Friday, May 22, 2020

கொரோனா கோலங்கள் - மாத்தி யோசி ..!

வீட்டின் வாயிலில் யாரோ அழைக்கும் குரல் கேட்டது. ஒரு நபர் ஐம்பது வயதிருக்கும். மாஸ்க்கை விலக்கியபடி, சினேகமாக, "சார், முடி வெட்டணுமா, கட்டிங், ஷேவிங்..!" என்றார். எனக்கு மிக புதியதாய் இருந்தது. "கொரோனாநால கடையெல்லாம் திறக்கக்கூடாது..மாசக்கணக்கா ஆச்சு..நான் இந்த எரியலாதான் கடை வச்சுருக்கன் ..நிறைய கஸ்டமருங்க இங்கதான் குடியிருக்காங்க..அதான் வீடு, வீடா விசாரிப்போம்னு.." என்று இழுத்தவர், "ரொம்ப சுத்தமா இருக்கோம் சார், டெட்டால் லாம் கொண்டு வந்துருக்கேன்" என்றார். அதற்குள், என் மாமா பேச்சு சத்தம் கேட்டு வந்தவர் அடையாளம் கண்டு கொண்டார். இருவரும் நலம் விசாரித்துக்கொண்டனர். என் மாமா அவர் கஸ்டமராம்.

வீட்டின் பின் பக்கம் ஒரு சேரைப் போட்டு, தரை ஓரமாக அவர் கொண்டு வந்திருந்த பையை விரித்து கத்திரி, சீப்பு, டெட்டால் என மினி பார்பர் ஷாப்பை உருவாக்கி விட்டார். என் மாமாவிற்கு பரம சந்தோசம். ஒரு வழியாய் இன்று முடி வெட்ட முடிந்ததென்று. கழுத்தை சுற்றி ஒரு துண்டை மாமாவிடமே வாங்கி கட்டி விட்டு ஆரம்பித்தார். கத்திரி சத்தம் கேட்டு, "எத்தனை நாளாச்சு இந்த சத்தம் கேட்டு..!" குனிந்தவாறே குதூகலித்தார் என் மாமா. "அண்ணே, உங்களுக்கே இப்படின்னா, எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க ..!" என்றார் உணர்ச்சிவசப்பட்டவராய். நான் இருவரையும் வேடிக்கை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தேன்.

என் மாமா, "எப்ப இருந்து வரிங்க..நா கூட போன் நம்பர் வாங்காம போய்ட்டோமேன்னு கவலைப்பட்டேன்..மூணு மாசமாச்சா..ஒரே எரிச்சல்..நல்ல வேளை  வந்தீங்க.." என்றவர் "ஆமா, உங்க மகன் இருப்பானே, அவன் எந்த ஏரியா பக்கம்  போயிருக்கான் " என்றார்.

"அவனால தான் ணே இந்த யோசனையை வந்த்துச்சு..ரெண்டு மாசமா வீட்டில உக்காந்து பார்த்தோம் , எதோ ரேஷன் அரிசி,  யார்யாரோ கொடுத்த அரிசி,  பலசரக்குன்னு சமைச்சாலும் ..மனசு ஒப்பலை..வேல வெட்டி ப்பாக்காம டெய்லி சோத்துல காய் வைக்க மனசே வரலன்னே..என் மவனை ஏதாவது காய் பழம் வாங்கியாந்து ட்ரை சைக்கிள் ல விப்போம்டா சொன்னேன் ..துரை கேக்கலை..மூணு வேலையும் தின்னுட்டு டிவி பார்த்துட்டே இருப்பான்னே..சொரணையே இல்லாம..எல்லாத்தயும் மூடுனாங்களே..இந்த டிவி யா மூடமா விட்டாங்களேண்ணே..என் மருமவ முழுகாம வேற இருக்கா..அவளும் சமைச்சு ஓஞ்சு போனான்னே.." துண்டை உதறிப்போட்டார். "அம்மா விளக்குமார கொடுங்க ..நானே கூட்டிபோட்டுர்றேன்..!" கப்பில் தண்ணீரையும் டெட்டாலையும் கலந்தார். 

