Wednesday, October 12, 2022

மாரப்பா

 வயது எண்பதைத் தொடும், நெடு, நெடுவென கறுத்த உடம்பு. நீண்ட தாடி, விரித்த தலை முடி. தீர்க்கமான கண்கள், நெற்றி மத்தியில் வட்ட குங்குமப் பொட்டு என தோற்றமே கம்பீரமாயிருக்கும். முழுக்கை வெள்ளை சட்டை, கதர் வேட்டி, செருப்பணிந்திராத, நகம் வெட்டப்படாத பாதங்கள்.


 “ஹாலு கேளீதீரா“ என கணீர் குரலில் அவர் கேட்பது உள்ளேயிருந்த  எனக்கு கேட்டது. என் மனைவி, அவர் தோற்றம் பார்த்து, மிரண்டவளாய் என்னை அழைத்தாள். அவளுக்கு கன்னடம் வேறு தெரியாது. அப்போதுதான் நினைவுக்கு வந்தது. பாலுக்கு செக்யூரிட்டியிடம் சொல்லியிருந்தேன். வீட்டை ஆனேக்கல் அருகே மாற்றியிருந்தோம். புறநகர் என்று கூட சொல்ல முடியாது. கிராம பகுதி இது. ஓலா, உபேர், சோமோட்டோ, ஸ்விக்கி என எதுவும் கிடையாது. இவ்வளவு ஏன் ..BSNL மட்டுமே தொடர்புக்கு என இருந்தது. பசும்பால் மட்டுமே கிடைக்கும். அதுவும் சொல்லி வைக்க வேண்டும் என வீட்டு ஓனர் சொல்லியிருந்தார்.


எல்லா புறமும் வயல்வெளி..சாமந்தி, கனகாம்பரம், ரோஜா,என பூக்கள் மற்றும் சௌ சௌ, முட்டைகோஸ், காலிபிளவர் என எங்கும்  பயிரிட்டிருந்தனர். நட்டநடுவே இந்த அபார்ட்மெண்ட் பெரிய காளான் போல முளைத்திருந்தது.

அவ்வளவாக ஆட்கள்  குடி வரவில்லை. எனக்கு, பொருளாதாரம் காரணமாய் முதலில் பிடித்திருந்தது. அதன் பின் அந்த பசுமை சூழல் மற்ற வசதிகளை மறக்க செய்தது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் தான் வரும். சொந்தமாய் வாகனம் இல்லையெனில் மிகுந்த சிரமம் தான். பக்கத்தில் கடை வசதிகள் ஏதும் இல்லை.


“ஆவுது..ஓந்த்து லிட்டர் டெய்லி பேக்கு ..பிலகே கொட்பிடி.. (தினமும் ஒரு லிட்டர் வேண்டும், காலையில் கொடுங்கள்) என்றேன். “தமிழா..” என்றவர் “காத்தால ஆகாது..சாய்ங்காலம்  அதுவும் அரை லிட்டர் கொடுக்கிறன் “ என்றார் கொச்சை தமிழில். அவ்வளவுதான். சொல்லிவிட்டு போய்விட்டார். சம்மதமா, விலை விபரம் எதுவும் சொல்லவில்லை. என் மனைவி, “என்னங்க..பெரிய திமிர் பிடிச்ச கிழவனா இருப்பான் போல..வேண்டாம்னு சொல்லுங்க..” என்றாள். நான் சிரித்துக்கொண்டே , “உன்னால காபி குடிக்காம இருக்க முடியுமா..? விடு..வேற யாராவது இருக்காங்களான்னு செக்யூரிட்டி ட்ட கேட்கிறேன்..” என்றேன்.


