Thursday, January 28, 2021

தோட்டக்காரன்


சமீபத்தில், நான் பணிபுரியும் பல்கலைக்கழகம் இடம் மாற்றலாகிப்போனது. சுமார் ஆறு ஆண்டுகளாய் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த பல்கலைக்கழகம் இப்போது சொந்த இடத்தில் கட்டிய புதிய கட்டிடத்திற்கு மாறிப்போனது. நாங்கள் முதலில் இருந்த இடத்தை சொந்த இடத்தைப் போல் பாவித்து வந்தோம். ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவருமே. அந்த இடத்தில் முன்புறம், பின்புறம் மற்றும் ஊடாக என எங்கும் பச்சை, பசேலென தோட்டம் இருக்கும். அதை முழுக்க, முழுக்க ஒரு தோட்டக்காரர்தான் கவனித்துக்கொண்டார். அவர் பெயர் வெங்கடப்பா. அவருக்கு ஒரு ஐம்பது, அறுபது வயதிருக்கும் என கணித்திருந்தேன். ஆனால், ஒரு நாள் அவர் சொல்லித்தான் தெரிந்தது. அவருக்கு வயது எழுபத்தி ஂமூன்றாம்! 


காலையில் நாங்கள் போகும் முன்னரே வேலையில் இருப்பார். தண்ணீர் அடிக்க, களை எடுக்க, பூச்சி மருந்து, உரம் தெளிக்க என முழு பராமரிப்பும் அவர்தான். அங்கே வேலையில் சேர்ந்தபின் தான், அவர் அறிமுகத்தில் நிறைய செடிகளைத் தெரிந்துகொண்டேன். அவர் ஒவ்வொரு செடியையும் பற்றி கூறுகையில் அத்தனை ஆச்சரியமாயிருக்கும். வெற்றிலை, வால் மிளகு, கருந்துளசி, தூதுவளை, பிரண்டை, ராம் பழம், அனுமன் பழம் (சீத்தாப்பழம் போலவே பெரிது, நிறம் வேறு). கீரைகளில் அத்தனை வகை. வாழை, பப்பாளி என இல்லாதது இல்லை. விளையும் காய், பழங்களை கேட்பவர்களுக்கு கொடுப்பார். பெரும்பாலும், உணவு விடுதிக்கே கொடுத்து மாணவர்களுக்கு கொடுக்க சொல்லுவார். "எத்தனைப் பேரு இதெல்லாம் சாப்பிட்டுறாப்பங்களோ..இல்லை, இனியும் தான் கிடைக்குமா.." என்று கன்னடத்தில் சொல்லுவார். யாரையும் செடியைத்தொட விட மாட்டார். புதிதாக சேரும் மாணவர்கள் தெரியாமல், இலை, பூவைப்பறித்தால் திட்டாமல் அறிவுறுத்துவார். அவரது அணுகுமுறையே, நம்மை மாற்றிவிடும். நிறைய மாணவர்கள் அவருடன் நெருக்கமாகி சமயங்களில், முதுகில் தெளிப்பான்களை மாட்டிக்கொண்டு பூச்சி மருந்து அடிக்கவும், உரம் போடவுமாய்த் திரிவர். 

அவரிடம் நெருங்கி பழகுவோரிடம் மட்டும் பிறந்த நாளைக் கேட்டு அவரது பாக்கெட் நோட்டில் குறித்து வைத்துக்கொள்வார். மறக்காமல், ஒரு செடியை அழகானத்தொட்டியில் வைத்து பிறந்த நாளன்று பரிசளிப்பார். அவர் கொடுத்த துளசி, ரோஜா என் வீட்டில் இன்னமும் அவரை நினைவூட்டுகிறது.


கொரானா கால கட்டத்தில், நாங்கள் எப்போதாவதுதான் அலுவலகம் போவதுண்டு. மாணவர்களும் வேறு இல்லை. மொத்த வளாகமே வெறிச்சோடிப்போனது. நான் போகும்பொதெல்லாம் அவர் அங்குதானிருப்பார். ஒரு நான்கைந்து பேர்தான் போவோம். எங்களுக்கு அங்கிருக்கும் வெற்றிலை, துளசி வேறு ஏதேதோ போட்டு கொதிக்க வைத்து குடிக்கக்கொடுப்பார். கொரானா அப்பனே வந்தாலும் நெருங்காதென்பார்.  எல்லா செடி, மரங்களும் நன்றாய் வளர்ந்திருந்தது. "இந்த பூவைப்பாருங்க..இந்த பழம் பார்த்தீங்களா..இது எப்படி வளர்ந்துருச்சுப்பார்த்தீங்களா.." என்று ஒரு குழந்தையைப்போல குதூகலிப்பார்.  


புதிய வளாகத்திற்கு, இங்கிருக்கும் செடி, மரங்களையெல்லாம் 'அப்படியே' எடுத்துக்கொண்டு போய் விட முடியும் என யாரோ யோசனை சொல்ல, நிர்வாகம் சரியென முடிவெடுத்தது. அதற்கென 'வெண்டார்' ஒருவர் அனுமதிக்கப்பட அவர்கள் மரம், செடி என 'அலேக்காய்' த்தூக்க ஆரம்பித்திருக்கின்றனர். நம் தோட்டக்காரர் வெங்கடப்பா அதற்கு துளியும் சம்மதிக்க வில்லை.  அவர் சம்மதத்தை யாரும் எதிர்பார்க்கவுமில்லை. அவரை ஒரு பொருட்டாய் கூட மதிக்கவில்லை. எங்களைப்போன்ற அவரிடம் பழகிய ஆட்களும் யாருமில்லை அப்போது. எனக்கு போன் பண்ணி, "நீங்களாவது எடுத்து சொல்லுங்கள்..அது பாவம்..வளர்ந்த மண்ணிலிருந்து மரத்தை பிடுங்கக்கூடாது..செத்துப்போவும்..கொலைக்கு சமம்.." என புலம்பினார். நான் கையறு நிலையில் இருந்தேன்.


