Friday, September 29, 2023

மழை பெய்யணுமில்ல..!

வீட்டிற்கு வந்து எடுத்து வைக்கும் போதுதான் கவனித்தேன், கூடுதலாக ஒரு பொட்டலம் இருந்ததை. அதை பிரித்துப் பார்த்தால் கேசரி ! இள மஞ்சள் நிறத்தில் தக தகவென வாழை இலையில் மின்னியது.  "இட்லி மட்டும் போதும் னு தானே சொன்னேன்.. கேக்குறதே இல்லை.. இஷ்டத்துக்கு வாங்கிட்டு வர்றது..!" என்றாள் என் மனைவி. "சூப்பர்.. கேசரி யா..!" என்றான் என் மகன். எனக்கோ யோசனை.. நான் சொல்லவே இல்லையே.. பாவம் யாருக்கு கொடுக்க வேண்டியதை எனக்கு கொடுத்து விட்டார் போல என நினைத்தேன். பாவம் இந்நேரம் யாரோ வீட்டில் ஏமாந்து போகும் ஒருவரை, அது குழந்தையாய் கூட இருக்கலாம். அவர் மனைவியிடம் திட்டு வாங்குவதையும் நினைத்துக் கொண்டேன். அவர் மீண்டும் வந்து அந்த ஓட்டல் சர்வரை திட்டலாம். கல்லாவில் இருப்பவரை காசு வாங்கியதற்காக சண்டையிடலாம். 

அப்போதுதான் உறைத்தது, நான் அதற்கு காசே கொடுக்க வில்லை என்று. அது ஒரு பழைய ஓட்டல். விட்டல் என பெயர், அத்திப்பள்ளியில்! அதை 'பட்டர்' ஓட்டல் என்றே அழைத்தனர். கன்னடத்தில் பட்டர் என்றால் பிராமணர் என பொருள். நம்மூர் 'பிரமாணாள் கபே ' போல். நான் ஆனேகல் வீடு மாறியவுடன் இந்த ஓட்டல் எனக்கு கை கொடுத்தது. வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு, ஞாயிறுகளில் காலை சிற்றுண்டிக்கு என அவ்வப்போது அத்திப்பள்ளி போய் பார்சல் வாங்கி வருவேன். மற்ற ஓட்டல் போலல்லாமல், அங்கேயே சாப்பிட்டாலும் சரி, பார்சல் வாங்கினாலும் சரி, கவுண்டரில் போய் வேண்டியதை கேட்டால், சாப்பிட என்றால் தட்டில் வைத்து கொடுப்பார்கள். டேபிளில் நின்று சாப்பிட்டுக்கொள்ளலாம். (self service). பார்சல் என்றால் பொட்டலம் போட்டு கொடுப்பார்கள். வெளியே வரும்போது கல்லாவில் சொல்ல வேண்டும், என்ன சாப்பிட்டோம், இல்லை என்ன பார்சல் என்று. அவர் வாயிலேயே கணக்குப் போட்டு சொல்லுவார். அவ்வளவுதான். டோக்கன் முதலில் வாங்குவதோ, பணம் போட்டு பில் வாங்கி பார்சல் வாங்குவதோ கிடையாது. எனக்கு இது முதலில் விநோதமாய் இருந்தது. ஆனால், அங்கு வரும் வாடிக்கையாளருக்கு சாதாரணமாய் இருந்தது. நானும் அவ்வாறே பழகிக் கொண்டேன். 

இன்று அப்படித்தான் நான் தட்டை இட்லி, பூரி மட்டும் பார்சல் கேட்டு, அதை மட்டும் சொல்லி பணம் கொடுத்து வாங்கி வந்திருந்தேன். இங்கு வந்து பார்த்தால் தான் கேசரி பொட்டலம் கூடுதலாய் வந்திருந்தது தெரிந்தது. நான் இத்தனையும் யோசிப்பதற்குள் என் மனைவியும், மகனும் அவர்கள் உணர்வை வெளிப்படுத்தினர். பின்னர் அவர்களுக்கு நான் விளக்கியதும், "அட.. ஓசி கேசரி .. சூப்பர்!" என்றான் என் மகன். "நமக்கு எத்தனை வாட்டி சட்னி சாம்பார் மறந்துருப்பான்.. இருக்கட்டும்!" என்றாள் என் மனைவி. 

"காசு கொடுக்காம சாப்பிட்டா, அவங்களா கொடுக்காம சாப்பிட்டா உடம்புல ஒட்டாதுப்பா.." என்றார் என் அம்மா. இப்போது அந்த கேசரியை என்ன செய்வதெனத் தெரியவில்லை. நாங்கள் மூவரும் அதைப் பார்க்க, திறந்து வைத்திருந்த கேசரி சிரித்தது. "சரி விடு.. செக்யூரிட்டிக்கு வேணா கொடுத்திரலாம் .. நம்ம சாப்பிட வேணாம் !" என நான் சொல்ல என் மகன் விக்கித்துப் போனான். என் அம்மா, " யாரோ பொருளை நம்ம தானம் செய்ய படாதுப்பா..!" எனக்கு கோபம் வந்தது.. "அட சும்மா இரும்மா நீ..! ஒரு கேசரிக்கு போய்ட்டு..! நீ சாப்பூடிரா" என்றேன் என் பையனிடம். அவன் அவ்வளவுதான். "எனக்கெல்லாம் வேணாம் பா.. ஆச்சி சொல்லிட்டாங்க.." என்றான். 

