Friday, February 21, 2020

பெண் நடத்துனர்

தினமும் செல்லும் அதே பேருந்துதான் . ஆனால், ஓட்டுனரும், நடத்துனரும் புதிதாயிருந்தனர். அதிலும், பெண் நடத்துனர்.வழக்கமான பயணிகள் கூட்டம் மற்றும் புதிதாய் பயணிப்போர் என கூட்டம் நிரம்பி வழிந்தது. பேருந்து சற்று மெதுவாய்த்தான் போனது. ஓட்டுநருக்கு வழித்தடம் புதியது மட்டுமல்ல, வயதும் அதிகமாயிருந்தது. வழக்கமான நடத்துனர் எனில் யார் பாஸ் வைத்திருப்போர் எனத்தெரியும். புதிய பயணிகளிடம் மட்டும் டிக்கெட் வழங்கிவிட்டு, ஸ்டேஜில் தாமதிக்காமல் பேருந்து நேரத்திற்கு செல்ல உதவுவார். ஏனெனில், காலை 6.45 மணிக்கு டிப்போவில்  கிளம்பி சார்ஜாபூர் அடைய 8.15, 8.30 ஆகிவிடும். பெங்களூரைப் பொறுத்தவரை தூரத்தை விட , போக்குவரத்து நெரிசலே நாம் செல்லும் நேரத்தை தீர்மானிக்கும்.

புதிய நடத்துனர் பெண்மணி ரொம்பவும் திணறித்தான் போனார். ஸ்டேஜில் நின்று போக, போக தாமதமாகிக் கொண்டே போனது. அதுவும் வார முதல் நாள், திங்கள் கிழமை வேறு. வெளியே போக்குவரத்து நெரிசல், உள்ளே வேலைக்கு செல்வோரின் எரிச்சல், முனகல். என்னைப் போல் சிலர் நடத்துனர் பெண்மணியை பரிதாபமாகப் பார்த்தோம். அவர் முகத்தில் ஓர் இனம் புரியாத உணர்ச்சி தெரிந்தது. கவலையா, குழப்பமா இல்லை வலியா என்று கண்டுணர முடியவில்லை.

தொம்மசந்திரா நிறுத்தம் வருவதற்கே மணி எட்டாகிப்போனது. ஏழே முக்காலுக்கு தாண்டியிருக்க வேண்டியது. புலம்பித்தள்ளிவிட்டனர்.  நல்ல வேளையாக அதற்குள் முக்கால்வாசி கூட்டம் இறங்கியிருந்தது. பேருந்து நிறுத்தத்தை விட்டு சற்று தொலைவில், ஆனால் வழியில் ஒரு பொது கழிப்பறை உண்டு. நடத்துனர் பெண்மணி, ஓட்டுநரிடம் நிறுத்த சொல்லி வேகமாய் இறங்கிப்போனார். அவ்வளவுதான், உள்ளே இருந்த கூட்டம் கன்னடம், தமிழ், ஹிந்தி என ஓட்டுநரிடம் கத்த ஆரம்பித்தது. ஓட்டுநருக்கோ சங்கடமாகிப் போனது. ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். வந்துவிட்டார் அந்த நடத்துநர் பெண்மணி. வந்தவரிடம், மீண்டும் கத்த ஆரம்பித்தனர் பயணியர் கூட்டம். அதிலும், குறிப்பாய் பெண்கள் கூட்டம். எனக்கு ஆச்சர்யமாகிப் போனது. ஒரு பெண்மணி கன்னடத்தில் ஏதோ சொன்னது எனக்குப் புரியவில்லை. ஆனால், ஓட்டுநர் கோபமாக பதிலுக்கு "நீயெல்லாம் ஒரு பொம்பளையா" என திட்டியது மட்டும் புரிந்தது.

ஆனால், நடத்துநர் பெண்மணி உட்கார்ந்தவர், உட்கார்ந்தவர் தான்.அவர் இருக்கையை விட்டு எழவே இல்லை. இருவர் அடுத்த நிறுத்தத்தில் ஏறி பயண சீட்டு கத்தி கேட்டும் அவர் வரவே இல்லை. அவர்களும் இறங்கி போக இப்போது நான் உட்பட மூவர் மட்டுமே இருந்தோம். எங்கள் நிறுத்தமும் வந்தது. சொல்லியது போல் நாங்கள் மூவரும் ஓட்டுநர் அருகே போய்  நின்றோம், முன் வழியே இறங்குவதற்கு. அப்போதுதான் பார்த்தேன். நடத்துநர் பெண்மணி தலை குனிந்தவாறு உட்கார்ந்திருந்தார்.

ஓட்டுநர் எங்களிடம் கன்னடத்தில், "நேரமாயிருச்சா..இன்னைக்கு? ரொம்ப சங்கடமாயிருக்கு!" என்றார் கவலையுடன். எங்களில் இருந்த ஒரு முதியவர், "இல்லைப்பா, நேரமெல்லாம் நிறையவே இருக்கு எங்களுக்கு..என்னா?!" என்றார் என்னையும், இன்னொரு நபரையும் பார்த்து. ஆமாம் என்றோம் ஒருமித்து.  (ஆவுது, ஆவுது என்றோம் கன்னடத்தில்)

இறங்கிய எங்கள் மூவரையும் பார்த்து ஓட்டுநர் வணக்கம் வைத்தார்.ஆனால், நாங்கள் மூவரும் நடத்துநரைத்தான் கவலையுடன் பார்த்தோம். நிமிர்ந்த நடத்துநர் பெண்மணி எங்களைப் பார்த்து புன்னகைத்தார். எங்கள் மூவருக்கும் அதில் அப்படியொரு ஆனந்தம். 

வழக்கத்திற்கு மாறாய், அன்றைய பொழுது மெதுவாய் நகர்ந்தது.