Monday, January 9, 2023

மை நேம் இஸ் மிஸ்டர் வெங்கடேஷ்..!

"சார், உங்க ஆபிஸ்ல ஏதாவது வேலை இருக்குமா.. நம்ம ஊர் பையன் ஒருத்தன் பக்கத்து ஜெராக்ஸ் கடையில வேலைக்கு இருக்கான். வயசு முப்பது ஆவப்போகுது.. நல்ல வேலை கிடைச்ச பிறகுதான் கல்யாணம் பண்ணுவேன்னு  நிக்கிறான். அவன் அப்பா நேத்து வந்தவரு இந்த விபரம் சொல்லிட்டு போனாரு.. நமக்கும் சொந்தம் தான். நல்ல பையன் சார்..!" என்றார். நான் தினமும் அலுவலகம் செல்லும் முன் பேருந்தை விட்டு இறங்கிய பின் ஒரு தேநீர் குடித்துவிட்டு போவது வழக்கம். அந்த கடைக்காரர் தான் கேட்டது.

சரியான நேரம் என நினைத்துக் கொண்டேன். எங்கள் அலுவலக உதவியாளர் ஒரு வாரம் முன்பு தான் ஏதோ விபத்தில் அடிபட்டு நடக்க முடியாமல் இருந்தார். தற்காலிகமாக அவர் குணமாகும் வரை ஒருவர் தேவையாயிருந்தது. " சரி, வர சொல்லுங்கள் ..பார்க்கலாம் !" என்றேன்.

நான் அலுவலகம் போய் அரை மணி நேரத்திற்குள் இருவருமே வந்திருந்தனர்.பார்க்க நல்ல பையனாய் தெரிந்தான். குட்டையான கருந்தேகம். கோரை முடி. மீசை இல்லாததால் பார்க்க முப்பது வயது போல் தெரியவில்லை. ஊர் தருமபுரி பக்கம். தமிழ், கன்னடம், தெலுங்கு என பேச தெரியும் என்றார் டீ கடைக்காரர். அவன் என்னைப் பார்ப்பதும் தலையை குனிவதுமாயிருந்தான். பேர் கேட்டேன். " மை நேம் இஸ் மிஸ்டர் வெங்கடேஷ் சார்..!" என்றான். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. " மிஸ்டர் வெங்கடேஷ், ஜெராக்ஸ், பைலிங் அப்புறம் கொரியர் போஸ்ட் ஆபிஸ் ன்னு வேலை இருக்கும். டெம்பரரி தான் இப்பதைக்கு ..அப்புறம் பார்க்கலாம்.."  என்றபடி நான் சம்பளத்தை சொன்னவுடன் இருவருமே எதிர்பார்க்கவில்லை. ஜெராக்ஸ் கடையில் கொடுப்பதை விட மிக அதிகமாயிருக்கும் போல. அவர்கள் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. 


அடுத்த நாள் கடைக்காரர், "ரொம்ப தேங்க்ஸ் சார்..நேத்து போன் பண்ணி அவங்க அப்பாட்ட சொன்னேன்..ரொம்ப சந்தோசப்பட்டாரு.. உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன சார்..இவனுக்கு அக்கா பொண்ண தான் கல்யாணம் பேசி வச்சிருக்கு..இவன் ஊருல விவசாயம் பார்க்க மாட்டேன்னு இங்க வந்துட்டான்..அதும் மூணு நாலு வருஷமாச்சு.. இந்த பயலுக்கு அம்மா இல்லை..அப்பன் மட்டும்தான்..அக்காளுக்கு புருஷன் தவறிட்டான்..ஒத்த பொண்ணு அவளுக்கு..நீங்க வேலை கொடுத்து அவங்க எல்லார் வாழ்க்கையிலும் விளக்கேத்திட்டிங்க.." என்றார் சினிமா பாணியில். நான் சிரித்து கொண்டே "அப்படியெல்லாம் இல்லீங்க..எல்லாம் கடவுள் செயல்..!" என்றேன். அவர் கடையில் மாட்டியிருந்த சாமி படத்தை பார்த்தபடி கும்பிட்டு கொண்டார். நமக்கு சாதாரணமாய் தெரியும் சில செயல்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு பெரிதாயிருக்கிறது என வியந்து கொண்டேன்.


