிருந்த நோட்டைக்கொடுத்தேன்..டீயைக்குடித்தப்படி, "ஒரு நல்ல நோட்டு கூட கொடுக்க மாட்டேங்கறாய்ங்க..என் பிள்ளைங்க.."
"செல்லாத நோட்டை யாரும் வச்சிக்க மாட்டாய்ங்க..தள்ளிவிட்டுட்டே இருக்கத்தான் பாப்பாய்ங்க..நம்மட்ட இல்லாதவரைக்கும் தப்பிச்சோம்னு நினைப்பாய்ங்க.." என்றார் டீயைப்பார்த்தபடி. "நானும் செல்லாகாசு என் பிள்ளைகளுக்கு..ஒருத்தர் மாத்தி, ஒருத்தர்ட்ட..தள்ளி விட்டுட்டே இருக்கானுக..என் பொண்ட்டாடியப்பார்த்து மூணு வருஷமாச்சுப்பா..மூணு பசங்க..ஒவ்வொருத்தன் வீட்டிலேயும் நாலு மாசம்..நான் ஒருத்தன் வீட்டில..அவ ஒருத்தன் வீட்டில.. இப்படியே தவணைப்போடுறானுக.." என்று வெம்பினார்.
எனக்கு என்ன சொல்வதெனப்புரியவில்லை. அவரையேப்பார்த்துக்கொண்டிருந்தேன். அவர், "நமக்குன்னு ஒரு வீடு..கொஞ்சம் காசு பணம் வச்சுக்கனும்பா..எல்லாத்தயும் பிள்ளைக்கே கொடுன்னா..கிறுக்கி..இப்ப செல்லாக்காசாப் போயாச்சு.." என்றார்.
பஸ்ஸ்டாப்பில் வந்து நின்றோம். "வீட்டுக்கு வாங்கப்பா..சாப்பிட்டு நாளைக்கு கூட போலாம்.." என்றேன். "அதெல்லாம் வேணாம்பா..என் பேரப்பிள்ளைகளுக்கு நானே ஒண்ணும் வாங்கிக்கொடுக்கலன்னு கவலையாயிருக்கு.." "நா பாத்து போயிடுவேன்..நீ சூதானமா..போப்பா"என்றார். மனமேயில்லாமல் அவரை பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தேன்.
வீட்டிற்கு வரும் வழியில், பஸ்ஸில் அமந்தபடி அந்த டயல் செய்த நம்பரை திரும்பப்பார்த்தேன். வாட்ஸ் அப் போட்டோ இருந்தது. அதில், தங்கம் சிரித்தபடி சோபாவில் உட்கார்ந்திருந்தார் மடியிலும், தோளிலுமாய் இரு நாய்களோடு!
-------