அன்று மாலையே வந்து நின்றார், ஒரு பித்தளை பால் கேனுடன். அரை லிட்டர் ஊற்றி கையில் பிடித்தபடி இருந்தார். என்ன சொல்வதென தெரியாமல் என் மனைவி ஒரு பாத்திரத்தை வேகமாய் எடுத்து நீட்டினாள். ஊற்றி விட்டு ஒன்றும் சொல்லாமல் போய் விட்டார். பாலைப்  பார்த்தவுடன் என் மனைவிக்கு அப்படி ஒரு திருப்தி. உடனே காய்ச்சி காபி போட ஆரம்பித்தாள். “தண்ணியே இல்லாம நல்லாருக்குங்க..பேசாம, இவரையே  ஊத்த சொல்லுங்க..தண்ணி ஊத்தி காச்சி ப்ரிட்ஜ் ல வச்சிக்கிறேன்..காலைல காபி போட்டுக்கலாம்..” என்றாள். 


“வேற யாரும் இல்லீங்க..இவர் ஒருத்தர் தான் இங்க பால் சப்ளை..அபார்ட்மெண்ட்ல எல்லாரும் வேல முடிச்சு வர்றப்ப பாக்கெட் பால் வாங்கினு வந்துருவாங்க..நல்ல மனுஷன்..கொஞ்சம் ரப்பான ஆளு..” என்றார் செக்யூரிட்டி.


தினமும் சரியாக வந்து ஊற்ற ஆரம்பித்தார். அவரும், என் மனைவியும் ஒரு வார்த்தை பேசிக் கொள்வதில்லை. ஒரு நாள், கொஞ்சம் சிந்தி விட, “உஷாரு..!” என முறைத்திருக்கிறார். இதை என் மனைவி சொல்கையில் எனக்கு சிரிப்பாய் வந்தது. எனக்கும் இப்படித்தான், கொஞ்சம் கூட உணவு வீணாவதை பொறுத்துக்கொள்ள முடியாது. எத்தனையோ முறை திட்டியிருக்கிறேன்.”உங்களுக்கு ஏத்த ஆளுதான்..என்னமோ அவரு காசு போன மாதிரி..முறைப்பு வேற..” என்றாள்.


அவரை அடிக்கடி கவனிக்க ஆரம்பித்தேன். காலையில் அபார்ட்மெண்ட் நுழைவாயில் அருகே சாலையில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலை சுத்தம் செய்து, பூக்கள் சாத்துவார். எந்த வாகனம் வந்தாலும் ஏறி கொள்வார் ஒரு முறை என்னுடன் வந்த பேருந்தில் நடத்துனர் அவரிடம் ஏதும் கேட்கவில்லை. மாலையில் அபார்ட்மெண்ட் பார்க்கில் உள்ள பெஞ்சில் தனியே அமர்ந்திருப்பார். அவரைப் பற்றி வேறேதும் தெரியவில்லை. இன்னும் அவ்வளவாக எனக்கு அங்கிருப்போர் பரிச்சியமாகவில்லை. பெரும்பாலும் வட இந்தியர்கள் தான் இருந்தனர். நமக்கோ இந்தி பேசுவது புரியும், பேச வராது. கன்னடம் சமாளிக்க முடியும்.



“இன்னியோட ஒரு திங்கள் ஆச்சு..நாளைக்கு காசு வாங்கிறேன் எழுநூறு அம்பது..” என்றவர், “கூட வேணுமா..பாலு? ஒரு ஆளு வீடு காலி பண்ணியாச்சு..!” என்று அவர் தமிழில் கேட்க என் மனைவி சரி என்றாள். அடுத்த நாள் ஒரு லிட்டராய் ஊற்றியவர், கூடவே ஒரு பித்தளை சொம்பை கொடுத்து “கன்னு ஈண்டுருக்கு..”என்று சீம்பாலை கொடுத்தவுடன் என் மனைவிக்கு அப்படியொரு சந்தோசம்.

“இன்னைக்குதான் அந்த தாத்தா சிரிச்சிருக்காருங்க..மாடு கன்னு ஈன்றுக்குன்னு சொல்றப்ப..! எவ்வளவு வருஷமாச்சு..சீம்பால் சாப்பிட்டு..” என மகிழ்ந்து போனாள்.


