Saturday, April 10, 2021

யார் பூமி இது..!

சமீபத்தில் சொந்த ஊர் செல்ல நேரிட்டது. அங்கிருந்து இன்னொரு நண்பருடன் அவரது கிராமத்திற்கு சென்றோம். மதுரை-ராமனாதபுரத்திற்கிடையே இருந்த்தது. சரியான வெயில் தகித்தது. சித்திரை இன்னும் பிறக்கவேயில்லை, அதற்குள் இப்படியொரு வெயிலா என இருவரும் புலம்பியபடியே சென்றோம். அங்கேப் போனபின் தான் தெரிந்தது. நண்பர் ஏதோ நிலப்பிரச்சனை காரணமாக பஞ்சாயத்துப் பேசுவதற்காக உடன் அழைத்து சென்றிருக்கிறார் என. என்ன செய்வதெனத் தெரியாமல் கிராமத்தைப் பார்த்தபடி அவர் சொன்ன பிரச்சனையின் விபரங்களை ஆர்வமில்லாமல் கேட்டபடியிருந்தேன்.


கடைசியில் அவர் சந்தித்த முக்கிய நபர், என்னுடைய கல்லூரி கால எதிரியாயிருந்தார். கவனிக்கவும், நண்பர் இல்லை. என்னைக்கண்டவுடன், என் பெயர் சொல்லி உறுதிப்படுத்திக்கொண்டார். என்னை அழைத்து சென்ற நண்பருக்கோ மகிழ்ச்சி. ஆனால், அவருக்குத்தெரியாது எனக்கும் அவருக்கும் இருந்த 'நட்பு' எப்படி என்று. கல்லூரி கால கட்டத்தில், முதலாண்டு முதலே ஏதோ பிரச்சனையில் எங்களுக்கு நட்பேயில்லாமலிருந்தது. ஒரு முரட்டுத்தனம் கொண்ட நபராகவே இருப்பான். "கிராமத்திலிருந்துப் படிக்க வந்த உனக்கு இவ்வளவு திமிர்னா, நான் மதுரைக்காரண்டா.." என்பது போன்ற ஒரு அறியாமைப்பகை ஆரம்பித்து வளர்ந்திருந்தது.


இப்போதும், அதே தொனியில்தான் அவன் விசாரித்த விதம் இருந்தது. ஆனால், என்னால் இப்பொழுது அதைப்பெரிதாக எடுத்துக்கொள்ள இயலவில்லை. இருவருக்கும் வயதாயிருந்தது. நான் பெரிதாக ஏதும் ஆர்வம் காட்டிக்கொள்ளவில்லை. நண்பரிடம் ஏதெதோப் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்ப எத்தனிக்கையில், "இவ்வளவு தூரம் அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு என் காலேஜ் பிரண்டை கண்ல காட்டிட்டு..உடனே போறீன்ங்கீறிங்க..வாங்க..வீட்டுக்கு" என அதட்டும் தொனியில் கூறவே, சரி, தலையைக்காட்டிவிட்டு கிளம்பலாம் என சென்றோம். 


நல்ல பெரிய கிராமத்து வீடு. திண்ணை, முற்றம் என நன்றாக இருந்தது. திண்ணையில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தவுடன், தாத்தா என ஒரு பெண் குழந்தை ஓடி வந்து அவரைக்கட்டிக்கொண்டது. என்னைப்பார்த்து சிரித்து, "நான் பேத்தி எடுத்துட்டேன்பா..உங்கள மாதிரியில்ல..சீக்கிரமே கல்யாணம் ஆயிடுச்சு.." என்றபடி, கை விசிறி இரண்டை நீட்டினார். மேலே பேனிருந்தது. கரண்ட் இல்லை போலும் என நினைத்துக்கொண்டேன். சிறிது நேரத்தில், ஒரு தட்டு நிறைய நுங்கும், பெரிய கிளாஸ்களில் பதனியும் ஒரு நடுத்தரப்பெண் கொண்டு வந்து கொடுத்து வணக்கம் சொன்னார். "இதுதான் என் பொண்ணு ப்பா" என்றார்.

நீண்ட வருடங்களுக்குப்பின் நுங்கும் பதனீரும் தேவாமிர்தமாயிருந்தது. மீண்டும் கிளம்ப எத்தனித்தோம். "அது சரி, சாப்பிடாம யாரு விடுறது.." என்றபடி, "நாச்சியா.." என்றார். "உக்காரலாம்ப்பா" என்று குரல் உள்ளேயிருந்து வந்தது.  உள்ளே பாய் விரித்து, வாழை இலைப் போட்டு பரிமாறியிருந்தனர் தயாராய். என்ன சொல்வதெனத்தெரியாமல், சாப்பிட உட்கார்ந்தோம். வியர்த்து வழிந்தது. அப்போதும் அவர் பெண் கை விசிறியால் வீசினார். அவரோ ஒரு கையால் விசிறிக்கொண்டே, மடியில் பேத்தியை வேறு வைத்துக்கொண்டே சாப்பிட்டார்.  "ஏன் கரண்ட் இல்லையா" என்றேன்.  அவர் பேத்தி, "பேன் போடக்கூடாது..குருவி கூடு கட்டிருக்கு" என்றாள் மழலையில். "குருவி ஒரு இடம் விடாம கூடு கட்டி வச்சுருக்கு..பேன் போட முடியல..அதான்" என்றார் அவர் மகள் எங்களுக்கு விசிறியபடி.

நான் அவர் பேத்தியிடம், "உன் வீட்டுக்குள்ள வந்து, குருவி அது வீடு கட்டியிருச்சா.." என்றேன் சிரித்தபடி. "அதுக இடத்துல தான் நம்ம வீடு கட்டிருக்கோம்..இங்கின முன்னாடி மரந்தான் இருந்துச்சு.." என்றாள். எனக்கு ஆச்சரியமாய்ப்போனது அவள் பேச்சு. "அப்படியா..உனக்கு எப்படித்தெரியும்.." என்றேன். "தாத்தா சொல்லுச்சு.." என்று வெட்கப்பட்டுக்கொண்டாள். 

அப்படியொரு அழகு!