Tuesday, February 2, 2021

 லெமன் சாதம்



"எல்மிச்ச சாதம்"..! இப்படித்தான் நான் அழைப்பது 'எலுமிச்சம்பழ சாதத்தினை' என் பள்ளி பருவ நாட்களில். சிறு வயதில், என் பெரியம்மா மூலம் அறிமுகமாகியது. பார்த்தவுடன் பிடித்துப்போனது. அதன் இள மஞ்சள் நிறமும், மேனியில் எண்ணைத்தடவிய பொரித்த நிலக்கடலையும், கரும்பச்சை நிற கறிவேப்பிலை, கடலை பருப்பு, கடுகு என பெருங்காய நறுமணத்துடன் ஆளை மயக்கியது. பொல, பொலவென உதிரியாயிருந்த சாதத்தை எடுத்து வாயில் போட்டால் அதன் எலுமிச்சை வாசனையுடன் கூடிய அந்த புளிப்பு சுவை கிறங்கடித்தது. அப்போது மிஞ்சிப்போனால், எனக்கு ஏழெட்டு வயதிருக்கும். அது முதல் 'எலுமிச்சை சாதம்' என்னுடைய 'ஆகப்பிரியமானதாகிப்போனது'. 

ஐந்தாம் வகுப்பு வரை, வீட்டருகே பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். தினமும் மதியம் சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்து போவேன். சாப்பிட்ட கையோடு பள்ளிக்கு ஓடி விடுவேன், விளையாடுவதற்காக. மதியம் முதல் வகுப்பு ஆரம்பிக்கும் வரை உணவு இடைவெளியில் ஒரே ஆட்டம்தான். சாப்பாடு கொண்டு வரும் மாணவர்களும் சீக்கிரமாய் சாப்பிட்டு விளையாட்டில் சேர்வதுண்டு. அப்போது, யாராவது மதிய சாப்பாட்டிற்கு எலுமிச்சை சாதம் கொண்டு வந்து சாப்பிடுவதைப்பார்க்கையில் "சே..நம்மளும் போர்ட் ஹைஸ்கூல் சேர்றோம்..டெய்லி சாப்பாடு எடுத்துட்டுப்போறோம்..அதுவும் எலுமிச்ச சாதம்தான்.." என எண்ணிக்கொள்வேன். ஏன் போர்ட் ஹைஸ்கூல் என்றால் அதுதான் வீட்டிலிருந்து தூரம். அப்போதுதான் சாப்பாடு கட்டி கொடுப்பார்கள். 

எப்படியும், என் அம்மாவை நச்சரித்து வாரம் ஒரு முறையாவது எலுமிச்சை சாதம் செய்ய வைத்துவிடுவேன். ஆனால், என் பெரியம்மா செய்தது போலிருக்காது. என் அம்மா, வேர்க்கடலையெல்லாம் போட மாட்டார்கள். இருந்தாலும் எனக்குப்பிடிக்கும். என் அம்மா செய்யும் உருளைக்கிழங்கு மசாலா இருந்தால் போதும். அன்றைக்கு எலுமிச்சை சாதம் என் பிறவிப்பயனைக்காட்டும். உருளைக்கிழங்கு மசாலா இல்லாத சமயங்களில், அரிசி வடாகம், கூழ் வடாகம் சமன் செய்யும்.  என் அம்மா வேடிக்கையாய், "இவனுக்கு எலுமிச்சை மரம் இருக்கிற வீட்டு பொண்ணாதாண்டா..பார்க்கணும்" என்பார். என் அண்ணகள் அம்மாவிடம், "ஒயாம எப்பப்பார்த்தாலும்..எலுமிச்ச சாதமா" என சத்தம் போடுவர். என் அம்மாதான் எனக்காகப் பரிந்து பேசுவார். "போத்திக்கு அதானடா பிடிச்சிருக்கு..இஷ்டமா சாப்பிடுறான்" என்பார். போத்தி என்பது என் செல்ல பெயர். அதுவும்,  நான் கடைக்குட்டி என்பதால் அண்ணன்களும் ஒன்றும் சொல்லமாட்டார்கள். 