ஒரு நாள் லிப்ட் அருகே பாத்திரம் விழும் சத்தம் பெரிதாக கேட்க கதவை திறந்து பார்த்தேன். வராண்டாவில் சைக்கிள் ஓட்டிய சிறுவன் பால் பாத்திரத்தை தட்டி விட்டிருக்கிறான். பாத்திரம் கவிழ்ந்து பாலெல்லாம் கொட்டி போயிற்று. பக்கத்து வீட்டில் பால் கொடுத்துக் கொண்டிருந்தவர் வேகமாக ஓடிப்போய் பார்த்து கோபமாய் அந்த சிறுவனைப் பார்த்து கையை நீட்டி நாக்கைத் துருத்தி விட்டார். அவ்வளவுதான்! அந்த பையன் கத்த, அவன் அம்மா கதவை திறந்து கொண்டு வர சண்டை ஆரம்பமானது. அவள் இந்தியில் எப்படி என் பையனை அடிக்கலாம் என கத்த ஆரம்பித்தாள். அவர் அடிக்கவே இல்லை. அவள் போட்ட கூச்சலில் செக்யூரிட்டி, மற்ற வீட்டினர் வர களேபரமாகி போனது. அவரோ தரையில் ஓடிப்போன பாலை பார்த்தவாறு அமைதியாய் நின்றிருந்தார். அவளோ, “இந்த ஆளெல்லாம் உள்ளேயே விடக்கூடாது..பாக்கவே பயமா இருக்கு..சின்ன பிள்ளையெல்லாம் பயப்படுது ..இன்னைக்கு அடிக்க வேற வர்றான்..” என இந்தியில் கூப்பாடு போட்டு கொண்டிருந்தாள். செக்யூரிட்டி “ஏம்மா..அவருக்கு எவ்வளவோ லாஸ் ..அத்தனை பாலும் கொட்டிருச்சு..” என சொல்ல, அப்போதுதான் அவள் கணவன் வெளியே வந்தான். “நான் ஆபீஸ் ஜூம் மீட்டிங் ல இருந்தேன்..சத்தம் கேட்டுச்சு..ரெண்டு பக்கமும் தப்பு இருக்கு..விட்ரலாம்..!” என்றான் சாதாரணமாய். அவன் மனைவியோ, “பிள்ளையை கொன்றுப்பான் அந்தாளு..நல்ல வேளை நான் இன்னிக்கு வீட்ல இருந்தேன்..நான் பாக்கலேன்னா..என் பிள்ளையை  என்ன பண்ணிருப்பானோ.. இந்தாளு இனி உள்ளே வராம இருக்க நான் என்ன பண்றேன் பாரு ” என்றபடி பிள்ளையை வீட்டிற்குள் அழைத்து போனாள். பின்னாலேயே போன கணவன் வெளியே வந்து, அவரிடம் ஒரு ஐநூறு ரூபாய் தாளை நீட்டினான் பெருந்தன்மையுடன். “கவலைப் படாதே..இத வச்சுக்கோ..!” என்றான் சிரித்தபடி.


“ராத்திரி உன் பையன் பால் கேப்பான்..இத கொடு..!” என்றபடி அந்த நோட்டை வாங்காமல் வெறும் பாத்திரத்துடன் கிளம்பினார். “மேட் மேன் ..!” என்ற படி வீட்டிற்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான். செக்யூரிட்டி யும், “ஹவுஸ் கீப்பிங் கார்த்தால வந்து தான் இதை கிளீன் பண்ணனும்..!” என்றபடி செல்ல, நானும், என் மனைவியும் கொட்டிய பாலை பார்த்தபடி விக்கித்து நின்றோம்.


அடுத்த நாள் என் ஹவுஸ் ஓனர் ”வரும் ஞாயிறு அஸோசியேஷன் மீட்டிங் இருக்கிறது. வருகிறேன். முடிந்தால் நீங்களும் என்னுடன் கலந்து கொள்ளவும்” என வாட்ஸ் அப் தகவல் அனுப்பியிருந்தார்.


