Wednesday, October 7, 2020

சத்தமில்லாமல் ஓர் யுத்தம்..!

சமீப காலமாகத்தான் ஒன்றை உணர்கிறேன். இந்த ஸ்மார்ட் போன் வந்தபின், (வாட்ஸ அப் பும் ஒட்டிப்பிறந்த இரட்டையராய் வந்துவிடுகிறது) அதீதமான மதம் சாதி சார்ந்த பதிவுகள், கருத்துக்கள் அதிலும் 'மீம்' எனும் பெயரில் நம்மிடம் வந்துகொண்டே இருக்கின்றன. நாம் விரும்புகிறோமோ, இல்லையோ அவைகள் நம் கவனத்தில் இடம் பெறுகின்றன. எப்படியும் அழிக்கத்தான் போகிறோம், இருந்தாலும் நம் பார்வையில் தொடர்ந்து நாளாக, நாளாக ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன. இது மறுக்க முடியாத உண்மை.

என் பள்ளிப்பருவத்தில் யாரும், யாரையும் மதம், சாதி நோக்கில் அறிந்தது இல்லை, பழகியதும் இல்லை. அதை ஒரு பொருட்டாகக்கூட எண்ணியதில்லை. இன்னும் சொல்லப்போனால், பிறமதத்தை உயர்வாக எண்ணினோம். அடுத்த மதப்பண்டிகையை உற்சாகமாய் கொண்டாடினோம். அப்துல்லா, நாசர், சலீம், முகம்மது கனியாயிருக்கட்டும், டேவிட், அந்தோணி, வெஸ்லியாயிருக்கட்டும். யாராயிருந்தாலும், பள்ளி, கல்லூரி நாட்களிலிருந்து நட்பென்பது இன்னும் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது. ஆனால், இப்போது சமீப காலமாய் ஏதோ ஒரு திரை எங்களுக்குள் இருப்பது போல உணர்கிறேன். முன்பிருந்த அந்த அன்னியோன்யம் இல்லாமலிருப்பதை உணர முடிகின்றது. நகைச்சுவை எனும் பெயரில் ஏதாவது 'மீம்' ஒன்றை (மதம், கட்சி சார்ந்த) யாரவது பகிர அதற்கு எந்தவிதமான சலனமுமின்றி ஒரு நிசப்தம் நிலவுவதை நன்றாகவே உணரமுடிகின்றது.

பிறந்து இத்தனை வருடங்களில், நமக்கு நாம் யார் என்பதை, பகிரும் 'மீம்' கள்தான் அடையாளம் காட்டுகின்றன. "நீ இந்து இல்லை, தமிழன்.. நாம் திராவிடர்கள்..அவர்கள் ஆரியர்கள்..சங்கீஸ்..மங்கீஸ்.." என ஏதெதோ பிதற்றுதலை சகிக்கமுடியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. இத்தகைய பதிவுகள், அது நகைச்சுவையோ, தகவலோ அது நம்மையறியாமல் உள்ளே சென்று உட்கார்ந்துக்கொள்கிறது. 'தேவைப்படும்போது' நம்மை மத, சாதி, கட்சி, இன ரீதியாகப் பிரிக்கத்தூண்டுகிறது. அதுவும், இப்போதுள்ள இளைய சமுதாயத்திடையே இது நன்றாய் வேரூன்ற ஆரம்பித்துவிட்டது.  இது நிதர்சனம்!

தேவர்மகனில் கமல் குறிப்பிட்டதுப்போல, நம் எல்லோருக்குள்ளும் அந்த மிருகம் தூங்கிக்கொண்டுதானிருக்கிறது. இத்தகைய இரைகள் அதை எழுப்பிவிடுகின்றன. 