அந்த பழைய உதவியாளர் வரவேயில்லை. வெங்கடேஷ், வெங்கியாகி எல்லாருக்கும் பிடித்த நபராகிப்போனான். ஒரு நாள் அந்த டீக்கடை காரர் ஒரு பெரியவர் மற்றும் ஒரு பெண்மணியோட அலுவலகத்திற்கு வந்தார். அவர்களைப்பார்க்கவும் வெங்கி வெளியே போய்விட்டான். வந்தவர்கள் தட்டு பழம் பத்திரிகை என எடுத்து வைக்க எனக்கு புரிந்து போனது. " சார் நம்ம வெங்கடேசுக்கு கல்யாணம்..என சொல்ல நான் மகிழ்ந்தேன். அந்த பெண்மணி, "நான் அவன் அக்கா சார்..என் பொண்ணைதான் கட்டி கொடுக்கிறேன். நீங்க அவசியம் வரணும்..நீங்க மட்டும் அவனுக்கு வேல கொடுக்கலன்னா..இன்னும் அவன் சம்மதித்திருக்க மாட்டான்..குடும்பத்தோட வாங்க அய்யா..!" என்றார் பெரியவரும். வெங்கியை காணாது, டீக்கடை காரரிடம் "வெங்கிக்கு தெரியும்ல..அவனுக்கு சம்மதம் தானே" என்றேன் மெதுவாய். அவர் சிரித்தபடி, "அவன் வெட்கப்பட்டு வெளியே போய்ட்டான் சார்..இதுக்குத்தான் அவன் பல வருஷமா காத்து கிடக்கான். அவனுக்கு அக்கா பொண்ணு மேல உசிரு சார்..!" என்றார்.


மொத்த அலுவலகமே அவன் கல்யாணத்திற்கு போனோம். கிராமத்து கோயிலில் எளிமையாயிருந்தது. வெங்கிக்கு அப்படியொரு சந்தோசம். கிளம்புகையில், அவன் அப்பாவும், அக்காவும் எங்கள் வேனில் மூடை மூடையாய் காய்கறி, கடலை, கேழ்வரகு, பழம் என அடுக்கினர். அலுவலகத்தினர் திக்கு முக்காடி போயினர் அவர்கள் அன்பில்.


வெங்கி மனைவியுடன் புதுக்குடித்தனம் வந்தாயிற்று. ஒரு நாள் என் வீட்டிற்க்கு சாப்பிட அழைத்திருந்தேன். அவன் மனைவி சின்ன பெண் பிளஸ் டூ படித்திருந்தாள். கிராமத்திற்கே உரிய வெள்ளந்திதனம். அவனை விட வயது மிக குறைவு என்பது என் மனைவி சொல்லித்தான் தெரிந்தது. இருந்த ஒரு மணி நேரத்தில் தன் மனைவியை, "மஞ்சு, மஞ்சு..!" என ஏதேதோ தெலுங்கில் சொல்லியபடி இருந்தான். எங்களிடம் பேசியதை விட அவன் அவளிடம் பேசியதுதான் அதிகம்.


கொஞ்ச நாளில், வெங்கி மனைவி பக்கத்து வீட்டில் யாரோ சொல்லி அருகிலுள்ள கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு வேலைக்கு போக ஆரம்பித்தாள். என்னிடம் வெங்கி சொன்னபோது அதற்குள் எதற்கு அவசரம் என்றேன். "இல்லை  சார்..மஞ்சுக்கு வேலைக்கு போணும் னு ஆசை..கேட்டுச்சு..சரின்னுட்டேன்" என்றான். மனைவியிடம் இருந்து போன் வந்தால் போதும் பார்க்கிற வேலையை அப்படியே போட்டு விடுவான். மனைவி மீது பித்தாயிருந்தான். எல்லாம் ஒரு குழந்தை பிறந்தால் சரியாகிவிடும் என நினைத்துக்கொண்டேன்.