ஞாயிறு மாலை ஐந்து மணியிருக்கும் . என் ஹவுஸ் ஓனர், தான் வந்து விட்டதாகவும் மீட்டிங் ஹாலில் இருப்பதாகவும் தகவல் அனுப்பியிருந்தார். முப்பது கி.மீ தொலைவில் வசிக்கிறார். ஏதாவது முக்கியம் என்றால் மட்டும் வருவார். வந்தால் வீட்டிற்கு வருவது, பேசுவது கிடையாது. கீழே பார்க்கிங்கில் நிற்பார். ஏதும் தேவையெனில் போனில் பேசுவார். இல்லையெனில் தகவல் மட்டும் தான். நான் கூட அழைப்பதுண்டு. வீட்டிற்கு வந்து காபி சாப்பிட்டு போகலாமே என்று. அன்புடன் மறுத்துவிடுவார். 


மீட்டிங் ஹாலில் நுழைந்து அவரை தேடினேன். அபார்ட்மெண்ட் மீட்டிங் ஹால், நூறு பேர் அமரலாம். பெரும்பாலும் பிறந்த நாள் விழாக்கள் நடைபெறும். அன்று, கூட்டம் மூன்று, நான்கு பிரிவாய் குழுமியிருந்தது. வட இந்தியர்,  மலையாளிகள், தெலுங்கு, கன்னடர் என பேசிக்கொண்டிருந்தனர். முன் வரிசையில் அமர்ந்திருந்த என் வீட்டு ஓனர் கையை காட்டி அழைத்தார். அருகில் அமர்ந்து கொண்டேன். அவர் சொல்லித்தான் தெரிந்தது அன்றைய அஜெண்டா வே ‘பால் காரர் பிரச்சனை தான்’ என்று.


அஸோஸியேஷன் பிரசிடெண்ட், செக்ரெட்டரி சம்பிரதாய பேச்சு முடிக்கவும், அந்த வட இந்திய பெண்மணி, “ஓனர், குடியிருப்போர் தவிர யாரும் அபார்ட்மெண்ட் உள்ளே அனுமதிக்கப்பட கூடாது. வேலைக்காரர்கள் வரலாம். பால் காரர் கேட் அருகே மட்டும் தான் இருக்க வேண்டும். வாங்குவோர் அவரிடம் போய் வாங்க வேண்டும். இட்ஸ் எ  பிக் திரேட் டு லேடீஸ் அண்ட் சில்ட்ரன்..”  என நடந்த சம்பவத்தை ஹிந்தி பட ரீதியில் விளக்க ஆரம்பித்தார்.


அவருக்கு மறுப்பாய் சிலர், வராண்டாவில் சைக்கிள் ஓட்டுவது தவறு. எட்டாவது மாடியில் இருந்தெல்லாம் கேட் வரை போக முடியாது. என வாதிட்டனர்.


அந்த வட இந்திய பெண்மணி, எத்தனை பேர் அவருக்கு ஆதரவு ‘கையைத் தூக்குங்கள்’ என அவராகவே கூற பெரும்பான்மை வட இந்தியர்கள் கையை தூக்கினர். உடனே கைதட்டல் வேறு. திகைத்த செக்ரெட்டரி, அப்படியெல்லாம் நீங்களாகவே முடிவு எடுக்க முடியாது என கூற ஒரே கூச்சல். மற்றவர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. பெரும்பாலும் வாடகைக்கு குடியிருப்போர். செக்ரெட்டரி என் வீட்டு ஓனரை பார்த்து என்ன செய்வது என கையை விரித்தார்.


