Monday, May 25, 2020

கொரோனா கோலங்கள் - உதவி

ஊரடங்கைத் தளர்த்தி ஓலா சேவைத் தொடங்கியவுடன், என் மனைவிக்கு அப்படியொரு திருப்தி. அவர் பெரும்பாலும், ஓலா ஆட்டோவினையே தெரிவு செய்வார் அவரது பயணங்களுக்கு. சிக்கனம் ஒரு புறம் இருந்தாலும், பாதுகாப்பு கருதியே அவர் இச்சேவையை தேர்ந்தெடுப்பார். பையனை டியூஷன் அனுப்பவதாகட்டும், மார்க்கெட் போவதாய் இருக்கட்டும். அதிலும், அவருக்கு வெளியூர் தனியே செல்கையில் மிக கைகொடுக்கும் என்பார். 

கடந்த இரண்டு மாதங்களாக எங்குமே செல்லவில்லை. ஓரிரு நல்லது, கெட்டது பார்க்க, விசாரிக்க வேண்டியிருந்தது. போதாக்குறைக்கு, என் பையன் இந்த ஊரடங்கில் மேலும் வளர்ந்திருந்தான். அவனுக்குத் தேவையான 'அவசிய' உடுப்புகள் வாங்க வேண்டியிருந்தது. இந்த சனி, ஞாயிறுகளில் பத்து பனிரெண்டு முறை பயணித்திருப்பார் என் மனைவி. ஒரே ஒரு நபர் மட்டும்தான் ஆட்டோவில் அனுமதி என்பதால், பெரும்பாலும் அவர் மட்டுமே தனித்தே பயணித்தார். எனக்கும் அலுவலிருந்தது. சில இடங்களுக்கு நானும் அவரும் பயணிக்க வேண்டியிருந்ததால், ஓலா கேப்பில் (இருவர் மட்டுமே அனுமதி) சென்றோம். 

காரில் ஏறி உட்கார்ந்து சில நிமிடங்களிலேயே என் மனைவி, டிரைவருடன் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். பொதுப்பேச்சு தான், கொரனோவைப்பற்றி. அவ்வளவுதான்..எல்லா டிரைவர்களும் சொல்லிவைத்தார் போல் புலம்பித் தள்ள ஆரம்பித்தனர், ஒவ்வொரு பயணத்தின்போதும். "வண்டி டியூ கட்ட முடியல, வீட்டு வாடகை, சுகர் பீபி மாத்திரை செலவு, புள்ளைக படிப்பு செலவு" ..என பட்டியலிட்டு பேசுவர்.  என் மனைவியும் கவனமாக கேட்டு பொதுவான ஆறுதல் வார்த்தை கூறுவார். நான் அவ்வளவாக பேசுவதும் இல்லை, அதிலும், பயணத்தில் தவிர்ப்பேன். அது, எனது சுபாவமாகிப்போனது. 

இறங்கும்போது ஒவ்வொரு முறையும் அவராகவே "நானே கொடுத்துக்கிறேன்..என்கிட்டே சில்லறையாவே இருக்கு" என்பார். நான் கூட சொன்னேன், "பேசாம ஓலா மணியில் பே பண்ணிடு, எதுக்கு பணத்தைத் தொட்டு ரிஸ்க் இந்த கொரோனா சமயத்தில.."

"நீங்க ஓலா மணிலா பே பண்ணி அவங்க அக்கவுண்டுக்கு போய் அதை எடுக்க ஏ டி எம் போய்..ஏ டி எம் ஒர்க் ஆவணும், அப்புறம் அதுல தேவையான நோட்டு கிடைக்கணும்..இம்சைங்க..அதுக்கு கையில கொடுத்துட்டு போனா.எவ்வளவு ஈஸி.." என நியாயப்படுத்தினார்.

இரண்டு முறை என்னிடமே பணம் கேட்டு வாங்கி கொடுத்தார். என் போனுக்கு வரும் தகவல் தொகையை விட அதிகமாகவே வாங்கி கொடுத்ததை கவனித்து கேட்டேன். "ஏய், என்ன அமௌன்ட் சொல்றாங்க..என்கிட்ட கேட்டுட்டு கொடு, மீதி கொடுக்கிறமாதிரியும் தெரியல.."

