Tuesday, March 14, 2023

ராஜ குரு

வழக்கமாய் கேட்கப்படும் கேள்வி. காலம் காலமாய் நாம் சிறுவர்களாயிருந்தபோதும் கேட்கப்பட்ட கேள்வி, இப்போதும் கேட்கப்படும் கேள்வி. " நீ என்னவாகப் போகிறாய்..?, What is your ambition?" 

நாங்கள் படிக்கும்போதும் கேட்கப்பட்டது. ஒவ்வொரு வகுப்பு தேர்ச்சி பெற்று செல்லும்போதும் ஆசிரியர்களால் கேட்கப்படுவது. வீட்டு விருந்தினர்களாலும் கேட்கப்படுவது. மாறாமல், பெரும்பாலும் டாக்டர் என்றே வரும். நான் எப்போதும் டாக்டர் தான். என் அண்ணன் இஞ்சீனியர் என்பான். பொருள் புரிந்து சொன்னனா எனத் தெரியாது. ஆனால், சொன்ன மாதிரி ஆகியும் விட்டான். இன்னொரு அண்ணன் ஆபீசர் என்றான். இப்போது அரசு உயரதிகாரியாய் உள்ளான். டாக்டர் என்று சொன்ன நான்தான் மருத்துவ பிரதிநிதியாய்ப் போனேன். "மெடிக்கல் ரெப்பும் டாக்டர் மாதிரிதான், எல்லா வியாதிக்கும் மாத்திரை தெரியும், எங்க வீட்டு டாக்டர்..!" என்று சொந்தக்காரர்களிடம் என் அம்மா என்னைப் பற்றி சொல்லும்போது, "எது..!" என்ற வடிவேல் மீமதான் நினைவிற்கு வரும். 


சுமார் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் அதே கேள்வி கேட்கப்பட்டது. என் அப்பா மத்திய அரசு பணியில் இருந்தார். மூன்று ஆண்டுகள் ஒரே ஊரில் இருப்பது பெரிய ஆச்சரியம். ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும் அடுத்து எந்த ஊரோ என என் அம்மா கவலையோடிருப்பார். விழுப்புரதிலுருந்து ராஜபாளையம் மாற்றலாகியது. என் அண்ணனை நாடார் பள்ளியிலும், என்னை அன்னப்பராஜா பள்ளியிலும் சேர்த்துவிட்டார் எங்கள் அப்பா. எப்போதுமே நாங்கள் இருவருமே ஒரே பள்ளியில் படித்ததில்லை. வேறு வேறு பள்ளிகள்தான். என் அம்மா கூட கேட்பார்கள், என் அப்பா அது நல்லாயிருக்காது வேணாம் என்பார். இத்தனைக்கும் என் அப்பா, பெரியப்பா சித்தப்பா என ஐந்து பேரும் சின்ன வயதில் ஒரே பள்ளியில் படித்தவர்கள். அவர் என்ன அனுபவித்தாரோ தெரியவில்லை. 


நான் சேர்ந்த பள்ளியில் பெரும்பாலும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மாணவர்கள் படிக்க வந்தனர். என் அப்பா என்னை வகுப்பில் விட்டு செல்லும்போது மொத்த பள்ளியும் பார்த்தது. பேண்ட் ஷர்ட் கூலிங் கிளாஸ் என்று அவர் ஒரு ஜேம்ஸ் பாண்ட் போலிருப்பார். வெள்ளை சட்டை, நீல அரை கால் டிரவுசர். சுமார் நாற்பது மாணவர்கள், பெரிய வகுப்பறை. பெரும்பாலும் காட்டன் சீருடையிலிருந்தனர். அப்போது டெர்ரி காட்டன் என்பது பெரிய வசதியானவர்கள் அணிவது. வெகு சில மாணவர்களே அணிந்திருந்தனர். அதில் நானும் ஒருவன். முதல் பெஞ்சில் போய் அமர்ந்தேன். என் அப்பாவிடம் பேசிவிட்டு உள்ளே வந்த ஆசிரியர் என்னிடம், " இவ்வளவு உயரமா இருந்துக்கிட்டு முன்னாடி உட்கார்ர.. போய் கடைசியில உக்காறு.." என்றார். கடைசி பெஞ்சா என திகைத்துப் போனேன். அவர் சொல்லி முடிக்கவும் ஒரு பொடியன் முதல் பெஞ்சிலிருந்து எழுந்து என்னிடம் வந்து " என் பெயர் மாரிமுத்து, கிளாஸ் லீடர் !" என்றபடி வகுப்பிற்கு முன் நின்று ஒரு நோட்டம் பார்த்தான். "கருப்பையா, ராஜகுரு உங்களுக்கு இடையில இடம் கொடுங்க நம்ம வகுப்பு புது மாணவருக்கு.. " என்னைப்பார்த்து "உன் இடத்திற்கு போய் உன்னை வகுப்பிற்கு அறிமுகப் படுத்திக்கொள்..!" என்றான். வகுப்பு ஆசிரியரோ உட்கார்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். வகுப்பு மொத்தமும் அமைதியாயிருந்தது. மூன்று பேர் அமரும் மரத்திலான டெஸ்க் அது. கடைசி வரிசையில் நடுவில் இருந்தது. இருவரும் எழுந்து கொள்ள நான் நடுவில் போய் நின்றேன். மொத்த வகுப்பும் என்னைப்பார்த்தது. எனக்கு இதெல்லாம் புதிது. அப்போதுதான் கவனித்தேன் வகுப்பின் இடது முதல் வரிசையில் ஆறு பெண்கள் அமர்ந்திருந்தனர் தூக்கி வாரிப்போட்டது. இது கோ எஜுகேஷன் ஸ்கூல் லா.. என்று. 

" உன்னைப்பற்றி சொல்.. " என்றான் மாரிமுத்து. "my name is sivasankar.. my father name is..subrmanian.. i am 13 years old..i studied in villupuram.." என மனப்பாடம் வெளிவந்தது. முதல் நாள் என் அக்கா சொல்லிக்கொடுத்தது. "ஸ்கூல் எச் எம் கேட்டா சொல்லு அப்பதான் சேத்துக்குவாங்க.." என்று பயிற்சி கொடுத்திருந்தாள். நான் சொல்லி முடிக்கவும் மொத்த வகுப்பும் கை தட்டியது. பெருமை தாங்கவில்லை எனக்கு. தலையை நிமிர்த்தாமலேயே வகுப்பாசிரியர், "மாரியம்மா, புரிந்ததா? எனக் கேட்க.. மாரியம்மா எழுந்து நின்றாள். தாவணி அணிந்திருந்த ஒரே பெண் ஆறு மாணவிகளில். பேசாமல் நிற்க, " கனக சபாபதி .." என்றார். ஒரு மூலையில் எழுந்து நின்றான். என்னைப் பார்த்து சிரித்த ஆசிரியர், "மாரிமுத்து நீயே வகுப்புக்கு சொல்லிடு.." என்றார். நான் சொல்லியதை அப்படியே தமிழில் சொன்னான் மாரிமுத்து. இப்போதும் கை தட்டியது வகுப்பு. ஆனால், இது எனக்கல்லா எனப் புரிந்து கொண்டேன். 

மற்றபடி சிரிப்போ வேறு பேச்சோ இல்லை வகுப்பில். ஆசிரியர், " அப்புறமாய் ஒவ்வொருவரும் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.. என்றவர் " இன்று முதல் வகுப்பு இன்னும் டைம் டேபிள் வரவில்லை" என்றபடி ambition என்ற வார்த்தையை கரும்பலகையில் எழுதினார். எத்தனைப் பேருக்கு இந்த வார்த்தை, இதன் அர்த்தம் தெரியும் எனக் கேட்க சொற்ப கைகள் தூக்கியிருந்தது. 'நோக்கம், குறிக்கோள் லட்சியம் என ஒவ்வொருவராய் சொல்ல என் முறை வந்தது. "my ambition is to become a doctor' என சொல்ல ஆசிரியர் வெரி குட் என்றார். எனக்கோ பெருமை தாள வில்லை. என் அக்காவை நன்றியுடன் நினத்துக் கொண்டேன். 

விளக்கம் அளித்து, ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் அவரவர் ambition பற்றி கூறி கேட்க பெரும்பாலும் விவசாயம் என்றனர். (பின்னாளில் தெரிந்து கொண்டேன் அவர்கள் விவசாயம் பார்த்துக்கொண்டே பள்ளியில் படித்தனர் என்று). டாக்டர் போலீஸ் கலெக்டர் என சொல்ல டாக்டர் என சொன்னவர்களை என்னைப்பார்த்து காப்பி அடித்துவிட்டனர் என பொருமிக்கொண்டேன். பெண்கள் அனைவரும் ஒன்றும் சொல்லவில்லை. ஒரே சிரிப்பு அவர்களுக்கு. ஆரோக்கிய மேரி மட்டும் தான் பைலட் ஆகப் போகிறேன் என சொல்ல ஆசிரியர், "சபாஷ்" என்றார். மற்ற பெண்கள் அப்படியென்றால் என கேட்க மேரி விளக்க ஆரம்பித்தாள் அவர்களுக்கு. 