என் வீட்டு ஓனர் எழுந்து, “கீப் சைலென்ஸ் ..” என இரண்டு, மூன்று முறை கூறிப்பார்த்தார். கடைசியில் கர்ஜனையாக, “அரே ச்சுப்..” என ஹிந்தியில் முழங்கினார். கூட்டம் அமைதியானது. “ஓனர் வரலாம், பால் காரர் வர கூடாதெனில்..அவர் கண்டிப்பாக வரலாம். அவர்தான் இந்த மொத்த அபார்ட்மெண்ட் இடத்தின் சொந்தக்காரர். அவர் விற்ற இடத்தில் தான் இந்த அபார்ட்மெண்ட்டே கட்டப்பட்டுள்ளது. அவருக்கு மட்டும் இங்கே ஆறு பிளாட்டுகள் உள்ளது.” என்று கூற நான் உட்பட அனைவரும் திகைத்துப் போனோம். “எப்படி உங்களால் அவரை மறக்க முடிந்தது..கொஞ்சம் கூட நன்றியில்லாமல்.. அவர் மட்டும் கொரோனா காலத்தில் உதவி இருக்காவிடில் என்ன செய்திருப்போம்..அவர் நமக்கு கொடுத்த காய்கறியும், பாலும் எவ்வளவு தெரியுமா..ஒரு பைசா கூட அதற்கெல்லாம் அவர் கேட்கவில்லை.. கொஞ்சம் நினைத்து பாருங்கள் கொரோனா சமயத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு எங்கிருந்து பால் கொடுத்தீர்கள் என்று.. புதிதாய் குடி வந்தவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. வராண்டாவில் சைக்கிள் ஓட்டக்கூடாது என்பது உங்கள் பிள்ளை பாதுகாப்பிற்கு வைத்த அஸோஸியேஷன் விதி. அன்றைக்கு தெரியாமல் அசம்பாவிதம்  நடந்து விட்டது..பால் கொட்டியவுடன் வயதானவர், உன் பிள்ளைக்கு தாத்தா மாதிரி கோபமாய் கண்டித்துள்ளார். அவருக்கு எத்தனை கொள்ளு பேரக்குழந்தைகள் தெரியுமா..? 

..அவர் பால் விற்றுத்தான் பிழைக்க வேண்டும் என்றில்லை..அவர் நமக்கு நல்ல பால், பூச்சி மருந்தில்லா காய்கறி கிடைக்க உதவுகிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்..” என இந்தி, ஆங்கிலம், கன்னடம் என அனைத்து மொழியும் கலந்து  பொரிந்தார். அவர் வரக்கூடாதென சொல்ல யாருக்கும் உரிமையில்லை..உங்களுக்கு வேண்டாம் என்றால் அவரிடம் பால் வாங்க வேண்டாம்..!” என்று சொல்லி முடிக்க, அந்த வட இந்திய பெண்மணி மீட்டிங் ஹாலை விட்டு வெளியேறினார். அவர் பின்னாலேயே ஒவ்வொரு வட இந்தியரும் ஆண், பெண் என கிளம்பினர். அவள் கணவன், என் ஓனரிடம் வந்து “சாரி, ஐ வில் மேக் ஹேர் அண்டர்ஸ்டாண்ட் ..ஐ நோ அபௌட் ஹிம்..” என்க, என் ஓனர் போதும் என்பது போல் சைகை செய்து செக்ரட்டரியுடன் பேச சென்றார்.  


நான் மீட்டிங் ஹாலின் வெளியே காத்திருந்தேன். “நீங்கள் வீட்டில் இருங்கள்..காத்திருக்க வேண்டாம்..நான் வீட்டிற்க்கு வருகிறேன்” என தகவல் வந்தது. சிரித்துக்கொண்டே வீட்டிற்க்கு சென்றேன். என் மனைவியிடம் ஓனர் வரார்..காபி போட்டு வை என்றேன். “மெயின்டெனன்ஸ் ஏதும் கூட்டுறாங்களா..மீட்டிங் போயிட்டு வந்தீங்க..ஓனர் வேற வீட்டுக்கு வரார்க்கிறீங்க..” என்றபடி பிரிட்ஜ் லிருந்து பால் பாத்திரத்தை எடுத்தாள். நான் இன்னும் ஓனர் பால் காரரை பற்றி பேசிய பேச்சிலிருந்து மீளவில்லை. 