ஆறாம் வகுப்பும் வந்தது. நான் எதிர்பார்த்த ஹைஸ்கூல் இல்லையென்றாலும், இதுவும் தூரமாய்த்தானிருந்தது. காலையிலேயே, என் அம்மா சுடச்சுட ஏதாவது சமைத்து சாப்பிட வைத்து, தூக்குசட்டியில் கட்டியும் கொடுத்து விடுவார்கள். அப்போதெல்லாம் தூக்கு சட்டிதான். நான் ஒன்பதாம் வகுப்புக்கு மதுரை வந்தவுடன் தான் 'டிபன் பாக்ஸ்' அறிமுகமானது. மதியம் உணவு இடைவேளையில் கட்டிகொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு இங்கேயும் விளையாட்டுதான். பள்ளி அருகில்தான் ஜானகி ராம் மில்லிருந்தது. ராஜபாளையத்தில் பஞ்சு மில்கள் மிகப்பிரசித்தம். அந்த மில்லின் கேண்டீன் மில்லிற்கு வெளியே இருக்கும். அது பொதுவானது. எல்லோரும் அங்கே சாப்பிடலாம். ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து சில மாணவர்கள் வந்து படிப்பதுண்டு. அவர்கள், பெரும்பாலும் சற்று வசதியானவர்கள். மதியம் அந்த மில் கேண்டீனில்தான் சாப்பிடுவர். சில மாணவர்கள், அவர்களுடன் சென்று தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை அங்கே 'டேபிளில்' உட்கார்ந்து சாப்பிடுவார்கள். 'டேபிளில்' உட்கார்ந்து சாப்பிடுவதற்காகவே அவர்கள் விரும்பி போவதுண்டு. ஓட்டலில் வாங்கி சாப்பிட முடியவில்லையென்றாலும், அங்கே தாம் கொண்டு வந்த சாப்பாட்டை டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவது என்பது தனி அலாதிதான்.

நானும், ஏழாம் வகுப்பு வந்தவுடன் அவ்வப்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் நண்பர்களுடன் மில் கேண்டீனுக்குப் போக ஆரம்பித்தேன். நான் கட்டிக்கொண்டு போகும் உணவைத்தான் சாப்பிடுவேன். அங்கே வாங்கி சாப்பிடும் அளவுக்கெல்லாம் காசிருக்காது. ஒரு நாள், என் நெருங்கிய நண்பன் ரமேஷ் பாலையா 'லெமன் சாதம்' வாங்கினான். கேண்டீனில் 'லெமன் சாதம்' என்றுதான் எழுதியிருப்பார்கள். லெமன் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், வடை அவ்வளவுதான் அவர்கள் மதிய மெனு. லெமனும், தக்காளியும் முப்பது பைசா, தயிர் இருபது, வடை பத்து பைசா, அவ்வளவுதான். என் தினசரி பாக்கெட் மணி பத்து பைசா. ஆனாலும், அதில் வடை வாங்கி சாப்பிட மனமிருக்காது. வீட்டிற்குத்தெரியாமல், கேண்டீனில் சாப்பிடுவதென்பது ஒரு குற்ற உணர்வை உண்டாக்கும். ரமேஷ் பாலையா தட்டிலிருந்த லெமன் சாதம் வித்தியாசமாயிருந்தது. மஞ்சள் நிறம் சற்றி வெளிறி, குழைவாயிருந்தது. அதற்குத் தொட்டுக்கொள்ளவென்று வெங்காய மசால் கொடுத்திருந்தனர். நான் பார்ப்பதைப்பார்த்துவிட்டு, என் தூக்குசட்டி மூடியில் கொஞ்சம் வைத்தான்.  சாப்பிட்டுப்பார்த்தால், புது மாதிரியாயிருந்தது. அதுவும் அந்த வெங்காய மசால் என் அத்தனை நாள் உருளைக்கிழங்கு மசாலை மறக்க செய்தது. நன்றி கெட்டவனாகிப்போனேன். இத்தனைக்கும் அது சாதரண, வெறும் வெங்காயம் மட்டுமே போட்டு செய்த மசால். அந்த 'லெமன் சாதமும்' என் 'எலுமிச்சை சாத'ப்பாசத்தை பரீசிலிக்கச்செய்தது.