"..அவங்க கரெக்ட் ட்டா தான் சொல்றாங்க..நான்தான் கூட கொடுத்தேன்." என்றார்.

"அதுக்காக நூறு ரூபாய் வரை ஜாஸ்தி கொடுப்பியா..118 ரூ பில்லுக்கு 200 ரூ கொடுக்கிற..இப்படித்தான் எல்லார்கிட்டயும் கொடுத்தியா .." என்றேன். என்னை அறியாமல் குரல் உயர்ந்திருந்தது.

"அட, இந்தமாதிரி கண்ணுக்குத் தெரிஞ்சு கஷ்டப்படுறவங்களுக்கு கொடுத்துட்டு போங்களேன்..அத விட்டு, அந்த நிவாரண நிதி, இந்த நிவாரண நிதின்னு ஆன்லைன் ல எவ்வளவோ பே பண்ணுறீங்க..அது தேவை படுறவங்களுக்கு கிடைக்குதோ இல்லியோ.. இப்படி கஷ்டப்படறவங்ககிட்ட நாம பேசுறப்ப அவங்களுக்கு ஒரு ஆறுதலாவும் இருக்கும்..ஏதோ நம்மால முடிஞ்ச எக்ஸ்ட்ரா அமௌன்ட் கொடுக்கிறப்ப அவங்களுக்கும் எதோ ஒரு உதவியாயும் இருக்கும்.." என்று சாதாரணமாக சொன்னார்.

Friday, May 22, 2020

கொரோனா கோலங்கள் - மாத்தி யோசி ..!

வீட்டின் வாயிலில் யாரோ அழைக்கும் குரல் கேட்டது. ஒரு நபர் ஐம்பது வயதிருக்கும். மாஸ்க்கை விலக்கியபடி, சினேகமாக, "சார், முடி வெட்டணுமா, கட்டிங், ஷேவிங்..!" என்றார். எனக்கு மிக புதியதாய் இருந்தது. "கொரோனாநால கடையெல்லாம் திறக்கக்கூடாது..மாசக்கணக்கா ஆச்சு..நான் இந்த எரியலாதான் கடை வச்சுருக்கன் ..நிறைய கஸ்டமருங்க இங்கதான் குடியிருக்காங்க..அதான் வீடு, வீடா விசாரிப்போம்னு.." என்று இழுத்தவர், "ரொம்ப சுத்தமா இருக்கோம் சார், டெட்டால் லாம் கொண்டு வந்துருக்கேன்" என்றார். அதற்குள், என் மாமா பேச்சு சத்தம் கேட்டு வந்தவர் அடையாளம் கண்டு கொண்டார். இருவரும் நலம் விசாரித்துக்கொண்டனர். என் மாமா அவர் கஸ்டமராம்.

வீட்டின் பின் பக்கம் ஒரு சேரைப் போட்டு, தரை ஓரமாக அவர் கொண்டு வந்திருந்த பையை விரித்து கத்திரி, சீப்பு, டெட்டால் என மினி பார்பர் ஷாப்பை உருவாக்கி விட்டார். என் மாமாவிற்கு பரம சந்தோசம். ஒரு வழியாய் இன்று முடி வெட்ட முடிந்ததென்று. கழுத்தை சுற்றி ஒரு துண்டை மாமாவிடமே வாங்கி கட்டி விட்டு ஆரம்பித்தார். கத்திரி சத்தம் கேட்டு, "எத்தனை நாளாச்சு இந்த சத்தம் கேட்டு..!" குனிந்தவாறே குதூகலித்தார் என் மாமா. "அண்ணே, உங்களுக்கே இப்படின்னா, எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க ..!" என்றார் உணர்ச்சிவசப்பட்டவராய். நான் இருவரையும் வேடிக்கை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தேன்.

என் மாமா, "எப்ப இருந்து வரிங்க..நா கூட போன் நம்பர் வாங்காம போய்ட்டோமேன்னு கவலைப்பட்டேன்..மூணு மாசமாச்சா..ஒரே எரிச்சல்..நல்ல வேளை  வந்தீங்க.." என்றவர் "ஆமா, உங்க மகன் இருப்பானே, அவன் எந்த ஏரியா பக்கம்  போயிருக்கான் " என்றார்.