ஒரு வருடம் ஓடிப்போனது.  பெண் குழந்தை பிறந்தது. வெங்கிக்கு அப்படியொரு மகிழ்ச்சி. பிரசவத்திற்கு கூட ஊருக்குப் போகவில்லை. இங்கே அவன் அக்கா வந்திருந்து கவனித்துக்கொண்டார்.குழந்தையைப் பார்க்க போனபோது அவன் அக்காவிடம் கேட்டே விட்டேன். "தலை பிரசவம் ஊரில் பார்க்கலயா..?" என்றதற்கு, "சொன்னா  கேட்கமாட்டேங்குறான் சார்..!" என்றார். அவனோ, "மஞ்சு சொல்லிருச்சு சார்..ஊருக்கு வேணாம்னு ..அதான்.." என்று சிரித்தான். இவன் இன்னும் மஞ்சு மோகத்திலேயே இருக்கிறான் என சிரித்து கொண்டேன்.


சில மாதங்கள் சென்றிருக்கும். ஒரு ஞாயிறு சந்தையில் காய்கறி வாங்கி வரும்போது ஒரு ஸ்கூட்டி அருகில் வந்து, "ஹாய் அங்கிள்..!" என்றவாறு ஒரு பெண் சிரித்தாள். யாரென்று நான் யோசிப்பதை பார்த்து விட்டு, "மஞ்சு அங்கிள்..!" என்றாள்  அடையாளமே தெரியவில்லை. டீ ஷர்ட் ஜீன்ஸ் என மாறியிருந்தாள். "குழந்தை..வெங்கி.." என்று இழுத்தேன். "வீட்ல இருக்காங்க..நான் பிரண்ட்ஸ் கூட ஷாப்பிங் வந்தேன்..பை அங்கிள்.." என்றாள். ஆளே மாறிப்போயிருந்தாள் 

உண்மையிலே அவள் சுபாவம் அப்படியா, இல்லை மாறி விட்டாளா என நினைத்தபடி நடந்தேன். வரும்போது டீக்கடை காரரைப் பார்க்க நேரிட்டது. "அவன் தான் சார் குழந்தையை பாத்துக்கிறான்..அவ இன்னும் சின்ன புள்ளையாட்டம் திரியுறா..அவன் அக்காக்கும் வயசாயிடுச்சு..நடக்க முடியல..இவன் ஒரு வார்த்தை சொல்லமாட்டிக்குறான்..திரும்ப அந்த கார்மண்ட்ஸ் வேலைக்கு போறேன்னு சொல்றா..இந்த லூசு பயலும்..சரி மஞ்சு..நான் பாப்பாவை பாத்துகிறென்றான்..பால்குடி மாறாத குழந்தையை வச்சுக்கிட்டு..இவன் செய்யிறது சரியில்லை..நீங்க கொஞ்சம் சொல்லுங்க சார்.." என்றார். என் மனைவியிடம் சொன்னபோது, "நானும் ரெண்டு மூணு வாட்டி பார்த்தேங்க..ஒரு பையனோட..சொந்தகார பையனோ யாருனு  தெரியல..வந்ததுக்கு மஞ்சு ஆளு மாறிடுச்சு..வெங்கி அப்படியேதான் இருக்கான்" என்றாள். அவள் சொன்னதில் சற்று வெறுப்பு தெரிந்தது.


குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு அழைத்திருந்தான். ஆடம்பரம் தெரிந்தது. நிறைய புது புது ஆட்கள் தென்பட்டனர். வெங்கியிடமே கேட்டேன். " மஞ்சு பிரண்ட்ஸ் சார்..கார்மண்ட்ஸ்ல கூட வேலை பார்க்கிறவங்க ..!" என்றான். அதிலும் நிறைய ஆண்கள், சில ஜோடிகள் வேறு என பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை. ஆண் நண்பர்கள் சாதாரணமாய், "மஞ்சு, மஞ்சு ..!" என பேர் சொல்லி அழைப்பதும் செல்பி எடுப்பதுமாயிருந்தனர். குழந்தையோ ஒரே அழுகை. வெங்கிதான் தூக்கி வைத்துக்கொண்டு வேலையையும் பார்த்துக்கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் கேக் வெட்ட வந்த அவன் மனைவியை பார்த்து ஆடிப்போனேன். அப்படியொரு ஆடை அணிந்திருந்தாள். என்னால் இருக்க முடியவில்லை. அழும் குழந்தை கையில் பரிசை கொடுக்கவும் மனசு வரவில்லை. வெங்கியிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன். வீட்டின் வெளியே சாமியானா போட்டு சாப்பாடு ஏற்பாடு பண்ணியிருந்தனர். பீர் பாட்டில் அடுக்கி வைத்திருந்தனர். என்னால் நம்பவே முடியவில்லை. வெங்கியை கேட்டேவிட்டேன். மஞ்சு பிரண்ட்ஸுக்கு சார் என்றான் சாதாரணமாய். மஞ்சு மிக பிசியாய் தன் நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்தாள். நகர வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக அவளை கபளீகரம் செய்துகொண்டிருந்தது.


வெங்கியிடம் எந்த மாற்றமோ, வருத்தமோ தெரியவில்லை. அவன் எப்பவும் போல இருந்தான். என்ன இப்போது மஞ்சுவுடன் குழந்தை புராணமும் சேர்ந்து கொண்டது. ஒருநாள், கேட்டேவிட்டேன். "ஏன் வெங்கி, உனக்கு கஷ்டமாயில்லையா..மஞ்சு அவசியம் வேலைக்கு போகணுமா..குழந்தய பார்த்துக்கலாமில்ல..?" என்றேன். " மஞ்சுக்கு  வேலைக்கு போனும்னு ஆசை சார்..அதுக்கு என்ன ஆசையோ அது செய்யட்டும்..குழந்தையை நான் பார்த்துகிறேன்.." என்றான் சிரித்தபடி. அவன் சொல்வதிலோ, சிரித்ததிலோ எந்த போலித்தனமும் இல்லை என்பது கண் கூடாய்த்தெரிந்தது.


அவன் அக்காவும் ஊருக்கு போனபின், குழந்தையை அலுவலக கிரீச் அழைத்து வர ஆரம்பித்தான். எனக்கு விநோதமாயிருந்தது அவன் செயல். வேலை நடுநடுவே போய் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்காகவே நாங்கள் அலுவலகத்தில் வேலைகளை 'அட்ஜஸ்ட்' செய்து கொண்டிருந்தோம். ஒரு நாள், அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றும் பெண்மணி ஏதோ அவனை கடிந்து கொண்டிருந்தார். அவர் சற்று மூத்தவர். அவரும், வெங்கியும் அக்கா தம்பி போல. இருவரும் தெலுங்கில் பேசிக்கொள்வர். அன்றைக்கு அவர் பேசியதிலிருந்து எனக்கு புரிந்தது, "நீ வேலைய பாரு..உன் பொண்டாட்டி புள்ளய பாக்கட்டும்..நீ அடிக்கடி புள்ளய பாக்க போனா யாரு வேலை பார்க்கிறது.." என்க, "என்னை, என் வேலைய பேசுங்க ..என் மஞ்சுவ பத்தி சொல்லாதீங்க..அக்கா"  என்றான் சிரித்துக்கொண்டே., அவன் குழந்தையை பார்க்க போனபோது, அவர் என்னிடம் வந்தார்.