"சரி.. அதை அப்புறம் பாக்கலாம்.. மத்ததை சாப்பிடுங்க..!" என்றேன். "அப்ப அதை என்ன பண்டறது.. அதை நடுவில வச்சுக்கிட்டா சாப்பிடறது..?"  என்றாள் என் மனைவி. "தூக்கியும் போட முடியாது, யாருக்கும் கொடுக்கவும் கூடாது ! என்னதான் பண்றது..?" என்றேன் பரிதாபமாய். பசி ஒரு பக்கம்.. அவ்வளவு தூரம் போய் வாங்கி வந்த களைப்பு மறு பக்கம் எனக்கு. மழை வேறு விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. 

"ஒண்ணு பண்ணுபா .. வீணாக்க வேணாம்.. இப்ப சாப்பிட்டு, அப்புறமா போய் காசை கொடுத்துடு.. விவரம் சொல்லி..!" என்றார் என் அம்மா.அது நியாயம் எனப் பட்டது எனக்கு.  நமக்கும் உறுத்தல் இருக்காது என்று என் பையனை எடுத்துக் கொள்ள சொன்னேன். என் மனைவி அதை எல்லோருக்கும் பங்கிட்டாள். நாலு பேருக்கும் அது என்னவோ பிரசாதம் போலிருந்தது. 

சாப்பிட்டு முடித்ததும் என் அம்மா, "மறக்காம போய் காச கொடுத்திடுப்பா .. சாப்பிட்டாச்சு வேற..!" என்றார். என் பையனும், மனைவியும் சிரிக்க எனக்கோ முதல்ல போய் காசை  கொடுத்திடலாம் என கிளம்ப எத்தனிக்கையில் நினைவு வந்தது. அந்த ஓட்டல் ஞாயிறு காலை பதினொரு மணி வரை மட்டும்தான். அதன் பின் விடுமுறை. இனி கிளம்பி போக முடியாது, மழை வேறு பெய்து கொண்டிருந்தது. நாளை கொடுத்து விடலாம் என எண்ணியபடி  இருந்து விட்டேன். 

திங்கள் கிழமையும் வந்தது. மாலை வீடு திரும்பியதும் என் அம்மா கேட்கும்போதுதான் நினைவு வந்தது. "கேசரிக்கு காசு கொடுத்திட்டியப்பா..!" "ஆ.ங்.. கொடுத்தாச்சு..!" என்று பொய் சொன்னேன். இல்லையென்றால் மீண்டும் ஆரம்பித்து விடுவார். என் மனைவி என்னைப் பார்த்து என் அம்மா பேசுவது போல், "பொய் சொல்ற வாய்க்கு போஜனை கிடைக்காதுப்பா..!" என்றாள் நக்கலாக.  

அந்த வாரம் ஓடியேப்போனது! மீண்டும் ஞாயிறு! இரவு முழுவதும் நல்ல மழை. கரண்ட் வேறு இல்லை. என் மனைவியும், மகனும் தூங்கிக் கொண்டிருந்தனர்  என் அம்மாவிடம் மட்டும் சொல்லிக்கொண்டு டிபன் வாங்க கிளம்பினேன். 

பார்சல் வாங்கிக்கொண்டு, வாங்காத கேசரிக்கும் சேர்த்து கணக்கு சொன்னேன். அந்த காசைக் கொடுத்தவுடன் ஒரு பாரமே இறங்கியது போலிருந்தது. முன்னருக்கு இப்போது சற்று பழக்கமாயிருந்தார் அந்த ஓட்டல் முதலாளி. கூட்டம் சற்று குறைவாய் இருந்தது. அவரிடம் பேச்சு கொடுத்தேன்,  ஏன் டோக்கன் சிஸ்டம் இல்லை.. எப்படி நம்பி கொடுக்கிறீர்கள் எனக் கேட்டேன். என்னை அதிசயமாய்ப் பார்த்து "நீங்கள் கேள்விப் பட்டதில்லையா எங்கள் ஒட்டலைபபற்றி..? என சிரித்தபடி, "யாரும் பசிக்காக பரிதவிக்க வேண்டியதில்லை.. பசிக்காக யார் வேண்டுமானாலும் இங்கு வந்து சாப்பிடலாம். அதனால்தான் இந்த டோக்கன் சிஸ்டம் லாம் என் அப்பா வைக்க கூடாது என்று சொல்லி விட்டார். நேராக போய் சாப்பிட்டு சங்கோஜமே படாமல் போய் விடலாம். காசு கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் மட்டும் கொடுக்கலாம்...!" என்று ஆச்சரியப் படுத்தினார். இத்தனைக்கும் அங்கே உணவு அத்தனை அருமையாய் இருக்கும். 

கூட்டம் வர ஆரம்பித்தது. சரி கிளம்பலாம் மழை வருமுன் என நினைத்தப்படி,"எப்படி இந்த விலைவாசியில், இத்தனை வருஷமாய் சாத்தியமாயிற்று..?" எனக் கேட்டேன். "இப்போ சமீபமா கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு.. நிறைய வசதியானவங்க கூட தெரிஞ்சுகிக்கிட்டு, காசு கொடுக்காம போறாங்க.." என அலட்டிக்கொள்ளாமல் சொல்ல, ".. அட.. கொடுமையே.. அப்புறமும் ஏங்க ..?" என முடிக்குமுன் என்னை உற்றுப் பார்த்தபடி "மழை பெய்யணுமில்லை..!" என புன்னகைத்தார் பெரிதாய். 


வெளியே மழை பெய்யத் தொடங்கியது!


-----------------------------