"அவனால தான் ணே இந்த யோசனையை வந்த்துச்சு..ரெண்டு மாசமா வீட்டில உக்காந்து பார்த்தோம் , எதோ ரேஷன் அரிசி,  யார்யாரோ கொடுத்த அரிசி,  பலசரக்குன்னு சமைச்சாலும் ..மனசு ஒப்பலை..வேல வெட்டி ப்பாக்காம டெய்லி சோத்துல காய் வைக்க மனசே வரலன்னே..என் மவனை ஏதாவது காய் பழம் வாங்கியாந்து ட்ரை சைக்கிள் ல விப்போம்டா சொன்னேன் ..துரை கேக்கலை..மூணு வேலையும் தின்னுட்டு டிவி பார்த்துட்டே இருப்பான்னே..சொரணையே இல்லாம..எல்லாத்தயும் மூடுனாங்களே..இந்த டிவி யா மூடமா விட்டாங்களேண்ணே..என் மருமவ முழுகாம வேற இருக்கா..அவளும் சமைச்சு ஓஞ்சு போனான்னே.." துண்டை உதறிப்போட்டார். "அம்மா விளக்குமார கொடுங்க ..நானே கூட்டிபோட்டுர்றேன்..!" கப்பில் தண்ணீரையும் டெட்டாலையும் கலந்தார். 

"கேளுங்கண்ணே..சும்மா இருந்தாலும் பரவால்ல துரை. கடைய (டாஸ்மாக்) திறந்தானுகல..ஆரம்பிச்சுட்டண்ணே..ரெண்டு நாள் குடிச்சான், காசே இல்லையே ..பொண்டாட்டி கயித்தோடதான் இருக்கு..பொட்டுத் தங்கம் விடாம வித்து குடிச்சாச்சு..எங்க போவாரு..துரை..கடைசியில வீட்டில இருந்த அரிசியெல்லாம் கொண்டுபோய் விக்க ஆரம்பிச்சுட்டாண்ணே ..புண்ணியத்துக்கு யாரோ பை பைய கொடுத்தது..அதுவும் புள்ளத்தாச்சி வெயில்ல போய் வாங்கினு வருவா..யாரவது சொல்லுவாங்க..அங்கே யாரோ கொடுக்கிறாங்க..இங்க கொடுக்கிறாங்க ன்னு..நானும் கேப்பேன்..போதுமா, எதுக்கு இவ்வளவ சேர்த்து வைக்கன்னு, எத்தனை நாள் ஆவும்னு தெரியலையே மாமா..கடை திறந்து..வியவாராம் ஆரம்பிக்க..ன்னு சொல்லும்..அப்படி மவராசி சேர்த்து வச்ச அரிசி பைய கொண்டு போய் வித்து குடிக்க ஆரம்பிச்சுட்டாண்ணே..தங்கத்தை, காசை தெரியாம ஒளிச்சு வச்சது போய் இப்ப இந்த குடிகாரன்ட்ட இருந்து அரசிய கூடவா ஒளிச்சு வக்கிறதுன்னு என் மருமவ ஒரே அழுகைண்ணே.." இப்போது ஷேவிங்கை ஆரம்பிக்கப்போனார். ரேசரை டெட்டால் தண்ணியில் அலசியெடுத்தார். 

"நாங்களும்தான் குடிச்சோம்..இல்லேண்ணு சொல்லலண்ணே..ஆனா, இப்படி வரமுறை இல்லாம குடும்பத்த பரிதவிக்கவிட்டெல்லாம் குடிக்கலன்னே..அப்ப ஓயாம போனா கடையில இருக்கவானே திட்டுவாங்க..அதுவும் ஓனரல்லாம் வயசான ஆளா இருப்பாங்கே..திட்டுவாங்கே ..குடும்பத்தை பாருடா..பொண்டாட்டி வயிறெரிய விட்டிராத ..பெரிய பாவம்டா..அது..குடி..வேணாங்கில அளவா குடி..ன்னு தானே சொல்லுவாங்க..நமக்கே சங்கடமா இருக்கும்..அவங்க முகத்தைப்பார்க்கவே" துண்டால் ஒற்றி எடுத்தார் கன்னம், நாடியெல்லாம். 