நீண்ட நாட்களுக்குப்பின் அலுவலகம் அழைக்கப்பட்டோம், முற்றிலும் புதிய, மிகப்பெரிய வளாகம். இன்னமும், கட்டிட வேலை முடிந்தபாடில்லை. ஒவ்வொருவரும் புதியதாய்த்தெரிந்தனர். கிட்டத்தட்ட பத்துமாதங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்து பழக்கப்பட்டிருந்தோம். இயற்கை சூழலில் இதற்கு முன்னர் இருந்து விட்டு இப்போது படு செயற்கையாயிருந்தது. 


மாலையில் 'கேட்'டருகே செல்கையில், செக்யூரிட்டியிடம் யாரோ சத்தமாய் ப்பேசிக்கொண்டிருந்தது கேட்டுத்திரும்பினேன். அட..நம்ம வெங்கடப்பா..தோட்டக்காரர். ஆள் மெலிந்து, தாடியுடனிருந்தார். என்னைப்பார்க்கவும் மகிழ்ந்துப்போனார். நான் செக்யூரிட்டியிடம் அவரைப்பற்றிக்கூறினேன். அவரோ "எல்லாம் தெரியும் சார்..இந்த ஆளை உள்ளார விடக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க..இன்னும் இந்தாளு நா வச்ச செடி..மரம்னு வந்துன்னே இருக்காரு...அதுக்கெல்லாம் ஆளுங்க வந்துட்டான்ங்கன்னு சொன்னா கேக்க மாட்டேங்கிறாரு.." என்றார்.  பழைய வளாகத்திலிருந்து எடுத்து வந்து 'வைத்த' சில மரங்கள் இங்கே வளர ஆரம்பித்து விட்டதாம். அதையெல்லாம் அவர் பார்ப்பதற்காக தினமும் வர ஆரம்பித்திருக்கிறார். வந்தவர் சில அறிவுரைகளும் சொல்ல அது, புதியதாய் 'லேண்ட்ஸ்கேப் & ஹார்டிக்கல்ச்சர்' பொறுப்பேற்றவருக்குப்பிடிக்கவில்லை. அவரை இனிமேல் உள்ளே வரக்கூடாதென சொல்லிவிட்டார்களாம்.


நான் எனது ஷட்டில் செர்வீஸ் வண்டியில் செல்லாமல், நகர்ப்பேருந்தில் பயணிக்கலாம் என நடக்க ஆரம்ப்பித்தேன், அவருடன் பேசுவதற்காகவே. என்னுடன், வெங்கடப்பாவும் அவரது டிவிஸ் 50 ஐ தள்ளிக்கொண்டே நடக்க ஆரம்பித்தார். அவர் பேச்சு முழுவதும் அங்கிருந்து இங்கு நட்டு வைத்த செடி, மரங்களைப்பற்றியே இருந்தது. வாடிப்போய், இறந்த மரத்தைப்பற்றிக்குறிப்பிடுகையில் மிக வருத்தமாய்க்குறிப்பிட்டார். ஒன்றிரண்டு பிழைத்துத்துளிர்க்க ஆரம்பித்து விட்டதை அத்தனை மகிழ்வாய்க்குறிப்பிட்டார். 


பேருந்து நிறுத்தம் வந்தவுடன் கேட்டேன். "நீங்கள், அந்த பழைய இடத்துக்குப்போகவில்லையா..அங்கே வேறு ஏதோ ஸ்கூல் வரப்போவுது போல..அங்க போயி தோட்ட வேலை கேக்கலாமில்லையா.." என்றேன். என்னை ஊடுருவிப்பார்த்தவர், "ஸ்கூல் இல்லை ஏதோ காலேஜ் மாதிரி இருக்கு..என்னை கூப்பிட்டாங்க.." என்றவர், "எப்படி சார்..அங்க போக முடியும்..அத்தனை வருஷம்..நான் வளர்த்த செடி மரத்தையல்லாம்..வேரோடு பிடுங்கின இடத்துல போய் எப்படி வேலை பார்க்க முடியும்.." என்றார் எங்கோ பார்த்தபடி.


பேருந்து வருவது தெரிந்தது. செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என நூறு ரூபாய்க் கொடுத்தேன். வாங்க மறுத்தவர், "செக்யூரிட்டி வேலைக்கு கேட்டிருக்கேன்..என்று சிரித்தபடி, "அந்த ரோஜா செடி எப்படியிருக்கு..ரெண்டு வருஷமாச்சுன்னு நினைக்கிறேன்..மண்ண, தொட்டியை மாத்திடுங்க" என்றார். 


பேருந்தில் ஏறியவுடன், பைகளை மடியில் வைத்தேன். வழக்கமாய் ஒரே ஒரு லேப்டாப் பைதான். இன்று, அலுவலகத்தில் எல்லோருக்கும் ஒரு பையில் ' சிறிய ஹேண்ட் சானிடைசர், நாலைந்து பேஸ் மாஸ்க்குகள் மற்றும் ஒரு வாழ்த்து அட்டை' கொடுத்திருந்தனர். வாழ்த்து அட்டை 'வெல்கம் டூ நியூ கேம்பஸ்' என மின்னியது, ஒரு பிளாஸ்டிக் ரோஜாவுடன்!

---