Friday, May 8, 2020

கொரோனா கோலங்கள்

இந்த கொரோனா காலகட்டத்தை கொ.மு  (கொரோனாவிற்கு முன்) கொ.பி (கொரோனாவிற்கு பின்) என பிரிக்கலாம் போலிருக்கிறது.

சமீப காலமாக எங்கள் தெருவில் நிறைய வியாபாரிகள் தட்டுப்படுகின்றனர். பெரும்பாலும் புதிய முகங்கள். குறிப்பாக காய், பழம், உதிரி பூ, அப்பளம், கருவாடு என விற்போர். என் அம்மா பெரும்பாலும் வாடிக்கையாய் வரும் அவர்களை அறிந்து வைத்திருப்பார். அவரே கண்டுணர்ந்தது நிறைய புது முகங்களை. அதிலும் ஒரு சிலர் தான் தினசரி வந்தனர். பெரும்பாலும் வாரம் ஒரு முறையோ, இரு முறையோ வந்தனர். சிலருக்கெல்லாம் வியாபாரம் வரவே இல்லை. அவர்களது கையாளுதலிலேயே கண்டுணர முடிந்தது. என் அம்மா வெளிப்படையாகவே அவர்களிடம் கேட்க, அழாத குறையாக ஒப்பு கொள்வர். அவர்கள் எல்லாம் வேறு ஏதோ தொழில் புரிந்தவர்கள். எத்தனை நாள் சும்மா இருக்க முடியும். அவர்களால் முடிந்ததை வியாபாரம் செய்யத் துவங்கி விட்டனர் என்பது தெரிய வந்தது.


உதிரி பூ விற்கும் பெண்மணி ஒருவர், வீட்டு வேலை செய்பவராம். போய் வர பஸ்ஸோ, ஷேர் ஆட்டோவோ இல்லை. அதையும் மீறி நடந்தே போனவரை வேலைக்கு வரவேண்டாம் என விரட்டியே விட்டனராம். வீட்டிற்குள் விடாமல் அவர்கள் செய்தது அந்த அம்மாவிற்கு என்னவோ போலாகிவிட்டது. "எத்தனை வருஷம் வேலை பார்த்திருக்கேன். அன்னிக்கு அவ்வளவு தூரம் நடந்தே போனேன்..அதுவும் பாவம் வீட்டு வேலை செய்ய கஷ்டப்படுவாங்களே ன்னு, மனசு கேட்காம போனேன். கதவை கூட திறக்காம வெளியவ நிக்க வச்சு அனுப்பிச்சிட்டாங்க..மனசு ஆத்தாமா போகுது.." என்றவர் "ரேஷன்ல அரிசி கொடுக்கிறான்..குழம்பு காய்க்கு எங்கே போறது..அதான் உதிரி பூ வாங்கி விக்கிறேன், வேற ஏதும் தெரியாதே..பூ கட்ட தெரிஞ்சா கூட பூ தோத்து விக்கலாம்..அதுவும் தெரியாது..ரெண்டு புள்ளைக இருக்கு..முன்ன வீட்டு வேலை முடிஞ்சு போறப்ப எதோ சாப்பிட கொடுப்பாங்க..புள்ளைங்களுக்கு கொடுப்பேன்..!" என்றார்.

-----

வடகம் விற்று கொண்டு வந்தார் ஒரு பெரியவர். கூழ் வடகம், ஜவ்வரிசி வடகம், வெங்காய வடகம் என பிளாஸ்டிக் கவரில் போட்டு மெழுகு வர்த்தியால் சீல் செய்யப்பட்டிருந்தது. பார்க்கவே பாவமாக இருந்தது. டீ கடையில் வடை போடுபவராம். டீ கடைதான் இல்லையே என்ன செய்வது. அக்காவும் தம்பியுமாம். கல்யாணமும் ஆகவில்லை. காலம் உருண்டோடிப்போனது. அக்கா ஏதோ ஆபிஸில் பெருக்கி சுத்தம் செய்யும் வேலை பார்த்து வந்தாராம். இப்போது இரண்டு பேருமே பிழைப்புக்கு வழியின்றி இருக்க அக்கா வடகம் போட்டு கொடுக்க, தம்பி விற்க வருகிறார். "ரேஷன் அரிசியும், வெயிலும் கை கொடுக்க ஏதோ அரை வயிறு, கால் வயிறு ரொம்புது" என்றார்.  அவரால் கூவி கூட விற்க முடியவில்லை. ஏதோ விலாசம் கேட்பது போல் வீடு வீடாய் போய் கேட்கிறார்.