வீட்டிற்கு வந்ததும் ஆரம்பித்துவிட்டேன். என் அம்மாவும்,  "சாதம் பச்சரிசியாயிருக்கும்..குழைஞ்சிருக்கும் போல..மஞ்சத்தூளு கம்மியாப்போட்டுருப்பாங்க.." என்றார். எனக்கு அப்போதுதான் தெரியும், மஞ்சத்தூள் தான் அந்த கலருக்கு காரணம் என்று. நான் நினைத்திருந்தேன் எலுமிச்சைக்கலர் அப்படியே பிழியும்போது வந்து விடுமென்று. நான் சொன்னதைக்கேட்டு என் அம்மாவும், அக்காவும் சிரிக்கிறார்கள். வெங்காய மசாலைப்பற்றி சொன்னவுடன், "அவன் வாங்கிற முப்பது பைசாவுக்கு..அவன் என்ன உருளைக்கிழங்கு மசாலாவா கொடுக்க முடியும்..வெறும் வெங்காயந்தான் போடுவான்" என்றனர். என்னால் சமாதானம் ஆக முடியவில்லை. என்னைப்புரிந்து கொண்ட என் அக்கா "சரி..ஒரு நாள் நீயும் வாங்கி சாப்பிடு..காசு தர்றோம்" என்று சொன்னவுடன் எனக்கு அப்படி ஒரு ஏகாந்தம். ஆனால், என் அம்மாவோ "அது என்ன பழக்கம்..வெளில சாப்பிடுறது.. நாளக்கே எலுமிச்ச சாதம் செஞ்சு தர்றேன்..எடுத்துட்டுப்போ" என்றார். எனக்கு கோபம் வந்து விட்டது. கைக்கு வந்தது வாய்க்கு வராமல் போய் விடுமோவென்று. "ஒன்னும் வேணாம்..உன் சாதம் நல்லாயில்லை..நீயே சாப்பிடு.." என சொல்ல முதுகில் விழுந்தது ஒன்று.

அதன்பின் கேட்கவேயில்லை. நமக்கு 'எலுமிச்சை சாதம்' தான். 'லெமன் சாதத்திற்கு' கொடுப்பினை இல்லை என நொந்து கொண்டேன். அவ்வப்போது மில் கேண்டீனுக்குப்போவதுண்டு. ஆனால், லெமன் சாதம் வாங்கவுமில்லை. ரமேஷ் பாலையா கொடுப்பதை சாப்பிடவுமில்லை. இருந்தாலும், அம்மா  எலுமிச்சை சாதம் கட்டித்தருவது தொடர்ந்தது. ஆனால், வீராய்ப்பாய் என் சந்தோஷத்தை அம்மாவிடம் காட்டிக்கொள்வதில்லை. 


அந்த நாளும் வந்தது! ஒரு நாள் காலை, வீட்டிற்கு தந்தி ஒன்று வந்தது. அப்போதெல்லாம் தந்தி என்பது துக்க செய்திக்காகவே என்றிருந்தது. அவ்வளவுதான், என் அம்மா வாய் விட்டு எல்லா தெய்வங்களையும் வணங்க ஆரம்பித்தார். எதிர்பார்த்தது போலவே, அம்மாவின் சித்தப்பா, எங்கள் சின்ன தாத்தா காலம் எய்திருந்தார். அப்பா வேறு ஊரில் இல்லை. அம்மா அழுகையூடே கிளம்பினார், திண்டுக்கல்லுக்கு. அண்ணனிடம் காசு கொடுத்து, ஓட்டலில் சாப்பிட்டு சமாளிக்க சொன்னார், அப்பா வரும் வரை. அவ்வளவுதான், எனக்கு அப்போதே பிடிபடவில்லை. ஒன்று, ஓட்டலில் சாப்பிடலாம். அதை விட முக்கியமாய், மதியம் லெமன் சாதம் சாப்பிடலாம். அத்தனை பூரிப்பு எனக்கு.