"கேளுங்கண்ணே..சும்மா இருந்தாலும் பரவால்ல துரை. கடைய (டாஸ்மாக்) திறந்தானுகல..ஆரம்பிச்சுட்டண்ணே..ரெண்டு நாள் குடிச்சான், காசே இல்லையே ..பொண்டாட்டி கயித்தோடதான் இருக்கு..பொட்டுத் தங்கம் விடாம வித்து குடிச்சாச்சு..எங்க போவாரு..துரை..கடைசியில வீட்டில இருந்த அரிசியெல்லாம் கொண்டுபோய் விக்க ஆரம்பிச்சுட்டாண்ணே ..புண்ணியத்துக்கு யாரோ பை பைய கொடுத்தது..அதுவும் புள்ளத்தாச்சி வெயில்ல போய் வாங்கினு வருவா..யாரவது சொல்லுவாங்க..அங்கே யாரோ கொடுக்கிறாங்க..இங்க கொடுக்கிறாங்க ன்னு..நானும் கேப்பேன்..போதுமா, எதுக்கு இவ்வளவ சேர்த்து வைக்கன்னு, எத்தனை நாள் ஆவும்னு தெரியலையே மாமா..கடை திறந்து..வியவாராம் ஆரம்பிக்க..ன்னு சொல்லும்..அப்படி மவராசி சேர்த்து வச்ச அரிசி பைய கொண்டு போய் வித்து குடிக்க ஆரம்பிச்சுட்டாண்ணே..தங்கத்தை, காசை தெரியாம ஒளிச்சு வச்சது போய் இப்ப இந்த குடிகாரன்ட்ட இருந்து அரசிய கூடவா ஒளிச்சு வக்கிறதுன்னு என் மருமவ ஒரே அழுகைண்ணே.." இப்போது ஷேவிங்கை ஆரம்பிக்கப்போனார். ரேசரை டெட்டால் தண்ணியில் அலசியெடுத்தார். 

"நாங்களும்தான் குடிச்சோம்..இல்லேண்ணு சொல்லலண்ணே..ஆனா, இப்படி வரமுறை இல்லாம குடும்பத்த பரிதவிக்கவிட்டெல்லாம் குடிக்கலன்னே..அப்ப ஓயாம போனா கடையில இருக்கவானே திட்டுவாங்க..அதுவும் ஓனரல்லாம் வயசான ஆளா இருப்பாங்கே..திட்டுவாங்கே ..குடும்பத்தை பாருடா..பொண்டாட்டி வயிறெரிய விட்டிராத ..பெரிய பாவம்டா..அது..குடி..வேணாங்கில அளவா குடி..ன்னு தானே சொல்லுவாங்க..நமக்கே சங்கடமா இருக்கும்..அவங்க முகத்தைப்பார்க்கவே" துண்டால் ஒற்றி எடுத்தார் கன்னம், நாடியெல்லாம். 

"சண்ட போட்டு போன துரை ரெண்டு நாளா காண்கில, மருமவ திங்காம, அழுத்திட்டே இருக்கு..அதுக்கு ஒண்ணும் வாய்க்கு வாங்கி கொடுக்க கூட முடியலேண்ணே அதான் யோசனை பண்ணேன்..யார் போன் நம்பரும் தெரியாது..நம்மளும் யாருக்கும் கொடுக்கில ..ஆனா, இந்த ஏரியால தான் எல்லா பேரு வீடும் இருக்கும்..அவங்களுக்கும் தேவை இருக்கும்..வீடு வீடா கேப்போம்..போன் நம்பரும் கொடுத்து வைப்போம்..தேவைப்படுறவங்க கூப்பிடுவாங்கல்ல..ன்னுட்டு.காலையில கிளம்பி வந்துட்டேண்ணே .." என்றவர், சுத்தமாக பெருக்கி முடியை ஒரு பழைய நியூஸ் பேப்பரில் கட்டி எடுத்துக்கொண்டார். "சிலவங்க சங்கட படுவாங்க வெட்டின முடிய வீட்ல போட்டு போனா..அதான்"

என் மாமா கொடுத்த பணத்தைக் கும்பிட்டு வாங்கி கொண்டவரிடம் அடுத்து எப்ப வருவீங்க இந்தப்பக்கம் என்றேன். "நம்பர் நோட் பண்ணிக்கோங்க தம்பி..கூப்புடுங்க..வந்துர்றேன்..!" என்று சிரித்தார்.


No comments: