Thursday, January 20, 2022

செல்லாக்காசு

சில வருடங்களுக்கு முன் பார்த்த ஒரு பெரியவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அவர், இதற்கு முன் நாங்கள் குடியிருந்த வீட்டு பக்கத்து வீட்டுக்காரரின் அப்பா. சொல்லப்போனால், அவரை வைத்துதான் நாங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடம் பழக ஆரம்பித்தோம். அங்கே நாங்கள் வசித்த போது, பக்கத்து வீட்டு நபர்கள் அவ்வளவாய் பழக்கம் இல்லை. இத்தனைக்கும் அவர்கள் தமிழ் காரர்கள்தான். ஒரு கணவன் மனைவி, ஒரு பெண் குழந்தை. ஆரம்பத்தில் நாங்கள் குடி போனபோது, வலிய பேசியும் அவர்கள் அவ்வளவாய் விருப்பம் காட்டவில்லை. நகரத்திற்கே உரித்தான குணம் அது. ஏதோ ஒரு பயம் யாரிடமும் பேசி பழகுவதற்கு. ஏதும் உதவி கேட்டு விடுவார்களோ இல்லை அவர்களால் ஏதும் பிரச்சனை வருமோ என தனித்தே இருக்க பழகிக்கொண்டனர்.

அவரின் அப்பா ஊரிலிருந்து வந்திருந்தார். வயதான சம்சாரி தோற்றம். பார்த்தவுடன் மிக யதார்த்தமாய் பழக ஆரம்பித்தார். நான் தமிழ், ஆங்கிலம் என இரு தினசரிகள் வாங்குவேன். அவருக்கு தினமும் நாளிதழ் படிக்க வேண்டும். அவர் பையனுக்கு நாளிதழ் வாங்கும் பழக்கமில்லை. தினமும், எங்கள் வீட்டிற்கு காலையில் வருவார், நாளிதழ் படிப்பார். ஊர், விவசாயம், அரசியல் என எல்லாம் பேசுவார். 

எனக்கும் மனைவிக்கும் அவரைப்பிடித்துப்போனது. வெள்ளந்தியாய்ப்பேசுவார். எங்களுக்குத் தெரியாத நிறைய காய்கறிகள், பழங்கள் பற்றிய தகவல் தெரிவிப்பார். குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு குறித்து அறிவுறுத்துவார். அவர் கூறும் தகவல்களெல்லாம் பெரும் பொக்கிஷமாயிருக்கும் என் மனைவிக்கு.  பகலில், அவர் பேத்தியை ஸ்கூலில் விட, கூட்டி வர என போய் வந்தாலும், மருமகளுக்கு வீட்டில் துணி காயப்போட, பாத்திரம் கழுவ, காய் நறுக்க என எல்லா ஒத்தாசையும் செய்வார். 


அவரிடம் அவர் மகனோ, மருமகளோ அவ்வளவு பேசிப்பார்த்ததில்லை. எல்லாம் பேத்தி மூலம்தான். "காப்பி குடிக்க வா..சாப்பிட வா தா.. த்தா" என வெளியே உட்கார்ந்திருப்பவரை அழைப்பாள். டி. வி பார்க்க மாட்டார். இரண்டு, மூன்று மாதங்கள் கடந்திருக்கும். ஒரு நாள் ஊருக்கு கிளம்பறேன்யா..என்றார். என்னப்பா..அம்மா ஞாபகம் வந்திட்டா..என என் மனைவிதான் பகடி செய்தாள். சிரித்தபடியே, ஆமா..வராமலா..என கிளம்பிப்போனார். 

அவர் போனபின், வழக்கம்போல் அவர்கள் அப்படியொன்றும் பேசுவதில்லை. எப்பவாது, நான் அவர் பையனிடம் அப்பாவைப்பற்றிக் கேட்பதுண்டு. 'ம்ம்..நல்லாருக்காரு..' என்பான் அவ்வளவுதான்.

அதன்பின், ஒரு வருடத்துக்குள்ளேயே நாங்கள் அங்கிருந்து வேறு வீட்டிற்கு மாற்றலாகிப்போனோம். என் பையன் ஸ்கூலுக்காக அருகிலேயே மாற்ற வேண்டியதாய்ப்போனது. நாட்கள் ஓடிப்போனது..கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் கழித்து அவரைப்பார்க்க நேர்ந்தது.


அத்திப்பள்ளி பஸ் ஸ்டாப்பில் பெரியவர் ஒருவர், ஒவ்வொருவரிடமும் கையில் ஒரு சிறு அட்டையைக் காண்பித்து போன் பண்ண கேட்டுக்கொண்டிருந்தார். யாரும் முன் வரவில்லை. எல்லார் கையிலும் போன் இருந்தது. எல்லாரும் எதையோப்பார்த்துக்கொண்டுதானிருந்தனர். "பேலன்ஸ் இல்லை, பேட்டரி இல்லை..இப்ப எனக்கு ஒரு போன் வரும்.." என சொல்லிக்கொண்டிருந்தனர்.


நான் சிரித்துக்கொண்டே கையை நீட்டி அந்த அட்டையை வாங்கினேன். அதில் ஒரு பெயரும், போன் நம்பரும் இருந்தது. அவரை எங்கேயோப்பார்த்ததுப் போலிருந்தது. அடையாளம் கண்டு கொண்டேன். மிக தளர்ந்திருந்தார். மிக வறுமையாயுமிருந்தார். நான் பழைய, பழகிய விஷயங்களை கூறியதும் அவருக்கு ஞாபகம் வந்ததா என தெரியவில்லை. ஆனால், பொதுவாக என்னை, குடும்பத்தைப்பற்றி விசாரித்தார். நான் பேசிக்கொண்டே "வாங்கப்பா..காபி, டீ சாப்பிடலாம்.." என்றேன். மறுத்துவிட்டு, "போன் மட்டும் பண்ணி சொல்லுப்பா..நான் ரொம்ப நேரமா இங்கியே..நிக்குறேன்..யாரும் வரல..ன்னு".


நான் போன் செய்ததும் 'ட்ரூ காலரில்' தங்கம் என வந்தது. ஒரு பெண்மணி எடுத்ததும் அவரிடம் நீட்டினேன். அவர் என்னையே பேச சொன்னார். நான் அப்போதுதான் அவர் பெயர் கேட்டேன். சண்முகம் என்றார். நான் போனில் விபரம் கூறியதும், அப்பெண்மணி அந்தப்பக்கம் யாரிடமோ "நம்மதான் ஊருக்குப்போறேன்னு சொன்னோம்லா..அப்புறமும் உங்கண்ணே அனுப்பிச்சு வச்சுருக்காருப் பாருங்க..கூட ஒரு மாசம் வச்சுக்க முடியல..அங்கயே திரும்ப போச்சொல்றேன்..நானே.." என்றபடி என்னிடம், "சார்..அவர்ட்ட..நாங்க ஊருல இல்லை..திரும்பப்போகச் சொல்லுங்க.." என்றார். நான் அப்பாவியாய், "எங்கேங்க.." என்றேன். "ஆங்க்..எங்கிருந்து வந்தாரோ..அங்கியே..அவருக்குத்தெரியும்..ல்லாம்!" என்றபடி போனை கட் செய்தார்.


நான் அவரைப்பார்க்க தலையை குனிந்துக்கொண்டார். அவ்வளவு சத்தமாய் அந்தப்பக்கம் பேசியது கேட்டிருக்கிறது.