"சார், அவன் எனக்கு தம்பி மாதிரி.." என்று ஆரம்பித்தவுடன் தெரியும் என்பது போல் ஆமோதித்தேன். " அந்த பொண்ணு சரியில்லை சார்..இவன் தலையில தூக்கி வச்சு ஆடுறான்..இவன் ஒரு அப்பிராணி சார்..அவ போடுற ஸ்டேட்டஸ் பாருங்க..குமட்டுது.." என்றபடி தன் போனில் சில படங்களை காட்டினார். மஞ்சு சினிமா பாணியில் ஆடையணிந்து உடன் சில ஆண்களுடன் விதவிதமாய் இருந்தாள். "சாரி சார்..இன்னும் இருக்கு..அதெல்லாம் உங்ககிட்ட காட்ட முடியாது.." என்று தலை குனிந்தபடி, "கண்ணு முன்னாடி இப்படி நடக்கிறப்ப..சும்மா இருக்க முடியல சார்.." என்றார். எனக்கு என்ன செய்வது இதை எப்படி தீர்ப்பது என புரியவில்லை. 


அந்த வாரமே வெங்கியை வீட்டிற்கு அழைத்து பேசினேன். அவனை மட்டும் வர சொன்னேன். வரும்போது குழந்தையை தூக்கி வந்திருந்தான். "மஞ்சு பிரண்ட்ஸ் கூட சினிமாக்கு போகுது..அதான்..!" என்றான் சிரித்தபடி. எனக்கு ஆத்திரமாய் வந்தது. "நீ என்ன கிறுக்கனா..உனக்கு என்ன நடக்குதுன்னு நிஜமாவே தெரியலியா ..எந்த ஒரு ஆம்பளையும் இப்படி பொட்டயா இருக்க மாட்டான். கண்ணு முன்னாடி கண்டவனோட சுத்துறா..புள்ளய கூட பார்க்க முடியாம..த்தூ ..!" நான் கத்துவதைப்பார்த்து உள்ளிருந்த என் மனைவி வெளியே வந்து சமாதானப்படுத்தினாள். அவன் தலையை குனிந்து உட்கார்ந்திருந்தான். குழந்தை அழ ஆரம்பித்தது. குழந்தையை தூக்கிக்கொண்டு என் மனைவி உள்ளே சென்றாள். நான் போனைப் பார்த்தபடியே இருந்தேன். எனக்கு பிபி ஏறிப்போனது. குழந்தை நீண்ட நேரம் அழவும் என் மனைவி அவன் அருகே இறக்கி விட்டாள். அது சிரித்தபடி போய் அவனை கட்டிக்கொண்டது. அவன் தூக்கிக்கொண்டு ஒன்றும் சொல்லாமல் கிளம்பி சென்றான்.


அடுத்த நாள் ஏதும் நடக்காதது போல் அலுவலகம் வந்தான். எப்போதும் போல் எல்லோரிடமும் இருந்தான். நான் அவனிடம் அன்று முழுவதும் பேசவே இல்லை. அன்று மாலையே அந்த டீக்கடை காரரை சந்திக்க சென்றேன். அவரிடம் அத்தனையும் சொன்னேன். அவரோ தலையை குனிந்தபடி, "அந்த கருமத்தை எப்படி சார் சொல்வேன்..அந்த சிறுக்கி எவன்கூடவோ போய்ட்டா..போன வாரம் அவள காணோம் ..போனும் எடுக்கிலன்னு இவன் இங்க வந்து நின்னான். எனக்கு பதறிப்போச்சு..அவ வேல பார்க்கிற கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு போய் கேட்டோம். இவன் புள்ளய வச்சுட்டு இருக்கிறத பார்த்துட்டு அங்கிருந்த செக்யூரிட்டி யாரு இவருன்னு என்கிட்டே கேட்க, அவ புருஷனும், குழந்தையும் னு சொன்னேன். அவ்வளவுதான்.." என்னை உள்ளே கூப்பிட்டு விசாரிச்சார்..புண்ணியத்துக்கு தமிழ் காரர், மதுரை பக்கம்..அவரு சொன்னதை கேட்டு ஈரக்குலையே நடுங்கி போச்சு..இவ இன்னும் கல்யாணம் ஆகலை..லோக்கல்ன்னு சொல்லிருக்கா..போதாக்குறைக்கு அங்க வேலை பார்க்கிற ஒருத்தன்கூட ஒன்னா தங்கியிருக்கா..ன்னு சொன்னாரு. இது இங்க நடக்கிறதுதான்..இதுக்குன்னே இங்க திரியிறானுக..புள்ளய ஊருக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ கூட்டிட்டு போயிருங்க..னு கும்பிடு போட்டாரு..!" 