"சண்ட போட்டு போன துரை ரெண்டு நாளா காண்கில, மருமவ திங்காம, அழுத்திட்டே இருக்கு..அதுக்கு ஒண்ணும் வாய்க்கு வாங்கி கொடுக்க கூட முடியலேண்ணே அதான் யோசனை பண்ணேன்..யார் போன் நம்பரும் தெரியாது..நம்மளும் யாருக்கும் கொடுக்கில ..ஆனா, இந்த ஏரியால தான் எல்லா பேரு வீடும் இருக்கும்..அவங்களுக்கும் தேவை இருக்கும்..வீடு வீடா கேப்போம்..போன் நம்பரும் கொடுத்து வைப்போம்..தேவைப்படுறவங்க கூப்பிடுவாங்கல்ல..ன்னுட்டு.காலையில கிளம்பி வந்துட்டேண்ணே .." என்றவர், சுத்தமாக பெருக்கி முடியை ஒரு பழைய நியூஸ் பேப்பரில் கட்டி எடுத்துக்கொண்டார். "சிலவங்க சங்கட படுவாங்க வெட்டின முடிய வீட்ல போட்டு போனா..அதான்"

என் மாமா கொடுத்த பணத்தைக் கும்பிட்டு வாங்கி கொண்டவரிடம் அடுத்து எப்ப வருவீங்க இந்தப்பக்கம் என்றேன். "நம்பர் நோட் பண்ணிக்கோங்க தம்பி..கூப்புடுங்க..வந்துர்றேன்..!" என்று சிரித்தார்.


Saturday, May 16, 2020

கொரோனா கோலங்கள் - முட்டை சோறு

இன்று காலை வீட்டிற்கு தேவையான சில சாமான்களை வாங்கிக்  கொண்டு ரிலையன்சிலிருந்து வெளி வந்தேன். நீளமான வரிசை வெளியில் நிற்பதைப்   பார்க்கையில் நல்ல நேரத்தில் வந்தோம் என நினைத்துக் கொண்டேன். 

வாசல் அருகிலேயே இரண்டு, மூன்று பேர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். எல்லோரும் வயதானவர்கள். எல்லோர் முகத்திலும் அழுக்கேறிய 'மாஸ்க்குகள்'. போதாக்குறைக்கு கையில் வேறு ஒன்றிரண்டு வைத்திருந்தனர். யூகித்துக்கொண்டேன், கீழே கிடந்ததை எடுத்து வைத்துள்ளனர் என்று. எத்தனை பெரிய அபாயம். காசைக் கொடுத்தவாறு 'மாஸ்க்கை' ப் பற்றிக்கேட்டேன். "ஆமா, கீழதான் எடுத்தோம். சிலவங்க காரிலிருந்து கூட தூக்கி போடுவாங்க, இங்கின வர்றப்ப..பொறுக்கி வச்சுக்குவோம். அதை மூஞ்சில போடலன்ன திட்டறாங்க ..!" என்று சிரித்தார் ஒரு பெரியவர். அதை போட வேண்டாம், துண்டையோ, சேலையையோ முகத்தை போர்த்திக் கொள்ள அறிவுறுத்தினேன்.
 'மாஸ்க்' அணியும் புண்ணியவான்கள் அதை உபோயோகித்த பிறகு குப்பைத்தொட்டியில் போட்டால் புண்ணியமாய் போகும் என நினைத்துக்கொண்டேன்.

அவர்கள் அருகிலேயே ஒரு பெண்மணி , ஆறேழு வயது பையனுடன் நின்றிருந்தார். மிகவும் கூச்சமாக, "பையனுக்கு ஏதாவது சாப்பிட கொடுங்க ..பிஸ்கட், பன்னு..!" நன்றாகப்புரிந்தது அவர் பிச்சை கேட்க சங்கடப்படுகிறார் என்று. பார்க்க கிராமத்துப் பெண்மணி போலிருந்தார். அந்த பையன் என் பையையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.  
நான் அவனிடம், பேர் என்ன, ஸ்கூல் போகலையா என்றேன் வழக்கமாய் சிறுவர்களிடம் கேட்பது போல். "ஸ்கூல் லீவு ..!" என்றவாறு நான் கொடுத்த பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி கொண்டான். 
"ஜாலி தான..ஸ்கூல் லீவு ..!" என்று சிரித்தேன், எப்படியாவது ஒரு சிரிப்பை அவன் முகத்தில் பார்க்க வேண்டும் என்று.. 
"..இல்ல..!" என்றான் சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு. 
"ஸ்கூலுக்கு போகணுமா..ஏன்?" என்றேன், ஆச்சரியம் தாளாமல். 