“சாரி டு பாதர் யூ” என்று சிரித்தபடி உள்ளே வந்தார். சோபாவில் உட்கார்ந்து ஒரு சிறிய பையை நீட்டினார். திருப்பதி லட்டு என வாசனையே சொன்னது. “திருப்பதி போயிருந்தோம்..இன்னைக்கு இங்க வர வேண்டியிருக்கு..அப்படியே உங்களுக்கு  கொடுக்கலாம்னு எடுத்துட்டு வந்தேன். இல்லாட்டி டிஸ்டர்ப் பண்ணியிருக்க மாட்டேன் என்று சிரித்தார். அதற்குள் என் மனைவி காபியை நீட்டினாள். “எதுக்கும்மா இதெல்லாம்.. ஆனா, இப்ப இது தேவை..ரொம்ப தலை சூடாயிடுச்சு..மீட்டிங்க்ல ..!” என்று சிரித்தபடி வாங்கி கொண்டார்.


“என்னால நம்பவே முடியல..நீங்க நம்ம பால் காரரை பற்றி சொன்னது..” என்றேன். காபி கப்பை கீழே வைத்தபடி, “அவர் பெரிய ஆளு சார்..அவருக்கு எவ்வளவு ஜமீன் (நிலம்) இருக்கு தெரியுமா..இந்த இடத்தை அவரு பசங்க அவரு இஷ்டம் இல்லாமலே விக்க வச்சாங்க.. விவசாய நிலத்தை எல்லாரும் வித்துட்டா..சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க..அப்படின்னு விக்காம இருந்தாரு..பெரிய கலாட்டா குடும்பத்துல ஆகி..கடைசியில வித்தாரு..அவரு நாலு பசங்களுக்கும் நாலு பிளாட் இருக்குது. மூணு பசங்க இங்கதான் இருக்காங்க..யார் வீட்டிலேயும் அவர் இல்ல..நம்ம பார்க் பெஞ்சில படுத்துக்குவாரு..மழை பெஞ்சா கார் பார்கிங்கில படுத்துக்குவாரு..


அவரு சாப்பிடுவாரா இல்லையான்னு கூட தெரியாது..கொரோனா டயத்துல..இங்க ஏதும் கிடைக்கல..எந்த வண்டியும் வரல..பாவம் அபார்ட்மெண்ட்ல ரொம்ப கஷ்டப்பட்டாங்க..இவருதான் டெய்லி இந்த பக்கம் உள்ள நிலத்துல இருந்து..காய், பழம் னு மாட்டு வண்டியில கொண்டுவந்து..அபார்ட்மெண்ட் நடுவில கொட்டிருவாரு..யாருக்கு என்ன வேணுமோ எடுத்துக்கிடும்னு ..ஒரு பைசா வாங்கல..சின்ன புள்ளைங்கலாம் பாலுக்கு அப்ப ரொம்ப கஷ்டப்பட்டாங்க..அப்பத்தான் மாடுக வாங்கி பால் வேணும்கிறவங்களுக்கு சும்மாவே கொடுத்தாரு..கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் சார்.. இப்பவும் நல்ல பால் பிள்ளைக குடிக்கணும்னு தான் கம்மி விலைக்கு கொடுக்கிறாரு..” என்று கவலையுடன் சொன்னார்.


கிளம்பியவர், “காபி சக்கத் (அருமை)..தேங்க்ஸ் மா..” என்றார் என் மனைவிடம். “..அவர்கிட்ட வாங்கின பால்தான்..நல்ல பசும்பால்..பாக்கெட் பால்ல காபி குடிச்சிட்டு இவர் பால்ல காபி போட்டு குடிச்சா நல்ல வித்தியாசம் தெரியும்.” என்றாள். அவர், “ஓ ..நீங்க அவர்கிட்டதான் பால் வாங்குறீங்களா..” என சந்தோஷமாய் விடை பெற்றார்.