"வெளியே வந்தா, அவ நிக்கிறா..என்னைப்பாக்காத மாதிரி அவன்கிட்ட 'இங்க ஏன் வந்த மாமா..போ முதல்ல..நா பிரண்டு ரூம்ல இருக்கேன்..தேடாதே..ன்னுட்டு ஒரு நாதரியோட பைக்ல ஏறி போய்ட்டா சார்..குழந்தை கைய நீட்டி அழுவுது..அத என்னன்னு கூட பார்க்கல..இந்த கேனப்பய குழந்தையை சமாதானப் படுத்துறான்..! நா கெட்டவார்த்தையில் அவனை திட்டி..காறி துப்பிட்டு வந்தேன்.. என்ன சார் கண்ணு முன்னாடி எவன்கூடவோ போறா..புள்ளய கூட பார்க்கமா.. வெட்டி வீச வேணாமா..தூ.." என்றார். கண்ணில் நீர் தளும்பியது..கோபத்தில் சிவந்திருந்தார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது அவர் சொல்லியதை கேட்டு.


ஒரு நாள் டீக்கடை காரர் அலுவலத்திற்கு வெளியே நின்றிருந்தார். வெங்கி அப்போது வெளியே சென்றிருந்தான். நான்தான் அவரை அழைத்து கேட்டேன், வெங்கியை பார்க்க வந்தீர்களா  என்று. "இல்ல சார் உங்ககிட்ட பேசணும்னு வந்தேன். இங்க வந்தப்புறம் சங்கடமா இருக்கு..உங்கள தொந்தரவு பண்றதுக்கு..!" என்றார். பரவாயில்லை, வாங்க என்று உள்ளே வரச்சொன்னேன். "கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் மேல ஆவப்போவுது..இவன் ஊருக்கு போயி..அந்த சனியனும் யாருக்கும் போன் பேசறதில்லை போல..இவன் போன் பேசறப்ப பொய்ய சொல்லி சமாளிக்கிறான் போல..இன்னிக்கு அவங்க அப்பனும், அக்காளும் கிளம்பி இங்க அவன்  வீட்டுக்கே போய்ட்டாங்க..இவன்தான் வீட்டை மாத்தி போய்ட்டானே ..அது தெரியாம தேடி அலைஞ்சுட்டு கடைசியில நம்ம கடைக்கு வந்து உக்காந்திருக்காங்க..நான் அவசர வேலை இருக்குன்னு உங்களை பார்க்க வந்துட்டேன்..நான் என்னத்த சொல்ல சார் அவங்க கிட்டே..அவங்களை பார்க்கிறப்ப எனக்கு அழுகையே வந்துடுச்சு சார்..!" என்று அழுதே விட்டார்."என்னை நம்பி விட்டுட்டு போனாங்க சார்.. இன்னிக்கு இவன ரெண்டுல ஒண்ணு முடிவு பண்ணப்போறேன் சார்..!" என்றார் பல்லை கடித்தபடி. அவர் சொல்லி முடிக்கவும் வெங்கி சரியாய் உள்ளே வந்தான். அவன் சற்றும் இங்கே அவரை எதிர்பார்க்கவில்லை என்பது முகத்தில் தெரிந்தது.