 "எந்தப்பக்கம்பா...ஓசூர் வண்டி நிக்கும்?" எனக்கேட்டார். கண்கள் பனித்திருந்தது. ரோட்டின் மறுபக்கம் அவரை அழைத்துக்கொண்டு சென்றேன். அங்கேயிருந்த பேக்கரி கடையில் நுழைந்தார். இரண்டு பிஸ்கெட் பாக்கெட் வாங்கி "பேரப்பிள்ளைகளுக்கு கொடு" என என்னிடம் கொடுத்தபடி, நூறு ரூபாயை கடைக்காரனிடம் நீட்டினார். கடைக்காரன் "இது ஓகல்லாறீ..(போகாது)" என்றான். அவர் புரியாமல் பார்க்கவும் நோட்டை விரித்துக்காண்பித்தான். நடுவில் கிழிந்திருந்தது.."செல்லாதா..?" என்றபடி விக்கித்துப்போனார். நான் வாங்கிக்கொண்டு, என்னிடமிருந்த நோட்டைக்கொடுத்தபடி, "எரடு டீ கொடீ.." என்றேன். அவர், "என்னப்பா..நாந்தானே வாங்க்கிக்கொடுக்கணும்..பேரப்பிள்ளைகளுக்கு.." என்றார். "ப்பா..நான் பேங்கில மாத்திக்கிறேன்..நீங்க அதுக்குப்பதிலா இந்த நோட்ட வச்சுக்குங்க" என்று என்னிடமிருந்த நோட்டைக்கொடுத்தேன்..டீயைக்குடித்தப்படி, "ஒரு நல்ல நோட்டு கூட கொடுக்க மாட்டேங்கறாய்ங்க..என் பிள்ளைங்க.." 

"செல்லாத நோட்டை யாரும் வச்சிக்க மாட்டாய்ங்க..தள்ளிவிட்டுட்டே இருக்கத்தான் பாப்பாய்ங்க..நம்மட்ட இல்லாதவரைக்கும் தப்பிச்சோம்னு நினைப்பாய்ங்க.." என்றார் டீயைப்பார்த்தபடி. "நானும் செல்லாகாசு என் பிள்ளைகளுக்கு..ஒருத்தர் மாத்தி, ஒருத்தர்ட்ட..தள்ளி விட்டுட்டே இருக்கானுக..என் பொண்ட்டாடியப்பார்த்து மூணு வருஷமாச்சுப்பா..மூணு பசங்க..ஒவ்வொருத்தன் வீட்டிலேயும் நாலு மாசம்..நான் ஒருத்தன் வீட்டில..அவ ஒருத்தன் வீட்டில.. இப்படியே தவணைப்போடுறானுக.." என்று வெம்பினார்.

எனக்கு என்ன சொல்வதெனப்புரியவில்லை. அவரையேப்பார்த்துக்கொண்டிருந்தேன். அவர், "நமக்குன்னு ஒரு வீடு..கொஞ்சம் காசு பணம் வச்சுக்கனும்பா..எல்லாத்தயும் பிள்ளைக்கே கொடுன்னா..கிறுக்கி..இப்ப செல்லாக்காசாப் போயாச்சு.." என்றார்.

பஸ்ஸ்டாப்பில் வந்து நின்றோம். "வீட்டுக்கு வாங்கப்பா..சாப்பிட்டு நாளைக்கு கூட போலாம்.." என்றேன். "அதெல்லாம் வேணாம்பா..என் பேரப்பிள்ளைகளுக்கு நானே ஒண்ணும் வாங்கிக்கொடுக்கலன்னு கவலையாயிருக்கு.." "நா பாத்து போயிடுவேன்..நீ சூதானமா..போப்பா"என்றார். மனமேயில்லாமல் அவரை பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தேன்.


வீட்டிற்கு வரும் வழியில், பஸ்ஸில் அமந்தபடி அந்த டயல் செய்த நம்பரை திரும்பப்பார்த்தேன். வாட்ஸ் அப் போட்டோ இருந்தது. அதில், தங்கம் சிரித்தபடி சோபாவில் உட்கார்ந்திருந்தார் மடியிலும், தோளிலுமாய் இரு நாய்களோடு!

-------