என் அண்ணன் நல்ல பெயரெடுப்பதற்காகவே, "நானே சமைக்கிறேன்..அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்கடா..ஓட்டல்லாம் வேணாம்.." என்றான். என் சின்ன அண்ணன் சரி என்பது போல் தலையாட்டினான். எனக்கு கோபம், அழுகை பொத்துக்கொண்டு வந்தது. கோபம் காட்ட இயலாத இடத்தில், அழுகைதானே வரும். என் சின்ன அக்காதான், "நம்ம வேணா வீட்டில சாப்பிட்டுக்கலாம்..பாவம் போத்தி ஓட்டல்ல வாங்கி சாப்பிட்டுக்கிட்டும்" என சொன்னாள். அதற்கும் மசியாத என் பெரியண்ணன், "இப்ப டைம் ஆச்சு, சாப்பாடு கட்டி தர முடியாது..மத்தியானம் வேணா மில்லு கேண்டீன்ல சாப்பிட்டுக்க..நைட்டும், நாளைக்கும் நான் சமைக்கிறதுதான்" என்றான். இது போதுமப்பா..என்று மானசீகமாய் கும்பிட்டேன்!


கையில் முப்பது பைசா..! போனவுடனே, ரமேஷ் பாலையாவிடம் சொல்லிவிட்டேன்.அன்றைக்குப்பார்த்து அவன் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்தான். அன்றைய காலை வகுப்பு நீண்டதாயிருந்தது. மதியம் சாப்பாட்டு மணி அடிக்கவும், நானும் ரமேஷ் பாலையாவும் கேண்டீனுக்கு ஓடினோம். டேபிளில் இடம் பிடிக்க வேண்டுமே. நான் கல்லாவில் டோக்கன் வாங்கப்போனேன். ரமேஷ் பாலையா டேபிளில் இடம் பிடித்து வைத்திருந்தான். "லெமன் சாதம்ம்ம்.." என்று முப்பது பைசாவைக்கொடுத்தேன். கொடுக்கும்போதே எனக்கு அவ்வளவு சிரிப்பு. அவரிடம் டோக்கன் வாங்கி, அருகில் நிற்கும் சர்வரிடம் கொடுக்க வேண்டும். அவர், அங்கிருக்கும் பெரிய பாத்திரங்களிலிருந்து ஒரு வட்டாவில் அளவாய் எடுத்து தட்டில் வைப்பார். அவரிடம் டோக்கனை நீட்டியவுடன், "என்ன இன்னைக்கு வீட்டிலிருந்து கொண்டாரலையா.." என்றார் சிரித்துக்கொண்டே. என்னை அவருக்குத்தெரியும். நானும், ரமேஷ் பாலையாவும் அடிக்கடி போவதால் பார்க்கும்போதெல்லாம் சிரிப்பார். ரமேஷ் பாலையாதான் சொல்லுவான். "நான் உனக்கு பங்கு தர்றதுனால..அவர் கொஞ்சம் கூட வைக்கிறாருடா" என்று. 