"என்ன மாமா இந்த நேரத்தில..இங்க..கடைக்கு போகல..?" என்றான் அவரை பார்த்தபடி. "நீதான் போயேன்..போய் உன் அப்பனுக்கும், அக்காளுக்கும் டீ போட்டு கொடு.." என்றவர், "புள்ள எங்கடா..? அதையாவது உன்கிட்டே வச்சுருக்கியா..?" என்றது எனக்கே சுருக்கென்றிருந்தது. அவரைப்பார்த்தவன் தலையை குனிந்துகொண்டான். "அங்க ஒருத்தி அவ புள்ளயத் தேடி வந்திருக்கா..என்ன சொல்ல..? அவ புருஷன் ஒரு பொண்டுக பைய..அவ ஒரு தே..டியா ..ஊர் மேய எவன் கூட இருக்களோ ன்னு சொல்லவா..?" என்று சொல்லி முடிக்கவில்லை. வெங்கி சடாரென்று அவர் காலில் விழுந்து, "அப்படி உங்க வாயால சொல்லாதீங்க மாமா.." என அழ ஆரம்பித்து விட்டான். நான் அவர் அப்படிய பேசியதற்கு கோபப்பட்டு அவரை அடிக்க பாய்வான் என நினைத்தேன். "எப்படியாவது சமாளிச்சு அவங்களை ஊருக்கு அனுப்பிடுங்க மாமா..வேறொண்ணும் சொல்லிடாத ..உன் கால பிடிச்சு கேக்குறேன்..!" என அழ, அவர் தலையில் அடித்தபடி  "நான் வர்றேன் சார்..!" என்று கிளம்பி போய்விட்டார்.


நான் எதுவும் பேசாதது, கேட்காதது அவனை ஏதோ செய்திருக்கும் போல. குனிந்த தலை நிமிராமல் அவனாகவே, "சார்..எங்கம்மா..நான் பிறந்தப்பவே செத்துடுச்சு..அக்காதான் சார் எனக்கு எல்லாம்..பாவம் அது புருஷன், சொந்த மாமாதான் மஞ்சு பிறந்த கொஞ்ச நாள்ல செத்து போனாரு..என் மேல என் அக்கா காட்டின பாசத்தை விட அது பொண்ணு மேல நான் அவ்வளவு பாசம் வச்சுருக்கேன் சார்..விபரம் தெரியிறப்ப இருந்தே எனக்கும் அவளுக்கும் தான் கல்யாணமுன்னு சொல்லிட்டே இருக்கும்..எங்கக்கா. மஞ்சுவ நல்ல வசதியா வாழ வைக்கணும்னு நான் ஊரை விட்டு வேலை தேடி இங்கே வந்தேன்..நல்ல வேலை கிடைச்சு..சம்பாரிக்க ஆரம்பிச்சப்புறம்தான் கல்யாணம்னு இருந்தேன். கல்யாணம் முடிஞ்ச அன்னிக்கு எனக்கு புரிஞ்சு போச்சு சார்..எனக்கும் மஞ்சுக்கும் செட் ஆகாதுன்னு..எனக்கு அது மேல அவ்வளவு ஆசை..ஆனா, அது பாசம்னு புரிஞ்சிக்கிட்டேன்..ஒரு புருஷனா அதை நெருங்கவே முடியல..தூக்கி வளர்த்த பிள்ளைல சார்.. மஞ்சுக்கு வேற மாதிரி சார்..இங்க வந்த கொஞ்ச நாளிலேயே அது ரூட்டு மாறிடுச்சு..என்னால அது சொல்றது..செய்யிறது எதையும் தட்ட முடியல..அது தப்பு பண்ணுதுன்னு கூட கண்டிக்க முடியல..அது ஆசையை தடுக்க முடியல..பாசம் என் கண்ணை மறைச்சிடுச்சு..உங்ககிட்ட மட்டும் சொல்றேன் ..சத்தியமா வேற யாருக்கும் தெரியவே கூடாது சார்.." என்றவன் கேவி அழ ஆரம்பித்துவிட்டான். "..என் குழந்தையே என்னுது இல்ல சார்.." என்று தலையில் மடார் மடார் என அடித்துக்கொண்டான். எனக்கு தலையே சுற்றியது. இவன் என்ன பேசுகிறான் என நினைக்கும்போதே, "எனக்கு தெரியாதா சார்..வந்த கொஞ்ச நாளிலேயே அது சீர் கெட்டு போச்சு..எந்த பாவியோடயோ படுத்து வயித்தில புள்ள வாங்கி வந்தா சார்..இஷ்டப்பட்டுதான் படுத்தாளோ இல்ல எவனும் ஏமாத்தி ஏத்திட்டானோ தெரியல.. அவ ஏதும் சொல்லல..நானும் இதுவரை கேக்கலை..நான் மாசமாயிருக்கேன் மாமா ன்னு சொன்னா..அப்பகூட எனக்கு வாய் வரல..நானும் சந்தோசமா இருக்கிற மாதிரி நடிச்சேன்..அதான் டெலிவரிக்கு கூட ஊருக்கு கூட்டிட்டு போகாம இங்கயே பார்த்தேன்.. நா மஞ்சு மேல வச்சிருக்கிற பாசத்தை விட பாப்பா மேல வச்சுருக்கேன்..அது மஞ்சுவோட குழந்தை சார்..என் உசுருக்கு மேல உசுரு..! என்றவன் சற்று ஆசுவாசப் படுத்திகொண்டு என் காலை பிடித்துக்கொண்டான். " ..நா மானம் கெட்டவனு நீங்க நினைச்சாலும் சரி சார்.. என் மஞ்சு ஆசைப்பட்ட மாதிரி வாழட்டும்..நா அதுக்குனே இருப்பேன்..அதுவரை என் குழந்தை போதும் எனக்கு..!" என்றபடி தலைக்கு மேல்  கும்பிட்டபடி போனவன்தான் வரவேயில்லை. தலை கிறுகிறுத்து போனது எனக்கு.

