Tuesday, January 2, 2024

ஆட்டோக்காரன் பையன் ..!

 ஆனேகல் - அத்திப்பள்ளி குறைவான பேருந்துகளே இயக்கப்படும். ஷேர் ஆட்டோ தான் ஒரே கதி. டீசல் ஆட்டோ, பதினொரு பேர் பயணிப்பர். முன் டிரைவர் சீட்டில் டிரைவர் இரு பக்கமும் இருவர், நடுவில் எதிரெதிர் ஆறு பேர், பின்னால் மூன்று பேர் என அடைத்துப் பயணிக்கும். 

எங்கள் அபார்ட்மெண்டு முன் காலையில் அவ்வளவு கூட்டம் நிற்கும். ஷேர் ஆட்டோ வந்தபடியே இருக்கும். இருபது ரூபாய் கட்டணம். பேருந்திலும் அதே கட்டணம் தான். சில ஆட்டோ டிரைவர்கள் பரிச்சியமாய்ப் போனார்கள். 

அன்று காலை, நான் ஆட்டோவிற்கு காத்திருக்கையில் என் எதிர் பிளாட் நபரும் வந்தார். நான் ஆச்சரியமாய் " என்ன காரில் போகவில்லையா?" எனக் கேட்க, "அப்பப்ப பழச மறக்கக் கூடாதுல.. " என சிரித்தபடி, " இல்லையில்ல.. என் மச்சான் வந்துருக்கான், ஏதோ இன்டர்வியூ அட்டென்ட் பண்ணனுமாம்.. அவன் அக்கா அதான் என் பொண்டாட்டி ஆர்டர் இன்னிக்கு ஒரு நாள் கார் அவனுக்கு கொடுங்க ன்னு..!" என பலமாய் சிரித்தார். சமீபமாக தான் அவரைத் தெரியும். ஐடி யில் நல்ல வேலையில் இருக்கிறார் எனத் தெரிந்து கொண்டேன். 


ஆட்டோ வரவும், பெண்கள் நடுவில் அமர, நானும், அவரும் டிரைவருக்கு இரு புறமும் அமர்ந்து கொண்டோம். தெரிந்த டிரைவர் தான். என்னைப் பார்த்து சிரித்தபடி, போனில் பேசிக்கொண்டே ஓட்டினான். என்ன பிரச்சனை எனத் தெரியவில்லை. ஒவ்வொரு போனாய் பேசி பணம் கேட்டு கொண்டிருந்தான். போனை டாஷ் போர்ட் டில் வைத்துக் கொண்டு காதில் ஹெட் செட் அணிந்து பேசியபடி வந்தான். இடையிடயே Darling என வந்த அழைப்புகளை நிராகரித்தபடியே வந்தான். பத்து பேரிடமாவது பேசியிருப்பான். முகம் வாட்டமாயிருந்தது. ஒரு இடத்தில் பயணிகளை இறக்கி விடுகையில் சற்று நின்று, Bro-in-law என்ற பெயரை அழைத்தான். எடுக்கவே இல்லை. வண்டி நகர்ந்து போகவும் மீண்டும் Darling அழைத்தது. எனக்கு சிரிப்பாய் வந்தது. இம்முறை ஸ்பீக்கரில் போட்டு விட்டான். " என்ன ஆச்சு.. ஸ்கூல் பீஸ் கட்ட போறயா.. ஆட்டோ ஓட்ட சொல்லி கொடுக்கப் போறீயா உன் புள்ளைக்கு.. " எனக் கத்த, Darling என்பது அவன் மனைவி என புரிந்து கொண்டேன். அந்தப் பக்கம் என் எதிர் வீட்டு நண்பர் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டார். 

அதற்குள் Bro-in-law call waiting என வர, Darling பேச்சை முறித்துக் கொண்டான். ஸ்பீக்கரில், "காச தவிர வேறு எதுனா பேசுறதுனா பேசு.." என ஆரம்பிக்க இவன் ஒன்றும் பேசாமல் கட் செய்து கண் கலங்கினான். மீண்டும் Darling அழைக்க, ஸ்பீக்கரில் "தூ.. ஒரு ஆறாயிரம் ஸ்கூல் பீஸ் கட்ட முடியல.. என் அண்ணன்ட்ட பிச்சை எடுக்கப் போனியா.. அவன் எனக்கு ஃபோன் பண்ணி கேவலமா பேசுறான்.." என பேசும்போதே ஒரு பிஞ்சு குரல், "டாடி, ஸ்கூல் வேணாம்.. நீ மம்மி ஃபைட் பண்ணாத !" என சொல்லவும் பாவமாய் போனது எனக்கு. அதற்குள் அத்திப்பள்ளி வந்திருந்தது. 

இறங்கிய அனைவரும் அவரவர் பணத்தை நீட்ட, அவன் சில்லறை கொடுக்கவும் வாங்கவுமாய் இருந்தான். நான் கொடுக்கும்போது அவன் முகத்தைப் பார்த்தேன். கண்ணீர் முட்டிக் கொண்டிருந்தது. என் எதிர்வீட்டு நண்பர் " GPay இருக்கா..?" என்றார் அவனிடம். நான், "நா கொடுக்கிறேன் இருபது ரூபாய்க்கு எதுக்கு ?" என்றபடி பையை திறக்க எத்தனித்தேன். அவரோ விடாமல் "..சொல்லுப்பா GPay  நம்பரை!" என்றபடி போனை நீட்டிக் கொண்டிருந்தார். அவன் சொல்ல, சொல்ல, "மஞ்சு வா..?" எனககேட்டார். அவன் ஆம் என்று சொல்லி முடிக்கவும், அவர் பணம் செலுத்தியதற்கான குறுஞ்செய்தி ஒலித்தது. அவன் பிரமிப்பாய் அவரை ஏறெடுத்தான். "சார்.. என்று போனைக் காட்ட அதில் 6020  என்றிருந்தது. நான் அவரை திகைத்துப் பார்க்க, அவர் அவனிடம், "எப்போ முடியுமோ அப்ப கொடுத்தா பரவாயில்ல.. ஸ்கூல் பீஸ் ஐ முதல்ல கட்டு.. ஆட்டோக்காரன் பையனை நல்லா படிக்க வை.. எங்கப்பா மாதிரி..!" என்றார். அவன் சடாரென அவர் காலைத் தொட்டான். அவர் அவனைத் தூக்கியபடி, "எங்கப்பா ஒரு ஆட்டோ காரர் தான்.. என்னை நல்லா படிக்க வச்சாரூப்பா.. அதெல்லாம் எதுக்கு உனக்கு.. சார் வாங்க டைம் ஆகுது.." என்றபடி "உன் மச்சானால ஹெல்ப் பண்ண முடியலானாலும், என் மச்சான் மூலமா உனக்கு ஹெல்ப் கிடைச்சிருச்சு..!" என்று சிரித்தபடி என்னுடன் பேருந்தைப் பிடிக்க ஓடி வந்தார். 

மஞ்சுக்கு ஒன்றும் புரியவில்லை என்பதை திரும்பிப் பார்த்தபோது புரிந்துக் கொண்டேன்.