மறுநாள், பால்காரர் சீம்பால் கொடுத்ததற்கு கைமாறாய் என் மனைவி திருப்பதி லட்டு கொடுத்திருக்கிறாள். வாங்கியவர் எப்போது போனீர்கள் என கேட்டதற்கு நாங்கள் போகவில்லை. ஹவுஸ் ஓனர் கொடுத்தார் என்றிருக்கிறாள். வாங்கியவர், திருப்பி கொடுத்துவிட்டு போயிருக்கிறார். இவளுக்கு என்னவோ போலாகிவிட்டது. நான் வீட்டிற்கு வந்தவுடன் இதை சொல்லி, “நம்ம ஓனருக்கும் இவருக்கும் ஏதோ பிரச்னையிருக்கும் போலங்க..!” என்றாள். நான், “நம்ம ஓனர் நல்ல மனுஷன் மாதிரிதான் தெரியிறாரு.. ஏன் வாங்கிக்கலைன்னு தெரியல..அவர்கிட்ட கேக்கலாமா..வேணாமான்னு கூட தெரியல..” என்றேன்.



அன்றிரவே, “ஹோப் மாரப்பா  இஸ்யு சால்வ்ட். பீஸ் இன் அபார்ட்மெண்ட் :) 

Hope Marappa issue is solved. Peace in apartment 😃”

என வழக்கம்போல் வாட்ஸ் அப் தகவல் அனுப்பியிருந்தார் ஓனர். நான் ஹூ இஸ் மாரப்பா..ஆல் பைன் இன் அபார்ட்மெண்ட் என அனுப்பினேன்.

Who is Marappa? 🤔All fine in apartment

அவர் பெரிய சிரித்த முகத்துடன் உங்கள் பால்காரர்! என்றார். 

Your milkman 😆”

எனக்கு அப்போதுதான் அவர் பெயரே தெரிந்தது. வெட்கமாய் போனது. இத்தனை நாள் அவர் பெயர் கூட கேட்கவே இல்லையே என்று.

இதையே வாய்ப்பாக நான், “ஒன்லி மை வைப் இஸ் பிட் ஓரிட் “ என்க அவர், “வாட் ஹப்பெண்ட் “ என்றார்.

Only my wife is bit worried..

what happened..?”


“ஹி டினைட் தி பிரசாத் (யுவர் திருப்பதி லட்டு) வென் ஷீ கேவ்”..கொஞ்சம் இடைவெளி விட்டு “ஆப்டர் இயர்ட் இட் ஸ் பிரம் யூ !” (ஹி என்குயர்ட் வெதர் வி வென்ட். ஷீ டோல்ட் அவர் ஓனர் வென்ட் ).

He denied the prasad (your thiruppathi laddoo) when she gave

after heard it’s from you (he inquired whether we went. she told our owner went and he gave


பதில் ஏதும் இல்லை. நான், “எனி இஸ்ஸுஸ் பெட்வீன் யூ அண்ட் மிஸ்டர் மாரப்பா” என கவலை தோய்ந்த முக செய்தி அனுப்பினேன்.

any issues between you and mr marappa? 😞”


அதற்கும் பதிலே இல்லை. ஆனால், செய்தி படித்த ப்ளூ டிக் தோன்றியது. போனை வைத்து விட்டு படுக்க ஆயத்தமானேன். “நம்ம பால் கார பெரியவர் பெயர் மாராப்பா வாம் !” என்றேன் என் மனைவியிடம். ஆச்சர்யத்துடன் கேட்டவளுக்கு “நம்ம ஓனர் தான் சொன்னாரு..” என்றேன். “மாராப்பா..” இருமுறை சொல்லி பார்த்தவள், “அவர் தம்பி யாரு கட்டப்பாவா.. !” என சிரித்தபடி படுத்துவிட்டாள்.


இரவு பாத்ரூம் போகையில் ஒரு முறை போன் பார்ப்பது வழக்கமாயிருந்தது. 


ஓனரிடமிருந்து ரிப்ளை,


 “யெஸ் ..இஸ்ஸு இஸ் வி ஆர் பாதர் அண்ட் சன்” என அழுகை முகத்துடன் இருந்தது.

yes..issue is we are father and son 😭”


-----------------

No comments: