Sunday, December 23, 2018

எங்கே போனார்கள் இந்த ‘வாட்ச்சு மேன்’ கள்..?


எங்கே போனார்கள் இந்த ‘வாட்ச்சு மேன்’ கள்..?

இப்போதுதான் எங்குப்பார்த்தாலும் ‘செக்யூரிட்டி’கள். ஏ டி எம், ஸ்கூல் வாசல், ஆபிஸ் நுழைவாயில் என எங்கும் கலர், கலராய் யூனிபார்ம்களில் நின்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் முகம் எப்போதும் நினைவில் வருவதில்லை. காரணம், யாரும் எதுவும் பேசுவது கிடையாது. கேட்ட கேள்விக்குப்பதில் அவ்வளவுதான். ஒரு முறை, ஒரு செக்யூரிட்டியிடம் கேட்டே விட்டேன். அவர் சொன்னார், அவர்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் அப்படியாம். தேவையில்லாத எதுவும் பேசக்கூடாதாம். என் பையனிடம் கேட்டேன், அவன் ஸ்கூல் செக்யூரிட்டி பெயர் தெரியுமா என்று. அவன் என்னைப்பார்த்த விதத்தை விட, என் மனைவி திட்டியதுதான் நினைவிலிருக்கிறது. என்ன கேள்வி கேட்கணும்னு கூட உங்கப்பாக்கு தெரியாதுடா..! என ஏதோ கேட்கக்கூடாத ஒன்றைக்கேட்டதுப்போல் கூறினாள். அடுத்த நாளே, ஆபிஸில் டெஸ்ட் செய்துப்பார்த்தேன், யாருக்காவது செக்யூரிட்டிகளின் பெயர் தெரிகிறதா என்று. தேவையா இது? என நொந்துக்கொண்டேன்!

ஆறுமுகம், சண்முகம், சேவியர், குணாளன், அகோரம், அழகர், பெருமாள், சுந்தரம்..எத்தனை பெயர்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. பள்ளி, கல்லூரி வாட்ச்மேன் கள்! காக்கி யூனிபார்மில் கம்பீரமாய் ஆனால், எத்தனை கனிவோடு இருப்பார்கள். அவர்களை அவ்வப்போது நினைத்துக்கொள்வேன். ஒரு நாள் ஸ்கூல் போகவில்லையென்றால், மறு நாள், என்னப்பா ஆச்சு? ஆளே காணோம்..! என்பார்கள். என்னமோ ரொம்ப நாள் ஆப்ஸெண்ட் மாதிரி. அப்பாவோ, அண்ணனோ சைக்கிளில் இறக்கிவிடும்போது, விறைப்பாக நிற்பார்கள். எப்போதும் கேட் வாசலிலேயே நிற்பார்கள். எப்போதாவது, கிரவுண்டில் விளையாடும்போது பார்ப்போம், மரத்தடியில் உட்கார்ந்து தூக்குசட்டியிலிருந்து சாப்பிடுவார்கள். அவர்கள் பெயருடன் அண்ணே (மதுரை) அண்ணாச்சி (இராஜபாளையம்) அண்ணா (ஈரோடு) என சேர்த்துக்கூப்பிடுவோம். அவர்களும் அத்தனை ஸ்டூடண்ஸ் பெயரையும் நினைவில் வைத்திருப்பார்கள். ஆச்சரியமாயிருக்கும்.  

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ஏதோ வாதத்தினால் நடக்க சிரமப்பட்டேன். தினசரி, அப்பாவோ, அண்ணனோ ஸ்கூலில் விட, திரும்ப சைக்கிளில் கூப்பிடவுமாயிருந்தனர். என்னால், அப்போது விளையாடவும் முடியாது, கிரவுண்டில் எல்லாரும் பி டி பீரியடில் விளையாடும்போது, நான் மட்டும் வாட்ச் மேன் அருகில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருபேன். நான் மட்டும் தனியாய் விளையாட முடியாமலிருப்பதை நினைத்து அவரிடம் சொல்லுவேன். சரியாயிரும்யா..கவலைப்படாதே என்பார். அவர் சாப்பிடும்போது, தொட்டுக்கொள்ள தட்டை ( நிப்பட்) வைத்துக்கொள்வார். எனக்கு ஒரு முறை சாப்பிடுயா எனக்கொடுக்க எனக்குப்பிடித்துப்போனது (இன்ன வரை). அதிலிருந்து, பி டி பீரியடின்போது நான் போவதும் எனக்கும் சேர்த்து அவர் வாங்கி வருவதும் வாடிக்கையாகிப்போனது. சமயங்களில், என் அண்ணன் சைக்கிளில் இறக்கி விடும்போது, அவனுக்கு பாலிடெக்னிக் போக லேட்டாயிருச்சுன்னு திட்டியபடி விடுவான்.  திட்டாதய்யா..சின்ன புள்ள..என்பார்.

அவரிடம் தட்டை வாங்கி சாப்பிடும் விஷயம் ‘போட்டுக்கொடுக்கும்’ கிளாஸ்மேட் மூலம் வீட்டிற்க்கு தெரிய வந்தது. அவ்வளவுதான். அடுத்த நாள், என் அண்ணன் விடும்போது அவரிடம் ஐந்து ரூபாய் கொடுத்து, அவன் கேட்டாலும் அதெல்லாம் வாங்கிக்கொடுக்காதீங்க..என்றான். அவர், வாங்க மறுத்து விட்டார். அவர் கெட்ட நேரம், அப்போதுப்பார்த்து ஹெச் எம் வர பாவம் அவர். திட்டித்தள்ளினார். அதற்குப்பின், பி டி பீரியடில், டிராயிங் கிளாஸோ, லைப்ரரியோ கதியாய்ப்போனது. ஸ்கூல் போகும்போதும், வரும்போதும் என்னால்தான் அவரைப்பார்க்க முடியவில்லை. தலையை குனிந்துக்கொள்வேன்.

ஆறாம் வகுப்பு வேறு ஸ்கூல். ஒரு முறை, நானும், அம்மாவும் கடைத்தெருவுக்குப் போயிருந்தோம். அங்கே என்னைப்பார்த்துவிட்டார். எனக்குத்தான் அவரை அடையாளம் தெரியவில்லை கலர் சட்டையும், வேட்டியிலும் இருந்தவரை. மிக அனுசரனையாய் கால்வலிப்பற்றி விசாரித்தார். நான் தான் அம்மாவிடம் அவர் யார் என்று சொன்னேன். எனக்கு என்னமோ சகஜமாய் பேச வரவில்லை அவரிடம், அம்மாவின் முன்னிலையில். பேசாமல் சிரித்துக்கொண்டே நின்றிருந்தேன். அம்மாதான் விளக்கிக்கொண்டிருந்தார் மருத்துவ சிகிச்சைப்பற்றி. கிளம்ப எத்தனிக்கையில், ஒரு நிமிஷம்மா..என்றவர் பக்கத்திலிருந்த டீக்கடைக்குப்போய் ஓடி வந்தார். ஒரு நியூஸ் பேப்பர் பொட்டலத்தை நீட்டினார். தம்பிக்கு இஷ்டங்க..! என்றார். நான் என் அம்மாவைப்பார்க்க, வாங்கிக்கப்பா, ஆசையாய் வாங்கிக்கொடுக்கிறாங்கள..என்றார். ஆவலாய் வாங்கிக்கொண்டேன். வர்ரேன்ம்மா என்றவர் என்னைப்பார்த்து தலையாட்டியபடி சைக்கிள் ஸ்டாண்டை எடுத்தார். ஆர்வம் மேலிட அங்கேயே பொட்டலத்தைப்பிரித்துப்பார்த்தேன். நான்கு தட்டைகள்! திரும்பிப்பார்த்தேன். சைக்கிள் ஓட்டிக்கொண்டே என்னைத்திரும்பிப்பார்த்து கையசைத்து சென்றார். இன்னமும் தட்டை என்றால் கொள்ளைப்பிரியம். அது அவரின் நினைவினாலோ என்னவோ.
அதன்பின், எத்தனையோ பள்ளிக்கூடம், கல்லூரி, அலுவலகம் என மாறி, மாறி வந்தாலும் ஒவ்வொரு இடத்திலும் வாட்ச்மேன்கள் ஒவ்வொரு விதம். ஆனால், எல்லா இடத்திலும் அவர்கள் பெயரும் தெரிந்திருந்தது, அவர்களைப்பற்றியும் தெரிந்திருந்தது.

நான் கடைசியாய் நினைவில் வைத்திருப்பது என் பையனின் ஸ்கூல் வாட்ச்மேன் மணி தான். எனக்குத்தெரிந்து அவர்தான் அந்த ஸ்கூலின் கடைசி வாட்ச்மேன். அதற்குப்பின், எல்லாம் செக்யூரிட்டிகள்தான். அதுவும் ஏஜென்சி செக்யூரிட்டிகள். மணியை மறக்க முடியாது. என் பையன் கே ஜி படிக்கும்போது வாட்டர் பாட்டிலை மறந்து விட்டான். அவ்வளவுதான் என் மனைவி குதி, குதியென குதித்தாள். வேன் போய்விட்டது. நான் பின்னாலேயே ஸ்கூட்டரில் போக, கேட்டைப்பூட்டி விட்டார்கள். அது ஒரு பெரிய பள்ளிக்கூடம். வாட்ச்மேன் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். தண்ணில்லாம் கிளாஸ் உள்ளேயே இருக்கு சார், நீங்க போங்க என்றார். இல்லைங்க, கண்ட தண்ணீ குடிச்சா சளி பிடிச்சுக்கும் என்று தயங்கினேன். இல்லை சார், அலோ பண்ணா என்னைத்திட்டுவாங்க என்று மறுத்து விட்டார். சரி விடு, எல்லாத்தண்ணீயும் குடிச்சு பழகட்டும் என எனக்கு நானே சமாதானம் சொன்னாலும், அந்த வாட்ச்மேனை கருவியபடியே வந்தேன்.

சாயங்காலம் ஸ்கூல் திரும்பிய பையனிடம், மினரல் வாட்டர் பாட்டில் இருந்தது. வாட்ச்மேன் மணி அங்கிள் பிரெக் பீரியடில் வந்து அப்பா கொடுத்தார் என்று கொடுத்துவிட்டுப்போனார் என்றான். என் மனைவி, உங்களை விட்டுட்டுப்போன வாட்டர் பாட்டிலைக்கொடுக்க சொன்னா, புது வாட்டர் பாட்டிலா வாங்கிக்கொடுப்பீங்க? என திட்டினாள்.
அடுத்த நாள் வாட்ச் மேனுக்கு தேங்ஸ் சொல்லி பணம் கொடுத்தேன் வாட்டர் பாட்டிலுக்கு. வாங்க மறுத்து விட்டார். அதற்கப்புறம் சில வருடங்களில் அவரைக்காணவில்லை. ஒரே செக்யூரிட்டி மயம்தான்.

சுமார் பத்தாண்டுகள் கழித்து சமீபத்தில் அவரை அடையாளம் கண்டேன். நான் புதிதாய் குடிபோன அபார்ட்மெண்டில். ஹவுஸ் ஓனர் வாட்டர் கேன் சப்ளையர் நம்பர் கொடுத்திருந்தார். போன் பண்ணி அரை மணியில் காலிங் பெல் அடித்தது.

மணிதான நீங்க..? 
ஆமா சார் என்றார் வாட்டர் கேனை தோளிலிருந்து இறக்கியபடி.

1 comment:

A sankar said...

ஒரு சின்ன award movie பார்த்தது போல் இருந்தது சிவா .really superb.��������.