எல்லோரும் முடித்தபின் ஆசிரியர், "ஒருவருக்கு கூட டீச்சர் ஆகணும்னு ஆசை இல்லயா.. ஏன்?" என்றார். "அதுக்கு நிறைய படிக்கணும்.. எல்லா கேள்விக்கும் பதில் தெரியணும்.." என ஒரே மாதிரி சொல்ல சிரிப்பலை எழுந்தது. 

ஆசிரியர், "ராஜகுரு.. உனக்கு கூட உங்கப்பா மாதிரி வாத்தியார் ஆகணும்னு ஆசை இல்லயாப்பா.." எனக் கேட்க என் பக்கத்தில் அமர்ந்திருந்த ராஜகுரு எழுந்து நின்றான். அப்போதுதான் அவனை முழுதாய்ப் பார்த்தேன். கரு கருவென உயரமாய் எண்ணைப் படிய வாரிய தலை, லேசாய் மீசை துளிர் விட்டிருந்தது. சாந்தமான முகம். "ஓ இவன் அப்பா வாத்தியாரா..?" என நினைத்துக்கொண்டேன். 

அவன் சொன்ன பதில் தான் இப்போது இதை எழுதத் தோன்றியது. 

"என்னால் அதை இப்போது தீர்மானிக்க முடியாது ஐயா.. (அங்கே ஆசிரியர்கள் ஐயா என்றே அழைக்கப் பட வேண்டும்) நான் முயற்சி செய்து பார்க்கிறேன்.. அது ஆசைப் பட வேண்டிய வேலை அல்ல. சொல்லப் போனால் அது வேலையே அல்ல. அதற்கும் மேலே. மிக பொறுப்பு வாய்ந்த செயல். ஒரு ஆசிரியருக்கு மிகப் பெரும் பொறுப்புள்ளது. ஒரு சமுதாயத்தில் ஆசிரியர் எப்படியோ, மற்றவரும் அப்படியே.. நம் சமுதாயத்தின் முற்போக்கு சிந்தனையாளர் அவர். அவரை அவரின் செயலை சமூகம் கூர்ந்து கவனிக்கும்.ஏனெனில், அவர் வழியை தான் சமூகம் பின் தொடரும்.  ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பொதுவானவர். தப்பிழைக்கும் எவரையும் கண்டிக்க, திருத்த அனுமதியுண்டு. அவர் மற்றவர்களுக்கு முன் மாதிரியாய்த் திகழவேண்டும். தெரியாமல் கூட அவர் தப்பிழைத்து விடக்கூடாது. அது மிகப் பெரிய பாதிப்பை மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஆசிரிய சமுதாயத்தின் மீது களங்கத்தை உண்டு பண்ணும்... அதனால் தான் நான் தயங்க வேண்டியுள்ளது ஐயா.. !" என நிறுத்த "இன்னும் நீ தவறு இழைப்பாய் என எண்ணுகிறாயா.. இந்த வயதிலும் உனக்கு பக்குவம் வரவில்லயா..?" என அவனை கூர்ந்து பார்த்தபடி ஆசிரியர் கேட்க, " இல்லை அய்யா.. நான் மற்றவர்களை காட்டிலும் என் நடத்தையில் கூடுதல் கவனமாயிருக்கிறேன்.. என்னை எல்லோருக்கும் ஆசிரியரின் பையன் என்று தெரியும். நான் செய்யும் சிறு தவறு கூட என் அப்பாவை, அவரது பணியை அவமானப்படுத்திவிடும். நான் தெரியாமல் தவறிழைக்க வாய்ப்புள்ளது. அதற்கு இன்னமும் நான் என்னை செதுக்க வேண்டியுள்ளது. அதற்கு முழு தகுதியை என் மனம் எப்போது உணர்கிறதோ அப்போதே ஆசிரியப் பணிக்கு நான் என்னைத் தயார்ப் படுத்திக்கொள்வேன். அது எனது கனவும் கூட..! " என்று சொல்ல மொத்த வகுப்பும் வியந்து பார்த்தது. ஆசிரியரோ ஏதும் சொல்லாமல் முகத்தில் ஒரு புன்னகை மட்டும் தவழ விட்டார். 


அன்று மாலை பள்ளி முடிந்து செல்கையில் கவனித்தேன். என் வகுப்பாசிரியர் சைக்கிள் ஓட்ட பின்னால் ராஜகுரு உட்கார்ந்தபடி என்னைப்பார்த்து கையசைத்து சென்றான். 

------------------

பின்குறிப்பு: சமீப காலமாய் ஆசிரிய-மாணவ செய்திகள் மிக வேதனை அளிக்கிறது. அடிக்கடி ராஜகுருவை நினைத்துக்கொள்வேன், அத்தகைய செய்திகளை கடக்கையில்.