"ஸ்கூல்ல தான் முட்டை சோறு கொடுப்பாங்க..!" என்றான்.

இச்சிறுவனைப் போல் எத்தனை பள்ளி செல்லும் சிறுவர் சிறுமியர் அவதிப்படுவர் ? அவர்களுக்காகவாது, இந்த கொரோனா ஒரு முடிவுக்கு வரவேண்டும். தயவு செய்து பிரார்த்திக்கொள்ளுங்கள்!


Friday, May 8, 2020

கொரோனா கோலங்கள்

இந்த கொரோனா காலகட்டத்தை கொ.மு  (கொரோனாவிற்கு முன்) கொ.பி (கொரோனாவிற்கு பின்) என பிரிக்கலாம் போலிருக்கிறது.

சமீப காலமாக எங்கள் தெருவில் நிறைய வியாபாரிகள் தட்டுப்படுகின்றனர். பெரும்பாலும் புதிய முகங்கள். குறிப்பாக காய், பழம், உதிரி பூ, அப்பளம், கருவாடு என விற்போர். என் அம்மா பெரும்பாலும் வாடிக்கையாய் வரும் அவர்களை அறிந்து வைத்திருப்பார். அவரே கண்டுணர்ந்தது நிறைய புது முகங்களை. அதிலும் ஒரு சிலர் தான் தினசரி வந்தனர். பெரும்பாலும் வாரம் ஒரு முறையோ, இரு முறையோ வந்தனர். சிலருக்கெல்லாம் வியாபாரம் வரவே இல்லை. அவர்களது கையாளுதலிலேயே கண்டுணர முடிந்தது. என் அம்மா வெளிப்படையாகவே அவர்களிடம் கேட்க, அழாத குறையாக ஒப்பு கொள்வர். அவர்கள் எல்லாம் வேறு ஏதோ தொழில் புரிந்தவர்கள். எத்தனை நாள் சும்மா இருக்க முடியும். அவர்களால் முடிந்ததை வியாபாரம் செய்யத் துவங்கி விட்டனர் என்பது தெரிய வந்தது.


உதிரி பூ விற்கும் பெண்மணி ஒருவர், வீட்டு வேலை செய்பவராம். போய் வர பஸ்ஸோ, ஷேர் ஆட்டோவோ இல்லை. அதையும் மீறி நடந்தே போனவரை வேலைக்கு வரவேண்டாம் என விரட்டியே விட்டனராம். வீட்டிற்குள் விடாமல் அவர்கள் செய்தது அந்த அம்மாவிற்கு என்னவோ போலாகிவிட்டது. "எத்தனை வருஷம் வேலை பார்த்திருக்கேன். அன்னிக்கு அவ்வளவு தூரம் நடந்தே போனேன்..அதுவும் பாவம் வீட்டு வேலை செய்ய கஷ்டப்படுவாங்களே ன்னு, மனசு கேட்காம போனேன். கதவை கூட திறக்காம வெளியவ நிக்க வச்சு அனுப்பிச்சிட்டாங்க..மனசு ஆத்தாமா போகுது.." என்றவர் "ரேஷன்ல அரிசி கொடுக்கிறான்..குழம்பு காய்க்கு எங்கே போறது..அதான் உதிரி பூ வாங்கி விக்கிறேன், வேற ஏதும் தெரியாதே..பூ கட்ட தெரிஞ்சா கூட பூ தோத்து விக்கலாம்..அதுவும் தெரியாது..ரெண்டு புள்ளைக இருக்கு..முன்ன வீட்டு வேலை முடிஞ்சு போறப்ப எதோ சாப்பிட கொடுப்பாங்க..புள்ளைங்களுக்கு கொடுப்பேன்..!" என்றார்.