அதன்பின் டீ கடைக்கும் நான் போகவே இல்லை. அந்தப்பக்கம் போக நேரிடும்போது கவனித்தேன்.டீ கடைக்காரரும் கடையில் தென்படவில்லை.ஒரு நாள் கடை வேறு பெயர் பலகையோடிருந்தது. விசாரித்ததில் கடையை அவர் கை மாற்றிவிட்டார் என்று சொன்னார்கள். வெங்கி போன் நம்பர் என்னிடம் இருந்தது. ஏனோ எனக்கு அழைக்க வேண்டும் எனத் தோன்றவே இல்லை. அலுவலகத்தில் அவன் போனை எடுக்கவில்லை என பேசிக்கொண்டனர். வெங்கி போய் இரண்டு உதவியாளர்கள் வந்து போய்விட்டனர். யாரும் நிலைக்கவில்லை.

அவ்வப்போது என் மனைவிதான் வெங்கியைப் பற்றி கேட்பாள். நான் அவளிடம் எதுவும் சொல்லவே இல்லை. அவன் ஊருக்கே சென்று விட்டதாக சொல்லியிருந்தேன் அவளிடம். 

ஆறு வருடங்கள் ஓடிப்போனது.

இன்று புத்தாண்டு. என் மனைவி, வாட்ஸ் அப்பில் ஒவ்வொரு தொடர்பாய் தேடித்தேடி வாழ்த்து அனுப்பிக்கொண்டிருந்தாள். அந்தந்த தொடர்பில் உள்ள படங்களை (DP)  பார்த்தபடி வர, வெங்கி பெயரும் வந்தது. அதிலிருந்த படத்தை பார்தவள்,  "நம்ம வெங்கியை பாருங்க..ஸ்மார்ட்  போன் வாங்கிட்டான் போல..அடேயப்பா..பாப்பா எப்படி வளர்ந்துருச்சு..மஞ்சுவ  காணோம்..அப்பாவும் மகளுமா செல்பி எடுத்திருக்குங்க.." " என்றபடி என்னிடம் காட்டினாள். 

படத்தில் வெங்கி சிரித்தபடி நிற்க  கூட அவன் இடுப்புயரம் மகள் நின்று கொண்டிருந்தாள்.  படத்தை பெரிதுபடுத்தி பார்த்துவிட்டு "பொண்ணு மஞ்சு ஜாடை இல்ல..அவன மாதிரியாங்க இருக்கு..?! என கேட்டாள். நான் கவனியாதது போல என் போனில் மூழ்கிப்போனேன்.

===========================