லெமன் சாதத்தைத் தட்டில் அளவாக வைத்து, அந்த வெங்காய மசாலாவை ஒரு கரண்டியில் அள்ளி வைத்தார். தட்டை கையில் வாங்கிய நான், ஏதோ பெரிய வெற்றிக்கோப்பையை வாங்கியதுப் போல் கனவில் மிதந்தேன். வாங்கித்திரும்பவும், எங்கிருந்தோ இடம் பிடிக்கும் அவசரத்தில் வந்த ஒருவன் என் தட்டின் மீது மோதித்தொலைந்தான். அவ்வளவுதான். என் நீண்ட நாள் தட்டிலிருந்த கனவு தரையில் சிதறிப்போனது. நான் திரும்பி சர்வரைப்பார்க்க அவரும் விக்கித்துப்போனார். என்னையும், கல்லா மேசையினையும் மாறி, மாறிப்பார்த்தவர், விருட்டென்று, இன்னொரு தட்டில் கண்ணிமைக்கும் நேரத்தில் லெமன் சாதத்தையும், வெங்காய மசாலாவையும் வைத்து நீட்டினார். எனக்கு என்ன செய்வதெனத்தெரியவில்லை. "அட, வாங்கிட்டு நகருப்பா.." என்று கோபமானார். எனக்குப்புரியவில்லை. கொஞ்சம் நேரம் முன்னர் சிரித்தவர் ஏன் இப்படி விரட்டுகிறார் என்று. தட்டை வாங்கிக்கொண்டு ரமேஷ் பாலையாவை நோக்கி நகர்ந்தேன். துளியும் முன்பிருந்த சந்தோஷமில்லை.

நான் டேபிளில் உட்காரவும், பின்னால் படீரென ஒரு சத்தம். திரும்பிப் பார்க்கையில் அந்த சர்வர் காதில் கை வைத்து குனிந்திருந்தார். கல்லாவிலிருந்த அந்த பருத்த நபர், வேட்டியை மடித்தபடி, "ங்கொப்பன் வீட்டு சொத்து..வாரி வழங்கு.." என்றபடி அவர் கழுத்தில் கையை வைத்து ஒரு தள்ளு தள்ளினார். அவர் தடுமாறியபடியே வாசல் அருகே போய் நின்றார். ஒரே அமைதி மொத்த இடமும். டோக்கனுடன் நின்றவர்களுக்கு அந்த கல்லா நபரே தட்டில் வைத்து கொடுத்துக்கொண்டிருந்தார். நானும், ரமேஷ் பாலையாவும் சாப்பிடாமல் உட்கார்ந்திருந்தோம், நடப்பதைப் பார்த்துக்கொண்டு. எங்களைப்பார்த்தபடி, "இங்க டோக்கன் வாங்கி சாப்பிடுறவங்க மட்டும் சாப்பிடுங்க..மத்தவங்கள்லாம்..வெளியே போ.." என்றார் சத்தமாக. சில  பள்ளி மாணவர்கள் எழுந்து போக ஆரம்பித்தனர். திறந்து வைத்திருந்த டிபன் பாக்சை மூடியபடி, "நீ சாப்பிட்டு வா.." என்று எழுந்தான் ரமேஷ் பாலையா. எனக்கு அப்படி ஒரு ஆத்திரம். ஒரு லெமன் சாதம் நிம்மதியாய் சாப்பிட முடியவில்லையே என்ற ஆதங்கம் ஒரு புறம், நண்பனை வெளியே போய் சாப்பிட சொன்ன அவமானம் என்று எல்லாம் சேர்ந்து கொண்டது. விருட்டென  எழுந்தேன். டேபிளில் லெமன் சாதம் அப்படியே இருந்தது. டேபிளிலிருந்த மற்றவர்கள் எங்களைப்பார்த்தனர். ரமேஷ் பாலையா கையைப்பிடித்தபடி வெளியேறினேன். 

வெளியே நின்றிருந்த சர்வர் என்னைப்பார்த்து சைகையில் சாப்பிட்டியா எனக்கேட்டார். ஆம் என தலையை ஆட்டினேன். அந்த கணம் குபுக்கென்று கண்ணீர் முட்டியது. ஆனால், அவரைப்பார்த்து புன்னகைத்தேன். 


அதன் பின்னர், என் அம்மா எலுமிச்சை சாதம்  செய்யவா என கேட்கும்போதெல்லாம், "வேண்டாம்மா..இப்ப பிடிக்கல..!" என்று சொல்ல ஆரம்பித்தேன்.