-----

வடகம் விற்று கொண்டு வந்தார் ஒரு பெரியவர். கூழ் வடகம், ஜவ்வரிசி வடகம், வெங்காய வடகம் என பிளாஸ்டிக் கவரில் போட்டு மெழுகு வர்த்தியால் சீல் செய்யப்பட்டிருந்தது. பார்க்கவே பாவமாக இருந்தது. டீ கடையில் வடை போடுபவராம். டீ கடைதான் இல்லையே என்ன செய்வது. அக்காவும் தம்பியுமாம். கல்யாணமும் ஆகவில்லை. காலம் உருண்டோடிப்போனது. அக்கா ஏதோ ஆபிஸில் பெருக்கி சுத்தம் செய்யும் வேலை பார்த்து வந்தாராம். இப்போது இரண்டு பேருமே பிழைப்புக்கு வழியின்றி இருக்க அக்கா வடகம் போட்டு கொடுக்க, தம்பி விற்க வருகிறார். "ரேஷன் அரிசியும், வெயிலும் கை கொடுக்க ஏதோ அரை வயிறு, கால் வயிறு ரொம்புது" என்றார்.  அவரால் கூவி கூட விற்க முடியவில்லை. ஏதோ விலாசம் கேட்பது போல் வீடு வீடாய் போய் கேட்கிறார்.

------

ட்ரை சைக்கிளில் ஒரு வயதான தம்பதி சமேதம் கீரை விற்க வந்தனர். அவர் சைக்கிளை தள்ளி கொண்டு வர, அந்த அம்மா சைக்கிளில் உட்க்கார்ந்து வந்தார். அந்த அம்மாவின் முகம் ஏதோ ஒரு வெட்கத்திலேயே இருக்கும். வாரம் இரு நாட்கள் மட்டும் தான் வந்தனர். கேட்டதற்கு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஏரியாவாக வியாபாரம் செய்கின்றனராம். அவர், ட்ரை சைக்கிளில் லோடு அடிப்பவராம். வீட்டம்மா ஸ்கூல் வாசலில் பெட்டி கடை வியாபாரமாம். "முதல்ல சங்கடப்பட்டா..ஆள் தாட்டியா இருக்கிறதுனால நடக்க முடியாதுன்னு ..நான்தான் உள்ளயே உக்காரு..நான் ஓட்டிட்டு போறேன்..நீ கீரையை கொடுத்து காச வாங்கிக்கன்னு.. என்ன.. ஒரு பசிக்கு டீ கூட குடிக்க முடியமாட்டேங்குது..முன்னெல்லாம் கட்டு கட்டா பீடி குடிப்பேன் லோடு அடிக்கிறப்ப..இப்ப ஒரு மாசமா இல்லவே இல்ல..என் வீட்டம்மா எத்தனை வாட்டி சொல்லிருக்கும் .." என்று சிரித்தார்.

-----

ஒரு பெண்மணி வாழை ஸ்பெஷலிஸ்ட். வாழைத் தண்டு, வாழைக் காய், வாழைப் பூ மட்டும் விற்பார். சிலைமான் பக்கம் ஏதோ கிராமமாம். போக்குவரத்து ஏதும் இல்லாததால், வாழைத் தோப்பெல்லாம் வீணாய் போகிறது. ஒவ்வொரு நாளும் வெட்டி எடுத்து வந்து விற்கிறார். வீட்டுக்காரர் டூ வீலரில் ரிங் ரோட்டருகில் விட்டு விடுவாராம். அதற்கு மேல் அனுமதியில்லை. போலீஸ் கெடுபிடியில் இவர் வருவதே சிரமம் என்பார். அப்படியிருந்தும் சில நாள் மனசு கேட்காமல் அவர் வண்டியில் தேடி வந்துவிடுவார். ஓரிரு சமயம், இந்த அம்மா வண்டியில் பின்னாடி கூடையுடன் உட்கார்ந்து வியாபாரம் பார்க்கும். வண்டியில் உட்கார்ந்துக் கொண்டே புருஷனும் பொண்டாட்டியும் வாழைக் காய், வாழைப் பூ என கூவி வருவர். 

பாவம், இன்றைக்கு அந்தப் பெண்மணி மட்டும் வந்தார். அழுது வீங்கியிருந்தது முகம். என் அம்மா என்னவோ ஏதோவென்று விசாரிக்க, "ஒரு மாசமா நல்லா இருந்தாம்மா, கூட மாட ஒத்தாசையா..கிரகம், நேத்து கடைய (டாஸ்மாக்) திறக்கவும் போய்ட்டாம்மா..தலையெழுத்து..!" என்று தலையில் அடித்துக் கொண்டார்.