------

ட்ரை சைக்கிளில் ஒரு வயதான தம்பதி சமேதம் கீரை விற்க வந்தனர். அவர் சைக்கிளை தள்ளி கொண்டு வர, அந்த அம்மா சைக்கிளில் உட்க்கார்ந்து வந்தார். அந்த அம்மாவின் முகம் ஏதோ ஒரு வெட்கத்திலேயே இருக்கும். வாரம் இரு நாட்கள் மட்டும் தான் வந்தனர். கேட்டதற்கு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஏரியாவாக வியாபாரம் செய்கின்றனராம். அவர், ட்ரை சைக்கிளில் லோடு அடிப்பவராம். வீட்டம்மா ஸ்கூல் வாசலில் பெட்டி கடை வியாபாரமாம். "முதல்ல சங்கடப்பட்டா..ஆள் தாட்டியா இருக்கிறதுனால நடக்க முடியாதுன்னு ..நான்தான் உள்ளயே உக்காரு..நான் ஓட்டிட்டு போறேன்..நீ கீரையை கொடுத்து காச வாங்கிக்கன்னு.. என்ன.. ஒரு பசிக்கு டீ கூட குடிக்க முடியமாட்டேங்குது..முன்னெல்லாம் கட்டு கட்டா பீடி குடிப்பேன் லோடு அடிக்கிறப்ப..இப்ப ஒரு மாசமா இல்லவே இல்ல..என் வீட்டம்மா எத்தனை வாட்டி சொல்லிருக்கும் .." என்று சிரித்தார்.

-----

ஒரு பெண்மணி வாழை ஸ்பெஷலிஸ்ட். வாழைத் தண்டு, வாழைக் காய், வாழைப் பூ மட்டும் விற்பார். சிலைமான் பக்கம் ஏதோ கிராமமாம். போக்குவரத்து ஏதும் இல்லாததால், வாழைத் தோப்பெல்லாம் வீணாய் போகிறது. ஒவ்வொரு நாளும் வெட்டி எடுத்து வந்து விற்கிறார். வீட்டுக்காரர் டூ வீலரில் ரிங் ரோட்டருகில் விட்டு விடுவாராம். அதற்கு மேல் அனுமதியில்லை. போலீஸ் கெடுபிடியில் இவர் வருவதே சிரமம் என்பார். அப்படியிருந்தும் சில நாள் மனசு கேட்காமல் அவர் வண்டியில் தேடி வந்துவிடுவார். ஓரிரு சமயம், இந்த அம்மா வண்டியில் பின்னாடி கூடையுடன் உட்கார்ந்து வியாபாரம் பார்க்கும். வண்டியில் உட்கார்ந்துக் கொண்டே புருஷனும் பொண்டாட்டியும் வாழைக் காய், வாழைப் பூ என கூவி வருவர். 

பாவம், இன்றைக்கு அந்தப் பெண்மணி மட்டும் வந்தார். அழுது வீங்கியிருந்தது முகம். என் அம்மா என்னவோ ஏதோவென்று விசாரிக்க, "ஒரு மாசமா நல்லா இருந்தாம்மா, கூட மாட ஒத்தாசையா..கிரகம், நேத்து கடைய (டாஸ்மாக்) திறக்கவும் போய்ட்டாம்மா..தலையெழுத்து..!" என்று தலையில் அடித்துக் கொண்டார்.


1 comment:

ravi said...

சிவசங்கர் எத்தனையோ குடும்பங்கள் உணவுக்கே போராடி தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன இந்த சூழ்நிலையில் டாஸ்மாக் கடையை திறந்தால் அந்த குடும்பத்து ஆட்களும் கடைக்கு வருவார்களே என்ற எண்ணமே இல்லாமல் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.கொரோனா லேசில் விடாது போலிருக்கிறது.