Friday, October 2, 2020

பித்ரு தோஷம்

அமாவாசையன்று விரதமிருந்து ஒரு வேளை மட்டுமே உணவருந்துவது என் பழக்கம். அதுவும், காக்கைக்கு படையலிட்டு உண்பேன். இது பல வருடங்களாக நான் கடைப்பிடிக்கும் பழக்கம். இப்பொதெல்லாம், நகர்ப்புறங்களில் காக்கைகள் அருகி வருகின்றன. என்னைப்போல் அமாவாசை விரதமிருப்போருக்கு காகங்கள் என்பது பித்ருக்கள். அவைகள் வந்து நம் படையலை எடுப்பது நம் முன்னோர்கள் வந்து நாம் படைத்த உணவை உண்பதாக ஐதீகம், நம்பிக்கை. சமயங்களில், காக்கைகள் வரும் முன்பே அணில் வந்து உண்ண ஆரம்பிக்கும். அதனால், என் அம்மா கூடுதலாகவே வைப்பார். ஆனாலும், காக்கை வந்து எடுத்தால்தான் அவருக்கு திருப்தி. காக்கை வந்து உண்ணாமல், சாப்பிட மாட்டார். இதுவரை தாமதமாக வேண்டுமானால் வந்திருக்கிறது. வராமல் இருந்ததில்லை.


நான், தினசரி மாடியில் சாதம் வைத்து பழக்கியிருந்தேன். அதனால், காக்கைக்குப் பஞ்சமில்லை. அன்றைய அமாவசைப்பொழுதில், ஏனோ காக்கைகள் வருவதற்கான அறிகுறியேத் தென்படவில்லை. வழக்கத்திற்கு மாறாய் தாமதமாகவே, என் மகன் மாடிக்கு வந்துவிட்டான். அவனும் பசியிலிருந்திருக்க வேண்டும். "ஏன்பா..இன்னுமா இதெல்லாம் நம்பிட்டுருக்க..வச்சுட்டேன்னா வாயேன்.." என்றான். எனக்குத்தான் உறுத்தலாயிருந்தது. "இன்னும் கொஞ்ச நேரம்டா..வரும்ம்.." என்று, "கா..கா" என குரல் எழுப்பினேன். காக்கா வந்தபாடில்லை. நான் அவனைப்பார்க்க, அவன் என்னைப்பார்த்து சிரித்தான். "சரி, வா சாப்பிடலாம்" என எத்தனிக்கையில், எங்கிருந்தோ ஒரு காகம் வந்தமர்ந்தது. "தாத்தா வந்தாச்சு" என்று சிரித்தான். இன்னும் ஒரு சில காக்கைகள் வந்து உண்ண ஆரம்ப்பித்தன. எனக்குப் பரம திருப்தி. "என்னப்பா..சின்ன தாத்தா, பெரிய தாத்தா எல்லாரும் வந்துட்டாங்க போல" என்று கேலியாய் சிரித்தான். இருவரும் கீழிறங்கி வீட்டிற்கு சாப்பிடப்போனோம்.

====

சில வருடங்களுக்கு முன், இராமேஸ்வரம் சென்றிருந்தேன். மே தினத்தையொட்டி விடுமுறையாதலால் சரியான கூட்டம். எங்குமே அறைகள் கிடைக்காமல், அங்கிருந்த சங்கர மடத்தில் தங்க நேரிட்டது. அருகிலேயே, ஒரு வெளியில் நிறையப் பேர் தர்ப்பணம் கொடுத்துக்கொண்டிருந்தனர். தர்ப்பணம் முடிய, ஐயர்கள் பிண்டத்தை காக்கைக்குப் படையலிட சொல்லிக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும், அங்கிருந்த கிணற்றடியில், மரத்தடியில் என பிண்டத்தை வைக்க, காக்கைகள் வந்து கொத்தித்தின்றன. அவர்கள் அனைவர் முகங்களிலும் அப்படியொரு திருப்தி. ஐயரும், "ஒன்னும் குறையில்லை..பித்ருக்கள் எடுத்துண்டா" என கூறிக்கொண்டிருந்தனர். 


வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்த நான், அப்போதுதான் அந்த முதிய தம்பதியைக் கவனித்தேன். சற்று அதிகமானத் தட்டுகளோடு, பெரியளவில் தர்ப்பணம் செய்துக்கொண்டிருந்தனர். பார்க்க வசதியானவர்கள் போலிருந்தது. இருவர் முகமும் இறுகிப்போயிருந்தது. ஐயர் ஏதாவது கேட்க, அந்தம்மா எடுத்துத்தர சற்று தாமதமானாலும், அந்த பெரியவர் அப்படி முறைத்தார் அந்தம்மாவை. இறுதியாய் ஐயர், பிண்டத்தை இலையில் வைத்து பெரியவரிடம் கொடுத்து வைத்துவிட்டு வரச்சொன்னார். கிணற்றடியில் இலையை பவ்யமாக வைத்து விட்டு கும்பிட்டபடி அருகிலேயே நின்று கொண்டார். நானும் பார்த்துக்கொண்டேயிருந்தேன். ஐயர் அருகிலேயே நின்ற அந்தம்மாவும், அங்கிருந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தார். ஐயர் மும்மரமாய் சாமன்களை, பைகளில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.


அவர் வைத்த பிண்டம் அருகில் சில காக்கைகள் மெதுவாய் வந்தன. தலையை சாய்த்துப்பார்த்தன. ஆனால், எடுக்கவில்லை. அந்த இடத்தில் அத்தனை காக்கை கூட்டமிருந்தது. எனக்கு ஆச்சர்யமும், ஆவலுமானது. இங்கே நின்று கொண்டிருந்த அந்தம்மா வாயில் சேலை தலைப்பை வைத்து அழ ஆரம்பித்து விட்டார். அவர் அழுவதைப்பார்த்துதான் ஐயரே என்னவென்று திரும்பிப்பார்த்தார். அந்த காக்கைகள் பிண்டத்தைத்தொடவேயில்லை. பிண்டத்தைப்பார்க்கவும், அவரைப்பார்க்கவுமாயிருந்தன. அவர் கும்பிட்ட கையை இறக்கவேயில்லை.  சில நொடிகள்தான், காக்கைகள் அந்த இடத்தை விட்டு அகன்றன. எனக்குப் புதிராயிருந்தது. அவ்வளவுதான். ஆவேசமாய் வந்த அந்த பெரியவர், அந்தம்மாவை முதுகிலும், கன்னத்திலுமாய் அடி, அடியென அடித்தார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அந்தம்மா அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டார். "மகா பாவம்டி..நீ பண்ண கொடுமை..!" என்று அந்த இடத்தை விட்டு அந்த பெரியவர் வேகமாய் போய்விட்டார். "தினமும் தீபம் ஏத்தி கும்பிட்டு சமாதனப்படுத்துங்கோ..எல்லாம் சரியாயிடும்..கவலைப்படாதீங்கோ"என்று கிளம்பினார் ஐயரும். கொஞ்ச நேரம் அங்கிருந்தோர் அங்கு நடப்பதை வேடிக்கைப்பார்த்தனர். அப்புறம், சற்று நேரத்தில் அந்த இடம் வெறிச்சோடிப்போனது. நானும், ரொம்ப நேரம் நின்று பார்த்தேன். அந்தம்மா நகர்வதாய் தெரியவில்லை. எனக்கு ஏனோ அந்தம்மா மீது பரிதாபமாயிருந்தது. வெயில் ஏறிக்கொண்டேப்போனது. நானும் கிளம்பி கோயிலுக்குப் போய்விட்டேன். 


மாலையில் எனக்கு இரயில். மடத்திலிருந்து கிளம்புகையில் ஆவல் தூண்ட, அந்த இடத்தைப் பார்வையிட்டேன். அந்தம்மாவை அங்கு காணவில்லை. அந்த இடம் முழுவதும் இலைகளும், சிதறிய பருக்கைகளுமாய் காட்சியளித்தன. ஆனால், அந்த கிணற்றடியில் அந்த பிண்டம் மட்டும் அப்படியே இருந்தது.